முன்னுரை
அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது கம்பராமாயணத்தின் பாவிகமாகும். இப்பாவிகத்தினைக் கம்பர் தேவைப்படும் இடங்களிலெல்லாம் கதாப் பாத்திரங்கள் மூலமும், ஆசிரியர் கூற்றின் வாயிலாகவும் வலியுறுத்திக் கூறுகிறார். உலகில் அறம்தான் வெல்லும், அறம்தான் வெல்லவேண்டும் என்ற பாவிகத்தைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
பாவிகம்
காப்பியத்தின் பண்பாகப் ’பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிப்பிடுகின்றது. காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படை கருத்தினையேப் பாவிகம் என்று கூறுவர்.
“பாவிகம் என்பது காப்பிய பண்பே”
(தண்டியலங்காரம் 91)
நூல் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினைப் பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது பாவின் தனி செயல்களிலோ, பகுதிகளிலோ தெரிவதில்லை. தொடக்க முதல் முடிவு வரை நூலை முழுவதிலும் பார்க்கும் போதே பாவிகம் விளங்கும்.
அறத்தின் ஆற்றல்
எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்கி, தருமம் தழைக்கவில்லையோ, அப்பொழுதெல்லாம் அறத்தை நிலைநாட்டப் பரம்பொருள் அவதரிப்பதாகக் கம்பர் கூறுகிறார்.
" அறம்தலை நிறுத்தி வேதம்
அருள்சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூணச்
செந்நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உகநூறித், தக்கோர்
இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொன் பாதம்
ஏத்துவார் பிறப்பு அறுப்பான்"
(பிணிவீட்டுப்படலம் 1125)
என்ற கம்பராமாயணத்தின் பாவிகம் காப்பியம் முமுவதும் ஒலிக்கிறது.
தேவர்களாலும் அறத்தை வெல்லமுடியாது
முதல் நாள் இராவணன், இராமனுடன் போர் புரியும் போது தோற்றான். அப்போது செருக்கு அழிந்தமையால் கீழே நோக்கும் கண்களை உடையவனும், ஒளியிழந்த முகத்தையும், தலையையும் உடையவனும், அவ்வாறிருத்தலால் விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போன்ற உடலைக் கொண்டவனுமான இராவணன், அறத்தைக் கடந்த பாவிகளின் செய்கை இப்படித்தான் முடியும் என்று கூறி உலகத்தவர் ஆரவாரிக்க தன் நிறம் முன்பில்லாத்தை விடக் கரியதாக, கால் விரல் நிலத்தைக் கீறிக் கொண்டிருக்க நின்றான்.
“அறம் கடந்தவர் செயல் இது என்று உலகமெல்லாம் ஆர்ப்ப”
(முதற்போர்புரி படலம் 1206)
அறம் கொன்று வாழ்வோர், எவ்வளவு வீரம் படைத்திருப்பினும்வெல்லுதல் அரிது.தேவர்களும் அறத்தைப் புறக்கணித்து மறத்தினால் வெல்லமுடியாது. இதை நன்றாகச் சிந்தித்து, மனதில் ஆழமாகப் பதித்து வைத்துக் கொள்வாயாக என்று இராமன், இராவணனுக்கு அறிவுரையாக
" அறத்தினால் அன்றி அமரர்க்கும்அருஞ்சமம் கடத்தல்
மறத்தினால் அரிதென்பது மனத்திடை வலித்தி"
(முதற் போர்புரி படலம் 1208)
என்று கூறுகிறான்.
