- பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு -
கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.
இவருடனான சகோதர வாஞ்சையான உறவு எனக்கு 1970 களிலேயே தொடங்கிவிட்டது. பின்னாளில் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் இணைந்த பலரதும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பேராசிரியையாகவும் திகழ்ந்த சித்திரலேகா பற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் தினத்தின்போது நான் வெளியிட்ட யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது ) நூலிலும் எழுதியிருக்கின்றேன்.
பல்கலைக்கழக பேராசிரியையாக மாத்திரம் இயங்காமல், இலக்கியவாதியாகவும், பெண்கள் தொடர்பான விழிப்புணர் நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டராகவும் விளங்கியிருக்கும் சித்திரலேகா, சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.
பல வருடங்களுக்கு முன்னர் இவர் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள் கவிதை நூல் இன்றளவும் பேசப்படுகிறது.
இம்முறை இவரை நான் சந்தித்தபோது கூற்று என்ற ஆவணத்தொகுப்பு நூலை எனக்கு படிக்கத்தந்தார். 261 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பினைப் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு காலதாமதமாகிவிட்டது. நான் தொடர்ச்சியான பயணங்களில் இருந்தமையால், இந்தத் தாமதம் நிகழ்ந்தது.
- சுனிலா அபேசேகர -
இந்நூலை சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் வெளியிட்டிருக்கிறது. இதன் பதிப்பாசிரியர்கள்: சித்திரலேகா – மர்லின் வீவர்.
“பெண்நிலை அரசியலையும் எமது கதைகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டாய் நன்றி நண்பியே.“ என்ற கூற்றுடன் இந்தத் தொகுப்பு நூலை 2013 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட, தோழி சுனிலா அபேசேகரவுக்கு சமர்ப்பணம் செய்துள்ளனர்.
1977 இற்குப்பின்னர், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடை நீக்கப்பட்டதும், அவ்வியக்கத்தின் பணிமனை கொழும்பு ஆமர்வீதி – புளுமென்டால் வீதி சந்தியில் ஒரு மரஆலைக் கட்டிடத்தின் மேல் மாடியில் இயங்கியது. அங்கே செல்லும் சந்தர்ப்பங்களில் தோழி சுனிலாவை, தோழர் கெலி சேனநாயக்காவுடன் பார்த்துப்பேசி பழகியிருக்கின்றேன்.
தோழர்கள் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார முதலான தோழர்களின் பிரியத்திற்குரிய தோழியாகவும் சுனிலா திகழ்ந்தார்.
அரசியல் இயக்கங்களுக்குள் காலத்துக்காலம் தோன்றும் முரண்பாடுகளினால், பின்னாளில் சுனிலாவும் அதிலிருந்து ஒதுங்கி, பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுட்டார்.
இவரது மறைவுச்செய்தி அறிந்ததும் நான் வதியும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருக்கும் தோழர் லயனல் போப்பகேயும் ஒரு இரங்கல் கட்டுரையை ஊடகங்களில் எழுதியிருந்தார்.
சித்திரலேகா என்னிடம் வழங்கிய கூற்று தொகுப்பில், தோழி சுனிலா அபேசேகராவின் படத்தை பார்த்ததும் கடந்த காலங்களை திரும்பிப்பார்த்தேன்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பு, பெண்கள் தொடர்பான பல்வேறு விடயதானங்களையும் சூரியா அமைப்பு கடந்த காலங்களில் மேற்கொண்ட அளப்பரிய பணிகளையும், அவை சார்ந்த போராட்டங்களையும் – படங்களையும் சித்திரிக்கின்றமையால், ஆவணமாகவும் விளங்குகிறது.
எந்தவொரு அமைப்பும் – இயக்கமும் கருத்துக்களின் சங்கமிப்பிலேயே வளர்கின்றன. அதேசமயம், கருத்துச்செறிவு மோதல்களினால், அவற்றுக்குள்ளே பிளவுகளும் பிரிவுகளும் கூட தோன்றிவிடுகின்றன.
இதற்கு சூரியா அமைப்பும் விதிவிலக்கல்ல !
தொகுப்பாசிரியர் சித்திரலேகாவின் கூற்றிலிருந்து சில பகுதிகள்:
"சூரியாவின் இருபத்தைந்து ஆண்டு நிறைவு தொடர்பாகச் செய்யக்கூடியவற்றைப் பற்றி கடந்த மூன்று வருடங்களாக நாம் கலந்தாலோசித்து வந்துள்ளோம். பல கருத்துக்கள் பலராலும் தெரிவிக்கப்பட்டன. இருபத்தைந்து வருடச் செயல்வாதத்தின் முக்கிய பரிமாணங்களையும் தருணங்களையும் கையகப்படுத்துவதாகவும் இவை அமையவேண்டும் என்பது கூட்டுக்கருத்தாகவிருந்தது. வரலாறும் செயல்வாதமும் ஆவண வடிவில் வெளிவரவேண்டும் என்ற கருத்தின் வெளிப்பாடே இந்த மலராகும்."
