- எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அவரது நினைவாக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. இதனை அனுப்பியுதவிய அவரது புதல்வி நவஜோதி யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் -
‘உவள் ஒரு சரியான திடுமலிக் குமரி, சோக்கான வெள்ளைப் பொட்டை. அறுவாள் நல்ல சட்டையாப் போட்டுக்கொண்டு ஒதுக்கமா நில்லாம, இந்த நடுச்சந்தியில் இளிச்சுப் பிடிச்சுக்கொண்டு என்ன கண்டறியாத விடுப்புப் பாக்குது....!’
‘போச்சுடா, ஆரோ அவசரமாக வாறான். வாறவனும் இளவட்டம் தான்....?’
‘உவள் ஒரு நாய்ப் பிறவி, சிரிச்சமணீயம் அவனைத் தேடியல்லோ போறாள்? படு தோறை....’
‘சனியன் இளிக்கிற விறுத்தத்தைப்பார். மூதேவி, போற வாறவங்களுக்கெல்லாம் வாயத் துறந்து காட்டுதே?’
மரியாம்பிள்ளை அண்ணர் மனுசனாய் நிற்கவில்லை, அவர் நெஞ்சு கெந்தகித்தது.
அப்போது.....
‘அய்யா துரோய், ஏதாச்சும் தாங்கையா’ என்ற குரல் கேட்கவே, அண்ணர் திரும்பிப் பார்த்தார்.
துரை அசட்டையாகச் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவி, சில சில்லரைகளை எடுத்து அவள் ஏந்திய குவளைக்குள் எறிந்து விட்டு நடந்தார்.
‘அச்சாத் தொரை, நீங்க நல்லாயிருக்கோணும் துரை’
‘சிச்சீ இவளின்ர தொழில் இதுதானா?’
இதுவரை தொண்டைக் குழியில் ஊனம் வழிய ‘அவவைப் பார்த்த மரியாம்பிள்ளை அண்ணை கண்ணில் இவ இப்படி ஏந்தி ‘வாங்கும்’ காட்சி மிளகாய்ப்பொடி தூவிற்று.
மரியாம்பிள்ளை அண்ணருக்கு இது முகத்தில் ‘பளார்’ அடி, ‘சடா’ ரென்று அங்கிருந்து விலகினார். இருப்பினும் அண்ணனுக்கு எந்த ஒரு வேலையும் நேர் சீராக ஓடவில்லை. அனலாக உந்திய அவர் மேனியில் இப்போது சோர்வு தட்டிற்று. அதனால் ‘ஹாவ்டே லீவ்’போட்டு விட்டு மத்தியானத்தோடு ‘போடிங்’கிற்குத் திருப்பினார்.
மரியாம்பிள்ளை அண்ணன் அசல் யாழ்ப்பாணி. வலு கடுவலான மத விஸ்வாசி. கொழும்பிலே துறைமுகக் கப்பல்களில் வேலை, சீவியம் ‘போடிங்’கில் தான். ஆள் தனிக்கட்டையல்ல, பெண் கொள்ளாத இளந்தாரியுமல்ல. கலியாணம் செய்து பதினைந்து பதினாறு வருஷம் அரை டசினுக்கு மேல் பெத்துப் பெருக்கி விட்டார். பெரிய குடும்பஸ்தர். பொடி பொட்டைகளாக மொத்தம் ஆறுக்கு அண்ணன் அப்பன். இந்த ஆறும் போக அவவுக்கு வயிறு அழித்தது’ மூன்று உருப்படியாகப் பார்த்தால் கணக்கு ஒன்பதாகிறது. அவவுமோ வருஷக் கொத்தி. இந்தக் கோசும் அவ பெறு மாதம். ‘ஏழு மாசத்தில் ஆறு கடக்கப்படாது’ என்று நாலு பத்துத் தெரிந்தவர்கள் எழுதியிருந்தார்கள். என்றாலும், அண்ணர் கடைசிவரை வைத்திருந்து விட்டுப் போன கிழமைதான் பெறுவுக்காக அவவை யாழ்ப்பாணத்தில் விட்டு வந்து ஆறியிருக்கிறார்.
வந்து கால் ஆறவில்லை, அதற்கிடையில் இந்தக் கூத்து. அது அந்தப் போடிங்கின் சாக்குக் கட்டுவால் வந்த சூடோ, அவரோடு இருந்த தங்கராசா மாஸ்டரின் பழக்க வழக்கத்தால் ஏற்பட்ட தோஷமோ சொல்ல முடியாது. தங்கராசா மாஸ்டர் பள்ளிக்கூடச் சட்டம்பியல்ல, அவருக்கு இவர் ‘மாஸ்டர்’ அவ்வளவுதான்.