அருந் தருமம் தன்னை வெல்லுமோ பாவம்
மாயத் துறவி வடிவில் பஞ்சவடி வந்த இராவணன், சீதையிடம் எளியவரான மனிதர்கள் வலியவரான அரக்கர்களை அடியோடு அழித்து வெற்றி பெறுவார்கள் என்றால், யானைக் கூட்டங்கள் அனைத்தையும் ஒரு சிறு முயல் கொன்றுவிடும். மேலும் வளைந்த நகங்களை உடைய ஆண் சிங்கத்தை ஒரு மான் குட்டி கொன்றுவிடும் என்று சொன்னான். அதற்குப் பதிலாக சீதை நீங்கள் சொன்ன ஆண் சிங்கம் என் பெருமானாகிய வள்ளல், மான் கூட்டம் அரக்கர் கூட்டமே. அந்த அரக்கர் சுற்றத்தாரோடு முற்றிலும் அழியும் விதத்தையும், தேவர்கள் உயர்வு பெறும் விதத்தையும் நாளைக்கேப் பார்ப்பீர் அல்லவா. நீங்கள் செல்லா தருமத்தை பாவம் வென்று விடுமோ மாசற்ற முனிவரான நீங்கள் இதை அறியவில்லையோ என்று சீதை கூறினாள்.
"நாளையே காண்டிர் அன்றே நவைஇலீர் உணர்கிலீரோ..
மீள அருந் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள்"
(சடாயு உயிர் நீத்த படலம் 859)
அறம் தோற்கப் பாவம் வெல்லுமோ?
இராவணனால், சிறகு அறுக்கப்பட்ட சடாயுவைக் கண்டு சீதை, என்னைக் காக்க வந்த நல்லவராகிய சடாயு தோற்க, ஒரு பாவி வெல்லுவதா? அறம் தோற்க பாவம் வெல்லுவதா? தருமம் இல்லையா?தருமம் அழியாது என்று கூறும் வேதம் பொய்க்குமோ? என்று இரங்கிக் கலங்கினாள்.
“அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்”
(சடாயு உயிர் நீத்த படலம் 932)
பாவம் தோற்றது அறம் வெற்றி கண்டது
இராமன், வாலியைக் கொன்று சுக்ரீவனைக் கிட்கிந்தையின் அரசனாக்கினான். சுக்ரீவன் ஆணைப்படி படைத்தலைவர்கள் படையுடன் வந்து சேர்ந்தனர். இராமலட்சுமணருக்கு 70 வெள்ளம் வானர வீரரைத் திரட்டி அணிவகுப்பு நடத்திய போது, இராமனிடம், இலட்சுமணன் கூறினான். தேவனே இங்குள்ள இப்படை வீரர்களுக்கு எந்த உலகத்தில் செய்து முடிக்க வேண்டிய தொழில் எதுவோ, ஆக வேண்டிய அத்தொழில் எளிதாக முடிவதாகும். இவருக்கு அறிய செயல் உள்ளது என்று சொல்லலாமா? சீதையைத் தேடிக் காண்பது என்பது இவர்களின் ஆற்றலுக்கு அற்பமான செயலாகும். இந்தப் படையினால் பாவம் தோற்றது அறம் வெற்றி கண்டது என்று கூறினான்.
“தேவதேவியைத் தேடுவது என்பது சிறிதால்
பாவம் தோற்றது தர்மமே வென்றது இப்படையால்”
(தானை காண் படலம் 735)
அறம் வெல்லும் பாவம் தோற்கும்
சீதையைத் தேடி இலங்கை வந்த அனுமன் ஊருக்குள் செல்ல முயன்ற போது, இலங்காதேவி அவனைத் தடுத்து, அவனுடன் போர் செய்தாள். பெண்ணைக் கொல்லக்கூடாது என்பதால், அனுமன் அவளை அறைந்தான். அப்போது இலங்கா தேவி ஐயனே, பிரம்மன் சொன்னபடியே நடந்து விட்டது ’அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதை இன்னமும் சொல்ல வேண்டுமோ இனிமேல் நீ நினைப்பனயாவும் நிறைவேறும். உன்னால் செய்து முடிக்க முடியாதது எதுவுமில்லை. பொன்நகரான இந்நகருக்குள் செல்க என்று கூறிய இலங்காதேவி, அனுமனைப் புகழ்ந்து வணங்கி விட்டு பிரம்மலோகத்துக்கு போனாள்.
“அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும்
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகை யதோ இனி மற்று உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர்புகுதி என்னாப் புகழ்ந்து அவள் இறைஞ்சிப் போனாள்”
(ஊர் தேடுபடலம் 189)
தீவினை அறத்தை உண்மையாக வெல்ல முடியுமோ?
