அஞ்சலி: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின - தன் கொள்கையில் நோக்கில் தெளிவும் திடமும் மிக்க தலைவர்களில் ஒருவர். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைக்குரலாக ஒலித்த தென்னிலங்கை அரசியல்வாதி. - வ.ந.கி -
தென்னிலங்கை அரசியல்வாதிகளில் மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தனது கொள்கைகளில் தெளிவுடனிருந்தவர். திடத்துடனிருந்தார். நாடு இனவாதச் சேற்றில் மூழ்கியிருக்கையில் அதற்கெதிராகச் செயற்பட்டவர். நடைபெற்ற யுத்தத்திற்கு ஒருபோதுமே நிதிப்பங்களிப்பு செய்ய மாட்டேனென்று அவர் மேல் மாகாண சபையில் ஆற்றிய உரை முக்கியத்துவம் மிக்கது.
இலங்கையின் சிறுபான்மை மக்களின், குறிப்பாகத் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பற்றி, அவர்கள் அடைந்த இன்னல்கள் விடயத்தில் தெளிவுடனிருந்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின. எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். தனது உறுதியான , தெளிவான அவரது அரசியல் செயற்பாட்டால், நோக்கால் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் பல. பதவி இழந்தார். தலை மறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இவற்றாலெல்லாம் அவர் கலங்கி அடிபணியாமல் தான் கொண்ட கொள்கையில், சிந்தனைகளில் உறுதியுடன் இருந்தார். இதுவே அவரது மிக முக்கியமான ஆளுமை அம்சம்.