என் எழுத்துலக அனுபவத்தில் என் வாசிப்பனுபவத்துடன் பின்னிப்பிணைந்த இலங்கை எழுத்தாளர்களில் ஒருவர் கவிஞர் கந்தவனம். வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் நான் எழுதத்தொடங்கிய என் பால்ய பருவத்தில் அச்சஞ்சிகை மூலம் அறிமுகமானவர். பின்னர் எப்பொழுதும் இவரது படைப்பையோ அல்லது இவர் பற்றிய செய்தியையோ ஏதாவதொரு பத்திரிகையிலோ அல்லது சஞ்சிகையிலோ பார்த்திருக்கின்றேன். வாசித்துமிருக்கின்றேன்.
இலங்கையில் இருந்தபோதும், போர்ச்சூழலால் இடம் பெயர்ந்து புகலிடம் நாடிக் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபோதும் இவர் தொடர்ந்து அயராமல் எழுதிக்கொண்டேயிருந்தார். இலக்கிய நிகவுகளில் கலந்துகொண்டேயிருந்தார். கவியரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டும், தலைமையேற்று நடத்தியுமிருப்பதால் இவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'கவியரங்குக்கோர் கந்தவனம்' என்றும் அழைப்பார்கள். அயராது இலக்கிய உலகில் இயங்கிக்கொண்டிருந்த கவிஞர் தனது தொண்ணூறாவது வயதினைப் பூர்த்தி செய்த நிலையில், உடல் நலப்பாதிப்பால் வீட்டிலேயே சிறிதுகாலமாக இருந்து வருகின்றார். விரைவில் பூரண நலத்துடன் அவர் மீண்டெழ வேண்டுகின்றேன்.
அவரது 'கவிதை மரபு' நூல், காந்தளகம் பதிப்பகத்தால் 2005இல் வெளியிடப்பட்ட நூல், மரபுக்கவிதை பற்றி அறியும் ஆவல் மிக்க எவருக்கும் உறுதுணையாக விளங்குமொரு வழிகாட்டி. அந்நூலை நூலகம் இணையத்தளத்தில் , அல்லது பதிவிறக்கி வாசிக்க முடியும் . அதற்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/326/32574/32574.pdf
இவரது கவிதைகளில் எனக்கு மிகவும் படித்த கவிதைகளாகக் 'கீரிமலையினிலே', 'பாடு மனமே பாடு' ஆகியவற்றைக் குறிப்பிடுவேன். யாழ் இலக்கிய வட்டம் அக்கவிதையையும் உள்ளடக்கிக் 'கீரிமலையினிலே' என்னுமொரு தொகுப்பையும் (!969) வெளியிட்டுள்ளது. கவிஞர் கீரிமலை பற்றிய தன் எண்ணங்களைக் கவிதைகளாக்கியிருக்கின்றார். அக்கவிதைகளின் தொகுப்பே 'கீரிமலையினிலே' கவிதைத்தொகுப்பு. இந்நூலுக்கான பதிப்புரையில் இதனையொரு காவியம் என்பார் கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை. நூலுக்கு நல்லதோர் அணிந்துரையினை எழுத்தாளர் சு.வே (சு.வேலுப்பிள்ளை) எழுதியிருக்கின்றார்.
கீரிமலையும் ,அதன் கேணியும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்தவை. இக்கவிதை உணர்வுகள் கவிஞர் கந்தவனத்தின் உணர்வுகள் மட்டுமல்ல உங்கள் உணர்வுகளும்தாம்.
'கீரிமலையினிலெ
நலந்தருங்
கேணி யருகினிலே
மாரி மழையதனால்
மலர்ந்தெழும்
மண்ணினைப் போலவுள்ளம் -
பூரித்து நிற்கையிலே
நினைவுகள்
பூத்துக் குலுங்கையிலே
தூரத் தொடர்ந்துசென்றேன்
சூழல் கடந்துநின்றேன்.'
இவ்விதம் கீரிமலைக் கேணியருகில் கவிஞர் அதன் அழகில், அது பற்றிய நினைவுகளில் மெய்ம்மறந்து நிற்கிறார். இவ்விதம் தன்னை மறந்து நிற்கும் கவிஞர் ஈற்றில்
'கீரி மலையினிலே - நலந்தரும்
கேணி யருகினிலே
ஊருறங் கும்இருட்டில் - இருப்பதை
உற்றுணர்ந் தேயெழுந்தேன்'
என்று நனவுலகுக்கு மீள்கின்றார். இடைப்பட்ட பொழுதில் அவர் சிந்தையில் படந்த கீரிமலை பற்றிய உணர்வுகள், எண்ணங்களே 'கீரிமலையினிலே' காப்பியம். அதனை வாசிக்க - https://noolaham.net/project/17/1646/1646.pdf
கவிஞர் கந்தவனத்தின் இன்னுமொரு முக்கியமான கவிதைத்தொகுப்பு 'பாடு மனமே' நுணாவிலூர்த் தமிழ் மன்ற வெளியீடு (1972). கவிஞரின் இருபது கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்புக்கு நல்லதோர் அணிந்துரையினை எழுதியிருக்கின்றார் பேராசிரியர் சு.வித்தியானந்தன். நூலுக்கு அழகிய அட்டையினை வரைந்திருக்கின்றார் ஓவியர் செள. (செளந்தரராஜன்). தொகுப்புக் கவிதைகளுக்கும் சித்திரங்கள் வரைந்திருக்கின்றார். 'பாடு மனமே!' தொகுப்பை வாசிக்க - https://noolaham.net/project/186/18569/18569.pdf
கவிஞரின் மற்றுமொரு முக்கிய தொகுப்பு 'மணிக்கவிகள்' தாயகம் (கனடா) பத்திரிகை/சஞ்சிகையில் வெளியான இருவரிக் கவிதைகளின் தொகுப்பு. கவிஞரின் மணிவிழாக்குழு வெளியிட்ட தொகுப்பு (1994). இத்தொகுப்பு நூலை வாசிக்க -
https://noolaham.net/project/755/75434/75434.pdf
இந்நூலிலுள்ள கவித்துளிகள் சில:
விரிவெளி யாண்டு வீரம் பேசிய
அரசியல் தானும் ஆட்டம் காணும்.
பதவியில் உயர்ந்தோர் பாடுவர் வாழ்த்துப்
பதவியை இழந்தால் ஓடுவர் பார்த்து.
வெட்ட வெட்டத் தழைக்கும் புல்லு
குட்டக் குட்டக் குனிவர் புல்லர்.
'ஒன்று பட்டாக் உண்டு வாழ்வு'
என்ற வாழ்வை இன்னும் காணோம்.
பிரச்சனை தீர்க்கும் பெருந்திற னில்லாப்
புரட்சிப் பேச்சுப் புளுகர் ஒழிக.
அலுவல் முடிக்க அடிக்கடி வருவார்
அலுவல் முடிந்த பின் அடிக்கவும் வருவார்.
நானே சொன்னேன் நானே செய்தேன்
நானே என்பார் நாளை நில்லார்.
ஊறு காய்க்கு நாவூ றல்போல்
ஊறும் நட்புக் குள்ளம் ஊறும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.