சீதையை இலங்கை முழுதும் தேடிய அனுமன், இறுதியில் அசோகவனத்தில் அவளைக் கண்டான். மரக்கிளையில் இருந்தபடியே நடப்பதை எல்லாம் நேரில் கண்டான். தெய்வங்கள் இரவிலும், பகலிலும் இராவணனுக்குப் பணிவிடை செய்வார்கள். இராவணனது செல்வமோ அத்தன்மையானது. இவ்வரக்கர்களின் தீமையோ, சீதையைச் சிறை வைத்திருக்கும் இச்செயலாகும். இங்கு கற்பு தவறாமல் இருப்பது வேறு ஒருவரால் முடியுமா? இனிமேல் துன்பமில்லை. தீவினை அறத்தை உண்மையாக வெல்ல முடியுமோ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
“செல்வமோ அது? தீமையோ இது ?
அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார்.
ஒல்லுமோ ஒருவருக்கு ஈது? உறுகண் யாது இனி?
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்மையால்?”
(காட்சிப் படலம் 404)
அறத்துக்கும் ஈறு உண்டோ?
அனுமன், சீதையைக் கண்டான். மாசு படிந்த இரத்தினம் போல் காணப்படுகிறாள். சந்திரன் கலை குறைந்து தேய்ந்திருப்பதைப் போல் உடல் இளைத்திருக்கிறாள். அவளுடையக் கற்பிற்கும், இராமனிடத்தில் வைத்த காதலுக்கும் குறைவிலை. அறத்திற்கும் அழிவு உண்டோ? அழிவதில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
“மாசு உண்ட மணி அனாள் வயங்கு வெங் கதிர்த்
தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளான்
காசுண்ட கூந்தலால் கற்பும் காதலும்
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ”
(காட்சிப்படலம் 396)
அறம் வாழ்க
அசோகவனத்தில் தன்னிடம் வந்து தகாத வார்த்தைகளைக் கூறிய இராவணனைச் சீதை நிந்தித்துப் பேசியதைக் கேட்ட அனுமன், சீதை பிராட்டியார் வாழ்க, இராமபிரான் வாழ்க, நான்கு வேதங்களும் வாழ்க, முனிவர்கள் வாழ்க, அறம் வாழ்கென்று ஒவ்வொரு கற்ப காலத்திலும் உயர்ந்து உயர்ந்து மிகும் புகழையுடைய அனுமன் வாழ்த்தினான். (நிந்தனைப்படலம்428)
அறத்தைக் காப்பவன் இராமன்
பிரம்மாஸ்திரத்தால் இராம இலட்மணர்கள் மயங்கி விட, அவர்கள் இறந்துவிட்டனர் என்று இந்திரஜித், இராவணனிடம் கூறினான். அவர்கள் இறந்து கிடப்பதைச் சீதை காண வேண்டும் என்று புஷ்பக விமானத்தில் சீதையை ஏற்றி பார்க்கச் செய்தான் இராவணன். சீதையும் இராமலட்சுமணர்கள் இறந்துவிட்டனர் என்று எண்ணி, அழுது புலம்பி, புஷ்பக விமானத்திலிருந்து கீழேக் குதித்துத் தன்னுயிரை விட முயன்றாள். அருகில் உடன் இருந்த திரிசடை, சீதையிடம் தான் கண்ட கனவின் நிமித்தமும் கூறி, உண்மையை அவளுக்குப் புரிய வைத்தாள். அப்போது முன்னர் நீ கண்ட கனவுகளும் ஏற்பட்ட நற் சகுனங்களும், உனது கற்பும், கதையும், வாளும் ஏந்திய அரக்கர்களின் பாவச் செயல்களும் அறத்தைக் காக்கும் தேவர் கோமானாகிய இராமனின் வீரப் பண்புமாகிய இவற்றை மறந்தாய் போலும். தாமரைக்கண்ணனான இராமபிரானுக்கும் இந்த அற்பர்கள் கையால் மரணம் ஏற்படுமோ ஏற்படாது என்று கூறினாள்.
