கடந்த மார்கழி மாதம் 6ம், 8ம் திகதிகளில் சிலப்பதிகாரம் ஒரு முழு நீள அரங்க அளிக்கையாக மெல்பேண் - டான்டினோங் Drum Theatre இல் அரங்கேறியிருந்தது. தமிழ் நாடக உலகில் நீண்ட காலமாக பாராட்டுப் பெற்ற பல நாடகங்களை எழுதி, இயக்கிய மாவை நித்தியானந்தன் இந்த அரங்கப் பிரதியை எழுதித் தயாரித்திருக்கிறார். நடனக் கலைஞர் திருமதி பகீரதி பார்த்திபன் இதனை இயக்கியிருந்தார்.
சிலப்பதிகாரம் தமிழ் காப்பியங்களுள் மிக பிரசித்தமானது என்பதுடன் நாடகத் தன்மை கொண்ட படைப்பு என்பதால் நாடகக் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால்
பெரும்பாலான காப்பியங்கள் அரசனையோ அல்லது தெய்வம் ஒன்றையோ பிரதானமான பாத்திரமாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம், கோவலன் என்ற குடிமகனையும் மனைவி கண்ணகியையும் பற்றியே சொல்கிறது. இன்னும் குறிப்பாக கண்ணகியின் நீண்ட பயணத்தின் கதை இது.
சோழநாட்டில் பூம்புகாரில் பிறந்து, பாண்டிய நாட்டில் மதுரையில் நீதிகேட்ட கண்ணகி இறுதியாக சேர நாட்டை சென்றடைந்து அங்கேயே உயிர் துறந்ததாக கதையில் வருகிறது. ஆனால் நேரம் கருதி மதுரையை ஏரிக்கும் காட்சியுடன் இந்த அரங்கம் நிறைவுற்றது.
- மாவை நித்தியானந்தன் -
இளங்கோவடிகளின் இந்தக் காப்பியம் இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப் பட்டிருப்பதால் பார்வையாளர்களை எல்லாவித உணர்வுகளுக்கூடாகவும் இந்த அரங்கு இழுத்துச் செல்கிறது. சாதாரண அடித்தட்டு மக்கள் முதல் வணிகர்கள், அரசர்கள் என்று எல்லாவித வர்க்கத்தினருக்குள்ளும் ஊடுருவிச் செல்கிறது கதை.
அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, தெய்வ வழிபாடுகள், சடங்குகள், விழாக்கள் என்று குறிப்பாக எமது இளந்தலைமுறையினரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பல விஷயங்கள் இதில் உள்ளன. இந்த அரங்கில் அவர்களும் பங்கு பற்றியது இங்கு குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று.
முன்னரெல்லாம் சிலப்பதிகாரத்திலிருந்து சில பகுதிகளை மட்டுமே நடித்து காண்பிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த தயாரிப்பில் முக்கியமான பாகங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு இனிய அரங்க அனுபவத்தை தந்தது இந்த படைப்பு.
சிலப்பதிகாரத்திலுள்ள மரபுச் செய்யுள்களை சாதாரண மக்களுக்கு விளங்க கூடிய பாடல்களாகவும், உரையாடல்களாகவும் அரங்கேற்றுவதுதான் இதிலுள்ள சவால்.
இந்தச் செய்யுள்களை மக்களுக்குப் பரிச்சியமான கூத்து இசைக்கும், நாட்டார் பாடலுக்கும் பொருந்தக்கூடிய எளிமையான பாடல் வரிகளாக மாற்றி எழுதி மாவை நித்தி இந்த அரங்கப் பிரதியை தயாரித்திருக்கிறார். கிட்டத்தட்ட 80 இனிய பாடல்கள் இதிலுள்ளன.
கதா பாத்திரங்களுடன் இடையிடையே ஆடலுனுடன் கதை சொல்லும் பாணியில் பாடகர்களையும், அதைவிட உரைஞர்களையும் பயன்படுத்தி கதையை நகர்த்தி செல்கிறார். பாடகர்கள் தேவைக்கேற்றவாறு பாத்திரங்களாகவும் மாறுகின்றனர்.
சில இடங்களில் காட்சிக்கு இன்னும் பொருத்தமான நடன அமைப்பு இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
ஆங்கிலத்திலும், தமிழிலும் உரைஞர்கள் கதையை முன்கூட்டியே சொன்னதால் மொழிப்பிரச்சினையின்றி அனைவரும் - சிறார்கள் உட்பட இலகுவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
மெல்பேன் நகரிலுள்ள நாற்பத்தியேழு நடிகர்கள், மெல்பேன், சிட்னி, கன்பராவை சேர்ந்த இசைக் கலைஞர்கள் மற்றும் வாத்திய இசைக்கலைஞர்கள், பின்னணியில் ஒப்பனை, மேடை அமைப்பு, ஒலி, ஒளி தொழிநுட்பக் கலைஞர் இணைந்து அளித்த அரங்காற்றுகையில் பாரதி பள்ளியில் கற்ற முன்னாள் மாணவர்கள் (பலர் இப்போது பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள்) ஆசிரியர்கள், பெற்றோர் என்று பல தரப்பினரும் நடித்திருந்தார்கள்.
