ஆய்வுச் சுருக்கம்

தமிழ்ச் சமூகத்தில் அறம் சார்ந்த கருத்துக்கள் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒன்று. பண்பட்ட வாழ்வியலைத் தொடங்கிய காலந்தொட்டு அறத்திற்கும் அறம் சார்ந்த வாழ்வியல் முறைக்கும் தமிழ்ச்சமூகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன . அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியைத்  திருக்குறளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அறத்தின் மையமாக இருக்கும் இல்லறம்,  அந்த இல்லறத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? இல்லறத்தினுடைய மேன்மைகள் எவை? இல்லறத்தின் தேவை என்ன? என்பன போன்ற சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் விதமாக அன்றே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளன.  அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது

குறிச்சொல் – திருக்குறள்,  இல்லறம்,  அறம்,  துறவறம்,  மனத்தூய்மை,  தர்மம்,  நீதி,  நேர்மை.

முன்னுரை

அறம் என்ற சொல்லுக்கு ‘தருமம்,  புண்ணியம்,  இல்லறம்,  அறக்கடவுள்’  என்ற பல பொருள்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக நேர்மையாக இருப்பது,  மனசாட்சிப்படி  நடந்து கொள்வது,  நீதி நெறிப்படி வாழ்வது என்பன போன்ற தனிமனித - சமூக ஒழுக்கம் சார்ந்த நடத்தையைப் பற்றிக் குறிக்கும் சொல்லாக உள்ளது. அதாவது மனம், சொல், செயல் என்ற மூன்று முறைகளில் மனிதனிடம் வெளிப்படும் ஒழுக்கப்பண்பே அறம் எனப்படுகின்றது. இது இல்லறம் துறவறம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து இருக்கின்றது. இவற்றில் இல்லறத்தைப் பற்றியும் அவ்வறத்தின் மேன்மை பற்றியும் திருக்குறளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. துறவறத்திற்கும் அத்துறவறத்தை மேற்கொள்ளும் துறவிக்கும் உற்ற உதவிகளைச் செய்யும் இல்லறத்தின் மேன்மை குறித்த ஒரு பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

அறமும் – இல்லறமும்

மனிதன் செய்யக்கூடிய அறங்களில் எல்லாம் உயர்ந்தது மனத்துக்கண் மாசு இல்லாமல் இருப்பதே. இதன் கருத்தாவது ஒரு மனிதன் எத்தகைய செயலைச் செய்தாலும் அந்தச் செயல் செய்வதற்கு முன் அது பற்றிய  சிந்தனை அவன் மனதில் தோன்றும். அதன் தொடர்ச்சியாகத்தான் அதன் செயல்வடிவம் நிகழும். அதாவது மனதில் தோன்றுவது எண்ணங்கள்தான் வாய்வழியாக வார்த்தைகளாகவும், உடல் உறுப்புகள் வழியாகச் செயல்களாகவும் வெளிப்படுகின்றன.  

அதாவது, எந்த ஒரு செயலைச் செய்வதாக இருந்தாலும் அது குறித்த திட்டமிடல் அல்லது அச்செயல் குறித்த சிந்தனை முதலில் தோன்றும். அதன்பிறகுதான் அச்செயல் செயல்படுத்தப்படும். ஆக,  மனம் சிந்திக்க அச்சிந்தனையின் செயல் வடிவத்தை உடல் செயல்படுத்துகிறது.  எனவேதான்

மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (குறள்.34)

என்று குற்றமற்ற நல்ல மனமே அறங்களில் எல்லாம் உயர்ந்தது என்பதாகத் திருக்குறள்  குறிப்பிடுகிறது.

ஆனால், அதே திருக்குறளில் ‘அறமெனப்பட்டதே இல்வாழ்க்கை (குறள்.49)’ என்று வேறொரு இடத்தில் அறம் என்ற சொல்லுக்கான பொருளே இல்வாழ்க்கை என்பதுதான் என்றும் கூறுகிறது.

இது பார்க்க முரணாகத் தோன்றினாலும் இரண்டும் உண்மைதான். காரணம் இல்வாழ்க்கை என்பதுதான் அறம் என்ற சொல்லுக்கான பொருளை நிர்ணயம் செய்கிற இடமாக அமைகின்றது. மனம், வாக்கு, காயம் என்ற மூன்று செயல்பாடுகளும் ஒன்றின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துகிற ஓரிடமாகவும் அமைகின்றது.