“கண்ட அக்கனவும் பெற்ற நிமித்தமும் எனது கற்பும்
தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும் தர்மம் தாங்கும்
அண்டர் நாயகன் தன் வீரத் தன்மையும் அயர்த்தாய்போலும்
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இப்புலையர்க்கு அல்லால்”
(சீதை களம் காண் படலம் 26 36)
அறத்தினைப் பாவம் வெல்லாது
நிகும்பலை யாகம் அழிந்தது. அழிந்ததால், தான் நினைத்ததைச் செய்ய இயலாது என்பதை அறிந்த பின்னும், இந்திரஜித் போர் செய்தான். தோல்வி அடையும் நிலை ஏற்படவே, இவற்றிற்கெல்லாம் காரணம் தனது சித்தப்பா என்று கூறி வீடணனைக் கோபத்தில் ஏசினான். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக வீடணன் இறுதியில், அறத்தினைப் பாவம் வெல்லாது எனும் ஆன்றோர் கூறும் உண்மையினைத் தெளிந்து ஞானப்பயன் கூடும் என்று கருதி, தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய இராமபிரானைச் சரணடைந்தேன். இது எனக்குப் புகழ் தருவதாகும் அன்றி, பழியோடு பொருந்தினும் பொருந்துக. வேதனைத் தொலைந்த ஞானச் சிறப்பினை நான் பெறுக, அன்று பெறாது ஒழிக என்று சினம் நீங்கிய வீடணன் கூறினான்.
“அறத்தினைப் பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞானத்
திறத்தினும் உறும் என்று எண்ணித் தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்
புறத்தினில் புகழே ஆகப் பழியொடும் புணர்கப் போகச்
சிறப்பு இனிப் பெறுக தீர்க என்றனன் சீற்றம் தீர்ந்தான்”
(நிகும்பலை யாகப் படலம் 30 50)
அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ
மூல பல படையினரைக் கண்ட வானர வீரர்களும், சாம்பனும் பயந்தனர். சிதறித் தெறித்து ஓடினர். இதனைக் கண்ட இராமன், அங்கதனை அழைத்து தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்து வரப் பணித்தான். அங்கதனும், பயத்தில் ஓடிக்கொண்டிருந்த அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் பேசினான். அரக்கர்கள் எத்துணை இருந்தாலும் அறம் அங்கே இல்லை அல்லவா? மிகுதியாக உள்ள தர்மத்தைப் பாவம் வெல்லும் என்பதைக் கேட்டு அறிந்தது உண்டோ? பித்தரைப் போல நீயும் இந்த வீரர்களோடு இராமனை விட்டு நீங்கியது பொருத்தம் அன்று என்று அங்கதன், சாம்பனிடம் சொன்னான்.
“எத்தனை அரக்கரேனும் தர்மம் ஆண்டு இல்லை அன்றே
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ
பித்தரைப்போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை
ஒத்துலது என்னச் சொன்னான் அவன் இவை உறைப்பதானான்”
(மூலபல வதைப் படலம் 3286)
அறம் மிக்க இராமன் வாழ்க
இராமன் வில் ஏந்தி முன்னிலையில் வந்து போரிட்டபோது தேவர்கள் முதலாயினார் இராமனைப் போற்றி ஆசி மொழிந்தனர். அப்பொழுது, முனிவர் முதலான அறத்துறையில் பொருந்தியிருப்பவர், இராமபிரானது தனிமையையும் அரக்கர்ப் படையின் மிகுதியையும் கண்டு மனம் பொறாதவராய், நீர் மல்கும் கண்களையுடையவராய், விம்மித் துடிக்கும் நெஞ்சுடையவராய், பாவம் புரிந்தவர் தோல்வியுறுக, அறம் மிக்க இராமன் வாழ்க என்று வாழ்த்துக் கூறினர்.
“பனிவரு கண்ணார் விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார்”
(மூலபல வதைப்படலம் 3309)
அறம் வெல்லும் பாவம் தோற்கும்
இராவணன் தனது மாமனார் மயன் தந்த வலிய மாயவேலை, வீடணன் மீது சினத்துடன் எய்ய, இதை இலட்சுமணன் பார்த்துச் சென்று, ஏற்று மயங்கினான். அனுமன் மேருமலை சென்று, முன்பு வைத்துவிட்டு வந்த மருந்தை வருத்தம் ஏதுமின்றிக் கொண்டு வந்தான். இலக்குவன் உயிர்த்து எழுந்தான். வானரர் வாய்விட்டு சொன்னது.
“தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால்
அருமை என் இராமருக்கு? அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும்
இருமையும் நோக்கின் என்னா இராமர்பால் எழுந்து சென்றார்”
(வேல்ஏற்ற படலம் 3514)
அறிஞர் அறம் என்று பாராட்டிப் பேசுகின்ற ஒப்பில்லாதப் பொருளைப் பற்றி இப்போதே செய்யத்தக்கது என்று அனுமன் விளக்கிக் காட்டிய இயல்பைக் கண்டால், இராமனுக்கு அரிய செயல் என்று ஒன்று யாதுளது? எதுவுமில்லை. இம்மை, மறுமைகளைக் கூர்ந்து பார்த்தால், அறம் வெல்லும், பாவம் தோல்வி அடையும் என்று சொல்லிக் கொண்டு அனைவரும் எழுந்து இராமனிடம் சென்றனர்.
அறம்
அறம் -என்ற சொல் இல்லறம், துறவறம் என இருவகைப்படும்.
இல்லறம்- கொடுத்தலும், கோடலும் இம்மையும் ஒழுக்கம் புணர்தல் புணர்ந்தோர் பேணல் மற்றையயாகுமாம்.
துறவறமாவது -துறவும், தவமும் அரவணை ஓட்டுதலும் வருவினை மறுத்தலும் பிறவும் ஆகும் என்று வீரசோழியம் கூறுகிறது.
அறத்தின் நிறம்
வீடணன் அடைக்கலப் படலத்தில் சுக்ரீவனால், இராமனிடம் அழைத்து வந்தபோது அவனைக் கண்டதும் வீரனை நோக்கி, ’அங்கம் ஆர் அருள் சுரக்கும் நீதி அர நிறம் கரிதோ என்றான். இராமனைக் கண்ட வீடணன் நிறைந்த அருளைப் பொழியும் நீதியை உடைய அறத்தின் நிறம் கருமையோ என்றான்.
அறம் சலித்தது
இராவணனுக்கும், அனுமனுக்கும் குத்துச்சண்டை நிகழ்கிறது. அப்போது இராவணன், அனுமனைக் குத்தியதும் நிகழ்ந்த மாற்றத்தைக் கம்பன் ’சலித்த காளையின் இமையவர் உலகலாம் சலித்த சலித்ததால் ’அறம் சலித்தது’ என்கிறான்.
அறம் இறைவன் அருளால் பெற்றவை.
போர்க்களத்தில் தன்னிடம் வந்த வீடணனைக் கண்ட கும்பகர்ணன் அவனுக்கு அறிவுரை கூறுகிறான். நீதியும், தர்மமும் நீண்ட நிலையும் நீதியையும் அறத்தில் ஊன்று இருக்கின்ற தன்மையையும், நல்லறிவையும் முழுமுதற் கடவுள் மேல் மிக்க தவம் செய்து நீ அடைந்தாய், பிரம்மன் கொடுத்த வரத்தால் அழிவற்ற ஆயுளை அடைந்தாய். இருப்பினும் இப்படி இருந்தும் அரக்கர் குலத்தின் இழிவை இன்னும் விட்டுவிடவில்லையோ என்கிறான் கும்பகர்ணன். இதிலிருந்து அறிவு, அறம், நீதி இம்மூன்றும் இறைவன் அருளாலே பெற்றவை என்பதை அறிய முடிகிறது.
