டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 7 - ஜோதிகுமார் -
ஒருமுறை, அவரது Yasnaya Polyanaவிலிருந்து, அவரது ‘எளிய மனிதர்களில்’ ஒருவரோடு நான் பயணம் செய்ய நேரிட்டது. இந்த எளிய மனிதர் கூறினார்: ‘கடவுளே என்ன இது… எப்பேர்ப்பட்ட மனிதர்… கண்டிப்பும்… நேர்த்தியும்… சீற்றமும்’. மேலும் கூறினார்: ‘ஏன். அவர் ஓர் அனார்க்கிஸ்ட்தான்’.
இந்த எளிய மனிதர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகவும், மிக பருத்த வயிற்றைக் கொண்டவராயும், பார்க்க பசிய இறைச்சியின் நிறம் கொண்ட தடித்த முகத்தைக் கொண்டவராகவும் இருந்தார்.
ஏன் இவர் டால்ஸ்டாயை ஒரு அனார்க்கிஸ்டாக காண்பதில் திருப்தி கண்டார்? இக்கேள்வியை ஆழ்ந்து அலசும் போதே, ரஷ்ய ஆன்மாவில் உள்ளடங்கும் ஆழ்ந்த ரகசியங்களையும் நான் கற்கக் கூடியதாக இருந்தது.
யாரொருவரையும் திருப்திபடுத்துவது என்றால், அது டால்ஸ்டாய்க்கு, கைவந்த கலையாக இருந்தது. ஒரு புத்திபூர்வமான பெண்ணை விட இதனை அவர், கச்சிதமாக நிறைவேற்றினார். பலதரப்பட்ட வட்டங்களுடன் கைகோர்த்தவர், அவர். ஒரே மேசையில் இவர்களுடன் தேநீர் அருந்தியவர்.
மாபெரும் கோமகன் நிக்கலாய், வீட்டுச் சாயம் பூசுபவன் இல்யா, ஒரு புரட்டஸ்தாந்து மதப்பிரிவைச் சார்ந்த பட்சுக், ஒரு இசைக்கலைஞன், ஒரு கோமகள், ஒரு கவிஞன்-இவர்கள் அனைவரையும் அவர் வெறித்து பார்க்க வைத்து விடுவார். Lao-Tse இன் (சீன தத்துவஞானி) தத்துவம் குறித்து அவர்களுக்கு விளக்க உரையாற்றி கொண்டிருப்பார். பல்வேறு இசைக்கருவிகளைக் கொண்டு ஒரு சேர்ந்திசை (Orchestra) செய்கையை இவர் ஒருவராக நிகழ்த்துவதாக, அது காட்சி தரும். ஒரு ட்ரம்ப், ஒரு ட்ரம், ஒரு புல்லாங்குழல், ஒரு எக்கார்டியன்-அனைத்தையும் இவர் ஒருவராகவே வாசித்து கொண்டிருப்பார்.