இடைவேளைக்கு முன்னர் வரும் கோவலன், கண்ணகி பாத்திரங்களை வயதில் குறைந்தவர்களாக காட்டியது இளங்கோவடிகளின் காப்பியத்தில் கோவலன், கண்ணகி பதினாறு, பன்னிரண்டு வயதில் மணம் புரிந்தமைக்கு மேலும் வலு சேர்க்கும் உத்தியாகவும் அமைந்தது.
இடைவேளைக்கு பின்னர் வரும் கோவலன், கண்ணகி பாத்திரமேற்ற கோவலன், கண்ணகி இதைவிட பொற்கொல்லன் ஆகியோர் நடிப்பில் பாத்திரங்களின் குணவியல்புகளை உள்வாங்கி நடித்திருந்தமையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
சிறுதெய்வ வழிபாட்டு நடனங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், ஈழத்து கூத்து ஆட்ட வடிவங்களுடன், பரதத்தையும் இணைத்து, பாரம்பரிய இசை, நாட்டாரிசையுடன், கூத்து இசையையும் கலந்து சிலப்பதிகாரம் அரங்கேறியது ஒரு சிறப்பம்சம்.
நடனக் கலைஞர் பகீரதி, இசை கலைஞர்கள் அனுராதா, சிறிபாலன், தமிழ்ச்செல்வி ஆகியோர் இதில் பங்களித்திருந்தார்கள்.
இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இளங் கலைஞர்கள் ஹார்மோனியம், வயலின், மிருதங்கம், ஓக்டொபாட் வாத்திய இசை வழங்கியது இங்கே குறிப்பிட்டாக வேண்டியதொன்று.
குறிப்பாக இந்த வாத்தியங்களினதும், பாடல்களினதும் இடைவெளியேதுமில்லாத தொடர்ச்சியான இசை சென்று கொண்டேயிருக்க, நடிகர்கள் ஆடலுடன், பாடி நடிப்பது என்றால் இது பல தொடர்ச்சியான ஒத்திகைகளுக்குப் பின்னரே சாத்தியமாகும். அதுவும் இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு குறையாத ஒரு மேடை நிகழ்வில் அனைத்துத் தரப்பினரினதும் அர்ப்பணிப்பின்றி இது சாத்திமில்லை.
ஆம். அரங்காற்றுகைக்கு 5 மாதங்களுக்கு முன்னரே ஒத்திகைகள், பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தன. இவ்வளவு கலைத்திறமைகளை, மேடையமைப்பு, ஒலி, ஒளி, ஒப்பனை, மற்றும் தொழிநுட்பத் திறமைகளை இணைத்து ஒரு கலைப் படைப்பை அரங்கேற்றுவது பெரிய சவால்தான். அதை துணிந்து மாவை நித்தி கையிலெடுத்திருக்கிறார்.
காட்சிகளுக்குப் பொருத்தமான தெருக்கள், பாலைகள், சோலைகள், ஆறுகள், மடங்கள், மனைகள், அரண்மனைகள் என்று பின்திரையில் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
காட்சிகளுக்கு தகுந்தவாறு மேடையின் வெவ்வேறு பகுதிகளில், பொட்டொளிகள், வர்ண ஒளிகள் என்று அந்தந்த காட்சி மனநிலைக்கான ஒளிகள் பாய்ச்சப்பட்டு பார்வையாளரை அதே மனநிலையில் தக்கவைத்துக் கொண்டிருந்தன.
துல்லியமான ஒலியமைப்பு எந்த பிசிறுமில்லாமல் கூட வந்து கொண்டிருந்தது. சிறந்த நவீன தொழிநுட்ப வசதி கொண்ட Drum Theatre இன் இந்த வாய்ப்புகள் அனைத்தையுமே பயன்படுத்திய சிலப்பதிகாரம் தயாரிப்பில் செழுமை பெற்ற படைப்பாக அளிக்கை செய்யப்பட்டது.
இதை அங்கீகரிப்பதுபோல இரண்டு அரங்காற்றுகைகளின் முடிவிலும் பார்வையாளர் எழுந்து நின்று கரகோசம் செய்து தமது பாராட்டைத் தெரிவித்தத்தைக் காண முடிந்தது.
அவுஸ்திரேலியத் தமிழ் நாடக அரங்கில் மாவை நித்தி ஒரு இடைவெளியின் பின்னர் மீண்டும் வளர்ந்தோருக்கான அரங்காற்றுகைக்குத் திரும்பியிருக்கிறார் என்பதைக் காண முடிந்ததது. இந்த இடைக்காலத்தில் அவர் சிறுவர் நாடக அரங்கில் தனது கவனத்தைச் செலுத்தி பாரதி பள்ளி மூலம் அதனை நிகழ்த்தி வந்திருந்தார்.