நம்மைக் காவாத அறத்தை நாம் ஏன் காக்க வேண்டும்
வேதங்கள் தர்மத்தைக் கடைப்பிடியுங்கள் என்று கூறுகின்றன. யார் தர்மத்தைக் காக்கிறார்களோ அவர்களைத் தர்மம் காக்கும் என்றார்களே. நாங்கள் எல்லா வகையிலும் தர்மத்தைப் பின்பற்றித் தானே நடந்து வருகிறோம். அறவழி தவிர, மறவழியில் மறந்தும் கூட நாங்கள் செல்வதில்லையே, இந்த இராமன் எப்போதும் அறம் வளர்த்த நாயகன் தானே அறம் வளர்ந்து வந்திருக்கின்றான். அவனையே அறம் கைவிட்டதால், நாங்கள் எம்மாத்திரம். எனவே நம்மை காவாத அறத்தை நாம் ஏன் காக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். (நகர் நீங்கு படலம் 95) இந்த அயோத்தி மக்களை நமக்கு அறிமுகப்படுத்தும் போது, கம்பன் அவர்களை நெறியின் புறம் செல்லா கோசலை (ஆற்றுப்படலம் 1) அப்படிப்பட்ட அயோத்தி மக்களே அறத்தைப் பின்பற்ற மாட்டோம் என்கின்றனர்.
அறவழி தவறினால் பிரம்மனுக்கும் அழிவு வரும்
இராமன், சுக்ரீவனுக்கு அரசநீதியை எடுத்துக் கூறுகிறான்.உலகில் உயிர்களுக்கு இறத்தலும், பிறத்தலும் இயல்பே. இதனிடையில் அவரவர்களுக்கு நேரும் இன்ப துன்பங்கள் அவரவர் வினைக்கேற்ப வரும். நல்வினை செய்தோர் நலம் பெறுவர். தீ வினை செய்தோர் தீங்குறுவர். அறவழி தவறினால் பிரம்மனுக்கும் உடனே அழிவு நேரும் என்பதை உறுதியாகக் கொள் என்கிறான்.
“இறத்தலும் பிறத்தல் தானும்
என்பன இரண்டும் யாண்டும்
…………………………………………………………………..
………. ………………………………………………………………..
புறத்தினி உரைப்பது என்னே
பூவின் மேல் புனிதற்கேனும்
அறத்தினது இறுதி வாழ்நாட்கு
இறுதி அஃது உறுதியென்ப”
(அரசியல் படலம் 421)
அறம் பிழையாதார்க்கெல்லாம் ஏய்வன நலனே
இராமபிரான் கடலினைக் கடக்க வருணனை வழி வேண்டி தியானித்தான். ஏழு நாட்கள் கடந்தும், அவன் வரவில்லை. கோபம் கொண்ட இராமன் பிரம்மாஸ்திரம் எவ, வருணன் வந்து இராமனிடம் சரணடைந்தான். ஆராய்ச்சி உடையவராய்த் தர்மம் தவறாதவர்களுக்கு எல்லாம் நன்மையை அன்றிக், கேடு வந்து பொருந்துவது உண்டோ? அழிவைச் செய்து முடிக்க வல்லராய் வருணன்மீது இராமனுக்கு வந்த சினம் முழுவதும், அறத்தினின்று தவறாத வருணனுக்குத் தீமை செய்யாது, தீவினையுடைய அவுணருக்கேத் தீமையைச் செய்தது அன்றோ?, இராமன் அவுணரை அழித்தான்.
“ஆய்வினை உடையவர் ஆகி அறம் பிழையாதார்க் கெல்லாம்
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ
மாய்வினை இயற்றி முற்றும் வருணன் மேல் வந்த சீற்றம்
தீவினை உடையார் மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே”
(வருணனை வழி வேண்டுபடலம் 609)
அறம் ஒன்றினால் மட்டுமே அழிவு நேராமல் தடுக்கமுடியும்
மாயமான் குரல் கேட்டு சீதை கோபத்துடன் கடுஞ்சொல் கூற இலட்சுமணன் செய்வதறியாது கையற்ற நிலையில் , நான் செல்லாமல் இங்கேயே இருந்தால் இவர் இறந்து போதல் ஏற்படும். ஆகையால், பழைய வினைப்பயனாய்ப் பிறந்து, இங்கு வந்து, இத்துன்பத்தை அனுபவிக்கும் அறிவற்றவனாகிய நான், இந்த இடத்தை விட்டுச் செல்வதையேத் துணிந்து மேற்கொள்வேன். அறம் ஒன்றினால் மட்டுமே, அழிவு நேராமல் தடுக்கமுடியும் என்று இலட்சுமணன் எண்ணினான். (சடாயு உயிர்நீத்த படலம் 820)
வாழ்வை தான் அறம் பிழைத்தவருக்கு வாய்க்குமோ
வீடணன், இராவணனுக்கு இரணியனது வரலாற்றைக் கூறி அவனைத் திருத்த முயற்சி செய்கிறான். ஆனால் இராவணனோ, கோபமடைந்து அவனைத் துரத்துகிறான். அப்போது வீடணன்
“வாழ்வை தான் அறம் பிழைத்தவருக்கு வாய்க்குமோ”
(வீடணன் அடைக்கலப் படலம் 315)
என்று கூறுகிறான்.