இல்லறத்தின் மேன்மை

ஒரு மனிதன் தான் தன் மனைவி அல்லது கணவன் குழந்தைகள் என்று ஒரு அமைப்பாக ஒரு நிலையான குடியிருப்பில் வாழ்வதற்கான முக்கியமான அல்லது முதன்மையான காரணமே மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே என்கிறது திருக்குறள். அதாவது,

இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு (குறள்.80)

இத்தகைய இல்வாழ்க்கையை வ‍ழ்பவர்  ‘உறவினர்கள்,  நண்பர்கள் மற்றும் எளியவர்க்கு உற்ற துணையாக  இருப்பர். துறவிகளுக்கும்,  பசியால் வாடுபவர்க்கும், மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்பவராக இருப்பர். மூதாதையர்களை வணங்குதல், தெய்வ வழிபாடு, விருந்தினரை உபசரித்தல், சுற்றத்தவருக்கு உதவுதல் என்பதை எல்லாம் முடித்த பின்னர் கடைசியாகத்தான்  தனக்கானதைப்  பற்றிச் சிந்திப்பவராக இருப்பர்’ (குறள்.41- 43) இப்படிப்பட்ட சிறப்புகளை எல்லாம் கொண்டிருப்பதால்தான் ‘அவர் துறவியை விட மேலானவர்’ {குறள்.46-48] என்று சுட்டப்படுகிறார்.     

உற்றார் உறவினர் உடன் பிறந்தவர்கள் பெற்றெடுத்த தாய் தந்தையர் என அனைவரையும் விட்டு விலகி சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாழும் துறவியின் வாழ்க்கையானது சமுகத்திற்கு எத்தகைய பயனைத் தரப்போகிறது என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. ஆனால், துறவிக்கே உதவி செய்யக்கூடிய ஒருவராக இல்லறத்தார் விளங்குகிறார். எனவே துறவியைக் காட்டிலும் இல்லறத்தவன் மேன்மையானவன் என்பதில் எவ்வித ஐயமும் கொள்ளத்தேவை இல்லை.   ஏனெனில் முற்றும் துறந்தவன் சுயநலத்தோடு செயல்பட இல்லறத்தை மேற்கொள்பவன் பொது நலத்தோடு செயல்படுகிறான்.  

ஆக இல்லறத்தின் அடித்தளமாக விளங்குவது அன்பு. அந்த அன்பின் பயனாக அறச்செயல்கள் நடைபெறுகின்றன. அறத்தின் முதன்மையானது பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக நினைத்து அத்துன்பத்தைப் போக்க முயற்சித்தல் என்பதாக இது ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்து செயலாற்றுகின்றது.

அறம் செய்வதனால் இன்பம் உண்டாகின்றது. அவ்வாறு உண்டாகும் இன்பத்திற்கு நிகரான இன்பம் வேறொன்றில்லை (குறள்.39). எனவே இயன்றவரை அறம் செய்ய வேண்டும். அப்படி அறம் செய்வதால் கிடைக்கும் நன்மையைவிடச் சிறந்த ஒன்று வேறில்லை. எனவே அறத்தை மேற்கொள்ள வேண்டும்  என்கிறது திருக்குறள். மேலும்,  அறம் செய்வதால் கெட்டோம் என்று வருந்தும்  அளவிற்கு யாரும் தீங்கினை அடையவில்லை. எனவே முடிந்த அளவு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறம் செய்ய வலியுறுத்துகின்றது.

அறம் எனப்படுவது யாது?எனக் கேட்பின்
மறவாது இது கேள் மண் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்................... (மணிமே. 25;228-231)  

என்று துறவு நூலான மணிமேகலையில் மக்களின் பசிப்பிணியைத் தீர்ப்பதே முதன்மையான அறமாகச் சுட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

‘உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்கவேண்டும் என்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால் உணவுப்பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்’ (புறம்.18) எனச் சங்க இலக்கியம் கூற அதற்கு நேர் எதிராக ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ என்கிறது மணிமேகலை. அதாவது, துறவுநூல் என்று அடையாளம் காணப்படும் மணிமேகலை சமுதாய வாழ்வின் அடிப்படை நெறியாகிய இல்லறத்தைத் திடமாக வற்புறுத்துகின்றது. 'பத்தினி இல்லோர் பல்லறம் செயினும் புத்தேள் உலகம் புகார்' ( மணிமே.22;117- 18) என்ற அடிகளில்,  இல்லற வாழ்வை ஏற்காதவர் என்ன அறம் செயினும் பயனில்லை என்பதை வற்புறுத்திய காட்டுகிறது. மேலும்,  துறவியாகிய மணிமேகலையின் கையுள்ள வெற்று 'அமுதசுரபி' சிறந்த இல்லறத்தாளாகிய ஆதிரையின் கையினாலே சோறிடப்பட்ட பிறகே எடுக்க எடுக்கக் குறையாத நல்ல உணவைத் தந்தது. மேலும், துறவறத்தினையும் அதனோடு சார்ந்த பிறவற்றையும் அறமெனக் காட்டாது, உலகில் இன்றியமையாத உணவினை அளிக்கும் சிறப்பினையே அறமெனக் காட்டுகிறது மணிமேகலை.