"இம்மலரில் உள்ளடங்கியுள்ள கட்டுரைகளின் உட்சடராக மூன்று பிரதான அம்சங்கள் காணப்படுகின்றன. முதலாவதாக பெண்நிலைவாதம் – பெண்நிலை அமைப்புகள் , குறிப்பாக சூரியாவின் உருவாக்கச் சூழமைவும் , அதன் பயணமும். இரண்டாவது சூரியாவின் செயற்பாடுகள், மூன்றாவது அலுவலர்களின் படிப்பினைகள், எதிர்கொண்ட சவால்கள் பற்றிய கருத்துக்களும் மதிப்பீடுகளும். இம்மலர் உருவாக்கத்தில் எம்மிடையே ஏற்பட்ட பல்வேறு விவாதங்களும் முரண்பாடுகளும், முகச்சுழிப்புக்களும் நித்திரையற்ற இரவுகளும். முதுகுவலியும், கடும் உழைப்பும் என யாவற்றையும் கடந்து இன்று பின்னோக்கிப்பார்க்கும்போது இம்மலர் உருவாக்கத்தின் சாதகமான பெறுபேறுகளாக ஒவ்வொரு வாரமும் நிகழ்ந்த சந்திப்புகள், பெறுமதி மிக்க சில கருத்துக்களின் பகிர்வுகள் , சிலசமயம் மகிழ்ச்சிகள் யாவும் அமைகின்றன."
தொகுப்பாசிரியரின் இக்கூற்றுக்களிலிருந்து, இந்த அமைப்பினரிடையே ஊடுபாவாகவிருந்த சிந்தனைகளின் உறைபொருளையும் மறைபொருளையும் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.
சூரியா அமைப்பு கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்ப்பதற்கும், இதில் செயலூக்கமுடன் இயங்கியிவர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்துகொள்வதற்கும் இந்த ஆவணமலர் பெரிதும் உதவியிருக்கலாம்.
அத்துடன் பல வருடகாலமாக எமது சமூகத்தில் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் கலை, இலக்கிய அமைப்புகளுக்கும் மாத்திரமன்றி, அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கூட, தங்கள் வரலாற்றை ஆவணப்படுத்தும்போது, எவ்வாறு அதனை பதிவுசெய்வது என்பதற்கு உசாத்துணையாகவும் பாட நூலாகவும் கூற்று விளங்குகிறது.
இலங்கை, இந்தியா உட்பட உலகெங்கும் பெண்களுக்கும் சிறுமியருக்குமெதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் காலத்தை நாம் கடந்துகொண்டிருக்கின்றோம்.
அத்தகைய கொடுமைகளை வென்றெடுப்பதற்கு எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும் என்பதையும் அனுபவபூர்வமாக எழுதியிருக்கும் ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரின் இறுதிக்காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த சில வருடங்களாக நடத்திவரும் தொடர்ச்சியான அறப்போராட்டங்கள் பற்றிய செய்திகளும் படங்களும் இம்மலரில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
மூவினத்தையும் சேர்ந்தவர்களின் கருத்துநிலைகள் சங்கமிக்கின்றமையால், இந்த மலர் முழுமை பெற்றிருக்கிறது.
ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் பதிவேற்றம் கண்டிருப்பதனால், ஆங்கிலம் தெரிந்த ஏனைய மொழிபேசுபவர்களுக்கும் இம்மலர் பயனுடையதாக விளங்கும்.
காலத்தை கையகப்படுத்தல் என்ற பகுதியில் இலங்கைப் பெண்களின் செயல்வாத தருணங்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 1991 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் சூரியா அமைப்பு நடத்தியிருக்கும் போராட்டங்களின் செய்தித் தொகுப்பு பதிவாகியிருக்கிறது.
கூற்று மலரின் இறுதிப்பகுதியாக பெண்நிலை வெளிகள் என்ற அங்கத்தின் தொடக்கத்தில் சொல்லப்படும் செய்தியை கவனிக்கவும்.
"பெண்நிலை வெளிகள் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் அநீதிகளையும் எதிர்த்து நிற்க மூலாதாரமானவை. நாம் உருவாக்கும், உயர்வாகக் கருதும், பேணி வளர்க்கும் இவ்வெளிகளே, எம்மைத் தொடர்ந்து ஊட்டி வளர்க்கின்றன. இவ்வெளிகள் என்றும் அன்புடனும் உரத்த சிரிப்புடனும் நிறைந்திருப்பவை. நமது வெளிகள் பாட்டும் இசையும் நிறைந்தவை. சூரியாவின் வெளிகளில் ஆழ்ந்த துயரங்களும் துக்கங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான வெளிகளில்தான் நாம் தொடர்ந்து கனவுகளை உருவாக்கி , அவற்றை நினைவு கூர்ந்து வந்துள்ளோம். பெண்கள் தங்கள் உள்ளுணர்வுகளைத் தைரியமாகப் பகிர்ந்து கொண்டு சற்று மனம்விட்டுப் பேசி இளைப்பாற இவ்வெளிகள் உதவுகின்றன."
ஆம், "எமது சமூகத்தில் இத்தகைய வெளிகள் உருவாகவேண்டும்" என்ற செய்தியை கூற்று கூறிநிற்கிறது.
இந்தத் தொகுப்பு குறித்த வாசிப்பு அனுபவப்பகிர்வுகள் பல்கலைக்கழகங்களில், மகளிர் கல்லூரிகளில் பாடசாலைகளில் உயர் வகுப்பு மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்படுமாயின் எதிர்கால பிரஜைகளுக்கு சமூகம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும்.
கூற்று தொகுப்பினை படித்தபோது, இச்செய்தியைத்தான் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.