அறத்தின் நாயகன்
அறநெறியை மறையாகக் கடைபிடித்துவாழ்ந்ததால் தான், இராமனை, பற்றிய அடைமொழிகளைக் கம்பர் கூறும் போதெல்லாம் அறத்தொடு அவனை ஐக்கியமாக்கிக் கூறுகிறார்.
’அறம் அன்னானே’
’அறத்தின் ஆருயிர்த் துணைவனே’
’அறம் தரு சிந்தை ஐயனே’
’அறத்தின் நாயகனே’
’அற முதல்வனே’
’அறம் என நின்ற நம்பனே’
’அறம் தரு வள்ளலே’
’அறத்தின் வாழ்வே’
’தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றியவனே’
’ஏதமில் அறத்துறை நிறுத்திய இராமனே’
முடிவுரை
காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையேப் பாவிகம் என்று கூறுவர். “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பது கம்பராமாயணத்தின் பாவிகமாகும். அறத்தைப் பாவம் வெல்லுமோ என்று இராவணனிடம் சீதை கூறுதல், ஜடாயு விழுந்து கிடந்த போது, சீதை அறம் தோற்க பாவம் வெல்லுமோ என்று உரைத்தல், வானரப் படையைக் கண்ட இலட்சுமணன், இராமனிடம் இப்படையின் பாவம் தோற்றது தர்மம் வென்றது என்று கூறுதல், இலங்கை மாதேவி, அனுமனிடம் அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்று கூறுதல், அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன், தன் மனதில், தீவினை அறத்தை உண்மையாக வெல்ல முடியுமோ என்று கூறுதல், திரிசடை, சீதையிடம் அரக்கர் பாவம் செய்தவர்கள் இராமன் அறத்தைக் காப்பவன் என்று கூறுதல், வீடணன் இந்திரஜித்திடம் அறத்தினைப் பாவம் வெல்லுமோ? வெல்லாது என்று கூறுதலும், அங்கதன் சாம்பனிடம் அறத்தை வெல்லும் பாவம் அறிந்ததுண்டோ? என்ற வினவுதலும் இராவணன் அனுப்பிய வேல் இலட்சுமணனைத் தாக்க அனுமனின் மருத்துமலையால் அவன் உயிர்ப் பெற்ற போது, வானவர்கள் அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்று கூறினர். இப்பாவிகத்தினைக் கம்பர் தேவைப்படும் இடங்களிலெல்லாம் கதாப்பாத்திரங்கள் மூலமும், ஆசிரியர் கூற்றின் வாயிலாகவும் எப்படியெல்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையின் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. கமலக்கண்ணன். இரா.வ,நாலாயிர திவ்வியப் பிரபந்தம் மூலமும் விளக்கவுரையும் தொகுதிI,II தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை-1963.
2. கருப்பையா பழ., எல்லைகள் நீத்த இராமகாதை,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
3. கருத்திருமன். பி,சி.கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
4. காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும்,தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,சென்னை, 2010.
5. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை.
6. சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017,
7. சாரதாம்பாள்.செ., இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ஹரிஹரன் பதிப்பகம், தென்றல் நகர் ,மதுரை, 2004.
8. ஞானசம்பந்தன் அ.ச, இராமன் பன்முகநோக்கில் சாரு பதிப்பகம், சென்னை, 2016.
9. ஞானசந்தரத்தரசு அ. அ,கம்பன் புதிய தேடல் ,தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
10 தமிழ்நேசன் கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, வள்ளி பதிப்பகம், சென்னை,2019.
11. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
12. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.