நவம்பர் மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடா எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்களின் மூன்று நூல்கள் கனடா, ரெறன்ரோவில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றன. ரொறன்ரோ கிங்ஸ்டன் வீதியில் உள்ள ஸ்காபரோ விலேஜ் கொம்யூனிட்டி மண்டபத்தில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி, அகவணக்ம், முதற்குடிமக்களுக்கு நன்றி சொல்லல் போன்ற நிகழ்வுகள் முதலில் இடம் பெற்றன. கனடா தேடகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திரு. பா.அ. ஜயகரன் அவர்கள் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார்.
தலைவர் உரையில் எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்கள் தமிழ் இலக்கியத் துறையில் படைத்த சாதனைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், நண்பர் வ.ந. கிரிதரன் அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்ல பழகுவதற்குச் சிறந்த நண்பர் என்பதையும் மேலும் குறிப்பிட்டார். தலைவர் உரையைத் தொடர்ந்து நிகழ்வில் ‘வ.ந.கிரிதரன் கட்டுரைகள்’ பற்றி எழுத்தாளர் திரு. அருண்மொழிவர்மன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 166 பக்கங்களைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஜீவநதி வெளியீடாக வந்திருக்கின்றது.
தொடர்ந்து 23 அத்தியாயங்களைக் கொண்ட ‘நவீன விக்கிரமாதித்தன்’ என்ற நாவல் பற்றி சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான திரு. சிவா முருகுப்பிள்ளை அவர்கள் உரையாற்றினார்கள். வதிலைபிரபாவால் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டு, ஓவியா பதிப்பக வெளியீடாக வந்த இந்தப்புதினம் 152 பக்கங்களைக் கொண்டது.
‘ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்’ கவிதைத்தொகுப்பு பற்றி எழுத்தாளர் திரு. என்.கே.மகாலிங்கம் அவர்கள் உரையாற்ற இருந்தாலும் அவரது உடல்நிலை காரணமாக அவரால் நிகழ்விற்குச் சமூகமளிக்க முடியவில்லை. அவர் எழுதி அனுப்பிய உரையை நிகழ்வில் தலைமைதாங்கிய திரு. பா. அ. ஜயகரன் அவர்கள் சபையோருக்காக வாசித்தார். பிரவீன் அவர்களால் 95 பக்கங்களைக் கொண்ட இந்தக் கவிதைத் தொகுப்பின் அட்டைப்படம் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது.
இதைத் தொடர்ந்து நூல் ஆசிரியரால் சிறப்புப் பிரதிகள் வழங்கப் பெற்றன. இந்த நிகழ்வில் எழுத்தாளர் தேவகாந்தன், எழுத்தாளர் குரு அரவிந்தன், நூல் ஆசிரியரின் நண்பர்களான கணபதிப்பிள்ளை வித்தியானந்தன், கனகசபாபதி பிரேமச்சந்திரா, எல்லாளன் ராஜசிங்கம், கனகசபை குருபரன், பேரா சவுந்தரநாதன், லெஸ்லி ரவிச்சந்திரா ஆகியோர் நூல் ஆசிரியரிடம் இருந்து சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றியவர்கள், சிறப்புப் பிரதிகள் பெற்று நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள், வருகை தந்தவர்கள் எல்லோருக்கும் தனது ஏற்புரையில் எழுத்தாளர் வ.ந. கிரிதரன் நன்றி தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்விற்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய தேடகம் அமைப்புக்கும், தலைவருக்கும் நிகழ்வுக் காணொளியைப் ஓளிப்பதிவு செய்தமைக்கும், புகைப்படங்கள் எடுத்ததற்கும் தடயம் நிறுவனத்துக்கும், அதன் ஸ்தாபகர் கிருபா கந்தையாவுக்கும், நிகழ்வைப் புகைப்படங்களில் ஆவணப்பதிவாக்கிய நண்பர் அலெக்ஸுக்கும் நன்றியைத் தெரிவித்தார். மாலை 7 மணியளவில் வெளியீட்டு விழா இனிதே முடிவடைந்தது. வருகை தந்தோருக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.