'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் ஓர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -
இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத் தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அண்மையில் அவரைப்பற்றி எழுதிய எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை பற்றி, 'அக்கினிக்குஞ்சு' பாஸ்கர், அமரர் எஸ்.பொ, ஓவியர் செள, ஓவியர் மூர்த்தி, ஓவியர் கனகலிங்கம் , கவிஞர் மஹாகவி, 'மஹாகவி'யின் குறும்பா, சில்லையூர் செல்வராசன், காவலூர் இராசதுரை, செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், மு.தளையசிங்கம், அவரது 'புது யுகம் பிறக்கிறது' (அரசு வெளியீடாக வெளியான சிறுகதைத்தொகுப்பு), யாழ் தேவன், சொக்கன், பத்மநாப ஐயர் என அவரது உரையாடல் பல்வேறு இலக்கிய ஆளுமைகளைத் தொட்டுச் சென்ற நனவிடை தோய்தலாக அமைந்திருந்தது.