சங்கப் பாடல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பும் தலைவன் ‘இல்லறத்தின் அறமே விருந்தோம்பல் என்றும். விருந்தினர் உண்டு எஞ்சியதைத் தலைவியே உன்னோடு நான் உண்டு மகிழ்வதே இன்பமாகும் (குறிஞ்.பா.200-15)’ என்று கூறுவதான இடமும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்று.

தர்மங்களை மதித்து நடப்பவன், நல்ல வழியில் பொருளைச் சம்பாதித்து வாழ்க்கை நடத்துபவன்,  குற்றமற்ற இன்பங்களை விரும்புபவன்,  உயிர் பற்றியும் கவலை கொள்ளாமல் பிறருக்கு உதவுபவன் ஆகிய நான்கு விதமான நற்பண்புகளைக் கொண்டவர்களைத் துணையாகக் கொள்ளவேண்டும்.

இப்படியான காரணங்களால்தான் அறங்களில் எல்லாம் சிறந்தது ‘மாசில்லாத மனமே’ என்று சொல்லும் திருக்குறளும் கூட ‘அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று இல்லறத்தின் மேன்மை பற்றி விரிவாகப் பேசுகிறது.

முடிவுரை

நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைத்தையும் பண்டமாக பார்க்கிற போக்கு நிலவுகிறது. உலகமயமாதல் நவீனமயமாதல் என்ற வணிக மயமான இன்றைய காலகட்டத்தில் நீதி, நேர்மை, உண்மை, சத்தியம், தர்மம் என்பன போன்ற சொற்கள் புறக்கணிக்கக் கூடியவையாக மாறிவிட்டன. இந்தப் பின்னணியில்தான் நாம் தமிழனுடைய அறவியல் சிந்தனை பற்றித் திரும்பிப் பார்க்க வேண்டி உள்ளது. அப்படிப் பார்க்கையில் இல்லறம் x துறவறம் என்ற இரண்டு பிரிவாக நாம் நம்முடைய அறவியல் சிந்தனை மரபு இருந்தது என்பதைத் திருக்குறளில் முன்வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகின்றது. அவற்றில் துறவரத்தைக் காட்டிலும் இல்லறம் மேன்மையானதாக விளங்குகின்றது. எனவேதான் இல்லறத்தின் இன்றியமையாமை குறித்துத் திருக்குறள் விரிவாக பேசுகிறது. ஏனெனில் இல்லறந்தான் தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற இந்த மனித வாழ்க்கைச் சங்கிலியின் மையமாக விளங்குகிறது. எனவே இல்லறம் நல்லறமாக விளங்கினால் சமூகமாகத்தில் மகிழ்ச்சி பொங்கும். அன்பு நிலைபெறும். அன்பின் நிலைகலனாக விளங்கும் இல்லறமே தமிழனின் நல்லறம் என்பது திருக்குறள் முன்வைக்கும் அறவியல் சிந்தனையாக உள்ளது.

பயன்பட்ட நூல்கள்

திருக்குறள், மணக்குடவர் உரை, 1955 (முதற்பதிப்பு), மலர் நிலையம், சென்னை - 600 001.

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், 1976, மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை.

திருமகள் தமிழ் அகராதி, 2007(மூன்றாம் பதிப்பு), திருமகள் நிலையம், தி.நகர், சென்னை - 600 017.

பதினண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும் (முதல் தொகுதி), 2022 (மூன்றாம் பதிப்பு), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 600 017.

பத்துப்பாட்டு மூலமும் உரையும் (பகுதி - 2), முனைவர் இரா. மோகன் (உ.ஆ.), 2004 (மூன்றாம் அச்சு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

மணிமேகலை (தெளிவுரை), துரை.தண்டபாணி (உ.ஆ), 2019 (எட்டாம் பதிப்பு), உமா பதிப்பகம், சென்னை - 600 001.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R