நீலகிரி படகர்களின் மரபறிவில், மரபு மருத்துவத்தில் ‘காயிகல்லு’ - முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
- நீலகிரிப் படகர் -
வரலாற்றைவிட வழக்காறுகள் இன்றியமையானவை. ஒரு சமூகத்தின் நெடிய மரபும் பண்பாடும் வழக்காறுகளில் வாழ்கின்றன. மானுட சமூகத்தில் நடப்பிலுள்ள வழக்காறுகளில் உட்செறிந்துள்ள மரபறிவினைத் தேடிச்செல்வதும், உற்றுநோக்குவதும் இன்றைய தேவைகளுள் ஒன்று என்பதனைவிட காலத்தின் கட்டாயம் எனலாம். நிலவும் உடலியல், உளவியல் பிணிகட்கும், வாழ்வியல் பிணக்குகளுக்குமான தீர்விற்கு முன்னோக்கி ஆய்வதைவிடவும் பின்னோக்கி ஆய்வதே ஏற்புடையது என்பதில் மாற்றமில்லை. அவ்வகையில் நீலகிரியில் வாழ்கின்ற, யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக சான்றளிக்கப்பட்ட ‘படகர்’ இனமக்களிடையே வழக்கிலுள்ள ‘காயிகல்லு’ என்ற மருத்துவத் தன்மைமிக்க பொருளொன்றின் பன்முகப் பயனிலையையும் அதன் தொன்மையினையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.
நீலகிரியும் படகர்களும் -
ஆண்டில் ஒன்பது மாதங்கள் மழைபொழியும் இயல்புடையது நீலகிரி மலை. உலகின் மிக முக்கியமான பல்லுயிர்ச் சூழல் மண்டலமான இம்மலையின் முகடுகளிலும் அதற்கு சற்றுக்கீழும் படகர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி படுகு. இவர்களின் வாழ்வியல் ‘பண்டா – பதுக்கு’ என்ற இருநிலைகளில் அடங்கும். இவர்களின் மொழியில் ‘பண்டா’ என்றால் எருமை மந்தை என்றும், ‘பதுக்கு’ என்றால் வாழ்க்கை என்றும் பொருள். எருமை மந்தை பேணலையே ஆதி வாழ்வாகக் கொண்டிருந்த இம்மக்களின் பெயர்க்காரணம்கூட இதை அடியொற்றியதே. ‘பண்டுக’ (எருமை மந்தைகளை உடையவன்) என்ற சொல்லே ‘படுகா’ என்று மருவியதாகக் கருதலாம். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஆயர்களான பொதுவர்களுக்கும் படகர்களுக்கும்கூட எண்ணற்ற ஒப்புமையுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.