அவுஸ்திரேலியா படைப்பாளிகளின் கதைத் தொகுதி 'தைலம்'! புகலிட வாழ்வியலை சித்திரிக்கும் கதைகள்! - சியாமளா யோகேஸ்வரன் - குவின்ஸ்லாந்து -
அவுஸ்திரேலியச் சூழலையும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் மையப்படுத்தி மெல்பனில் வதியும் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின் தெரிவிலிருந்து வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே ‘தைலம்’ நூல். யூகலிப்டஸ் மரங்கள் அவுஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் மரமாகவும், இந்நாட்டுக்கே பிரத்தியேகமான குவாலா கரடிகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றது. அந்த மரங்களில் இருந்து சாரமாகப் பெறப்படும் தைலத்தைப் போன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு தைலம் என்று பெயரிடப்பட்டமை சாலப் பொருத்தமாகவே காணப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் இழப்பையும், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தம் அடையாளத்தைக் கட்டிக் காக்க எண்ணும் தமிழ் மக்களின் மனப்பாங்கையும், புகுந்த இடத்துக்கேற்ப முற்றிலுமாய் தம்மைத் தொலைக்கத் தயாராக உள்ளவர்களின் மனப்பாங்கையும், நவீன தொழில் நுட்பத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் தமது எழுத்துக்களில் எழுத்தாளர்கள் அற்புதமாக வடித்திருக்கின்றார்கள் என்றேதான் கூற வேண்டும்.
முதலாவது கதை தென் துருவத்தேவதை கன்பரா யோகன் எழுதியது. புகலிடம் தேடி வந்து தனிமையை மட்டுமே அறிந்திருந்த கதிர் என்கின்ற இளைஞன், தந்தையார் தென்துருவத்தில் வேலை செய்த போது பிறந்த ஒரு வெள்ளையினப் பெண்ணின் உருவத்தில் தேவதையைக் காண்கின்றான். கதையோடு சோப்புத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையைக் கற்பனைக்கு கொண்டு வந்திருந்த விதமும் அருமை.
சரளமாக ஆங்கிலம் பேச முடியாத தயக்கத்துடன், தானாக வலிந்து சென்று நட்பு கொள்ள முடியாத ஒதுக்கமும் சேர்ந்து கொள்ள ஒடுங்கி வாழப் பழகும் ஒருவனுக்கு வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொடுக்கின்றாள் ஒரு தேவதை. உயரத்தில் ஏறி நின்று உலக இயற்கையை ஆராதிக்கவும், தன் கூட்டில் இருந்து மெல்ல வெளியே வந்து உலகோடு ஒன்றவும் கற்றுக் கொடுத்தவள், சொல்ல முடியாத சோகத்தைத் தனக்குள்ளே சுமந்து கொண்டிருக்கின்றாள். வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொடுத்த அவளுக்குள் பெரும் சோகமொன்று ஒளிந்திருந்தது என்பதை அவளது மரணத்தின் பின்தான் தெரிந்து கொள்கின்றான் கதிர்.