அதுவும் விஷேஷமாக தமிழ்க் காப்பியமொன்றை இந்தத் தடவை முதல் முறையாக அவர் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது முன்னர் வெளிவந்த படைப்புகள் அனைத்துமே சமூக, அரசியல் கருத்துக்களை வலிமையாகவும், நையாண்டி கலந்தும் சொன்ன படைப்புக்களாக இருந்தன.
1970 களில் மாவை நித்தியின் 'திருவிழா' எனற வீதி நாடகம் வடபகுதியில் பரவலாக நிகழ்த்தபட்டதை அறிந்திருக்கிறோம்.
1980 களின் பிற்பகுதியில் மாவை நித்தி மெல்பேணில் இயக்கி வந்த கலை வட்டம் ஊடாக அவர் எழுதித் தயாரித்த, 'ஐயா எலக்சன் கேட்கிறார்', 'கண்டம் மாறியவர்கள்', 'அம்மா அம்மா' போன்ற நாடகங்கள், மற்றும் இசையும் கதையும் பாணியில் அமைந்த 'கொழும்பு மெயில்', 'தொலைபேசி மான்மியம்' போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதை விட, ‘கிராமங்களும் கோலங்களும்' என்ற நாட்டிய நாடகமொன்றையும் தயாரித்திருந்தார்.
அவரது படைப்புகளுக்கு அப்போது பெரும் வரவேற்பு இரூந்ததால் மேற்சொன்ன பட்டியலிலுள்ள சில நாடகங்கள் மெல்பேன், சிட்னி கன்பரா நகரங்களிலும் அரங்கேறின.
ஈழத்திலும், அவுஸ்திரேலியாவிலும் மட்டுமல்லாது ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களிலும் மாவை நித்தியின் நாடகங்கள் பல தடவை மேடையேறியதையும், நாடக நூல்களில் அவரது நாடகப் பிரதிகள் பிரசுரமாகியிருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.
தமிழில் அவர் குறிப்பிடத்தக்க நாடக பிரதி எழுத்தர் மட்டுமல்லாது நல்ல கவிஞர் கூட. இந்த சிலப்பதிகார அரங்கில் அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
இந்திர விழாவுக்காக அலங்கரிக்கப்படட பூம்புகாரை வர்ணிக்கையில் ;
பளபள ஒளியும் கலகல ஒலியும் பலதிசைகளிலும் நிறைந்திடவே
நிலவுலகெல்லாம் பெருவியப்படைய இந்திரவிழாவும் தொடர்ந்ததே
இப்படி எளிமையாகவும் அதே சமயம் காட்சியின் சித்திரத்தை மனதில் கொணரும் படியும் பாடல் வருகிறது.
தோழி வசந்த மாலையிடம் மலர் மாலையொன்றைக் கொடுத்து மாதவி சொல்வது போல கச்சிதமாக இந்த வரிகளில் பாடலை அமைத்திருந்தார்
என்னருமை மாலையே இம் மாலையை நீ பெறுவாய்
என்னவரைத் தேடி அவர் கரங்களிலே தருவாய்
இறுதியில் பாண்டியன் அரண்மனை வாசலில் நின்ற கண்ணகியை இப்படி வர்ணிக்கிறார்.
வாயிலிலே வந்து நிற்கிறாள் - பெண்ணொருத்தி
கோபமாகக் குமுறி நிற்கிறாள்
காளியல்ல துர்க்கையல்ல
கொற்றவையும் அல்ல அவள்
காற்சிலம்பைக் கையில் ஏந்தி
கடுஞ்சினத்தைக் காட்டிக் கொண்டு - வாயிலிலே
கலைஞர்கள் அல்லது இலக்கியவாதிகள் தமது ஆன்ம சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டியே படைப்பு ஒன்றை உருவாக்குவார்கள். அது பிரசவ வேதனை என்று கூடச் சொல்வார்கள். ஆனால் படைப்பு வெளிவந்ததும் அல்லது மேடையில் நிகழ்த்தப்பட்டதும் அவர்களால் அதினின்றும் இலகுவாக விடுபட்டுவிட முடியும், ஆனால் மறுபுறத்தில் அது பார்வையாளருக்கு அல்லது வாசகர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் அவர்கள் மனதில் நீண்ட நாளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மீண்டும் மீண்டும் மக்களை அது பற்றிப் பேச வைக்கும். இதுவே நல்ல படைப்புகளுக்கு இலக்கணம். மாவை நித்தியின் சிலப்பதிகாரத்துக்கும் இது பொருந்தும்.
சிலப்பதிகாரத்தின் மூன்றாவது அரங்காற்றுகை
இடம் : டான்டினோங் Drum theatre
காலம்: February 8th Saturday
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.