- இரண்டாவது உலகப்போரில், மரணமடைந்த 6,845 சோவியத் போர் வீரர்களுக்கான , பிரட்ரிஸ்லாவா நகரின் சிலாவின் என்ற இடத்திலுள்ள நினைவுச் சின்னம. -
புடாபெஸ்டில் எங்களது படகில் ஏறியதும் வரவேற்பு விருந்துடன், கப்பலில் வேலை செய்பவர்களுடன் எமக்கு அறிமுகம் நடந்தது. இந்த உல்லாசப்படகு போகும்போது அதாவது டானியுப்பையும் ரைன் நதியையும் இணைக்கும் நதி மெயின் நதி (main River) என்பார். இது பல இடங்களில் மிகவும் அகலமற்ற கால்வாய்கள் இருப்பதால் படகின் அகலம் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். சில இடங்களில் டொக் எனப்படும் பகுதிகளைக் கடக்க அரை மணி நேரம் செல்லும். நதி நீரை அடைத்து நீர்மட்டத்தை உயர்த்துவார்கள். ஜேர்மன்- பவேரியா பிரதேசத்திலே இந்த ஆறு உள்ளது . பல காலமாகக் கப்பல் போக்குவரத்து இந்த வழியாக நடப்பதால் இந்த நீர்ப்பாதை கவனமாக பராமரிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நதிகள் மிகவும் சுத்தமானவை. மிகவும் கடுமையான சட்டங்கள் இங்கு உள்ளது. நதிகளில் படகுகள் தரித்து நிற்கும்போது பயணிகளது கழிவுகள் தரித்து நிற்கும் இடங்களில் அகற்றப்படும். அதற்கான கொந்தராத்து நிறுவனங்களால் அதேபோல் உணவுகளும் புதிதாகக் கொண்டு வரப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது
நாங்கள் சென்ற நதிப் படகில் மூன்று தட்டுகள் உள்ளன. அங்கு வேலை செய்பவர்களை விட 200 பயணிகள் இருந்தார்கள். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளன.
அவுஸ்திரேலியாவின் படகுக் குழுமம் என்றபோதும் படகின் கெப்டன் உக்ரேனை சேர்ந்தவர். உணவுக்குப் பொறுப்பாக இருந்தவர் ரஸ்சிய நாட்டையும், பயணிகள் நலத்திற்குப் பொறுப்பாக இருந்த விக்ரோரியா என்ற இளம் பெண் பெலரூஸ் நாட்டையும் சேர்ந்தவள். படகின் பொறுப்பிலிருந்தவர் ஒரு போர்த்துக்கல் நாட்டவர். சமையல், பரிமாறல் , சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளில் கிழக்கு ஐரோப்பா, பிலிபைன்ஸ் நாட்டினர் வேலை செய்தார்கள். கப்பலில் வேலை செய்தவர்களைப் பார்த்தபோது ஒற்றுமையான ஒரு ஐக்கிய நாடுகள் சபைபோல் தெரிந்தார்கள். பயணிகளில் பெரும்பான்மையானோர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கனடா, அமெரிக்கா, பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள். இங்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களைப்போல் அறுபதைத் தாண்டியவர்கள், அத்துடன் பலருக்கு இதுவே முதல் பயணமாக இருந்தது.
நான் கனடாவில் வாங்கிய, கனடாவின் தேசிய சின்னமாகிய மேபிள் இலை கொண்ட நீல தொப்பியை அணிந்ததால் எல்லோரும் என்னை கனடாவில் எந்தப்பகுதி எனக் கேட்டார்கள். அது ஒரு விதத்தில் பலரோடு பேச வசதியாக இருந்தது. அவுஸ்திரேலியர்கள் உரத்துப் பேசுவார்கள் என்ற அபிப்பிராயத்தை மற்றைய நாட்டவர்கள் எல்லோரும் ஆமோதித்தனர் , அதை எனக்கு சொன்னபோது நானும் ஏற்றுக்கொண்டேன். ஒரு முக்கிய விடயம் எங்கள் தோல் நிறத்தில் நாங்கள் மட்டுமே என்பதால் நாங்கள் தனித்துத் தெரிந்தோம்.
அறைகள் சிறிதாக இருந்தாலும் ஐந்து நட்சத்திர விடுதிகள் போன்றவை. மேல்த்தட்டில் பல்கணியிருப்பதால் நதிக் கரைகளைப் பார்த்தபடி பயணிக்கலாம் என்று அதற்கு அதிகப் பணம் செலுத்தினாலும், எவ்வளவு நேரம் நதிக்கரையை பார்த்தபடி இருக்க முடியும் என்ற கேள்வி என்னிடம் பல முறை எழுந்தது.
இரவு முழுவதும் நதியில் ஓடி அதிகாலையில் கப்பல் தரிக்குமிடத்திற்கு வந்துவிடும். காலையில் உணவுக்கு முன்பாக விக்டோரியாவின யோகா வகுப்பு இருந்தது அது ஏற்கனவே யோகாவில் ஈடுபடும் சியாமளாவுக்கு பிடித்திருந்தது.
எனக்கு அங்குச் சென்ற முதல் நாளே இருமலுக்கான வைரஸ் அன்போடு தொத்திக்கொண்டது. சில நாட்களாக அதனது அணைப்பிலிருந்து விடவில்லை. ஆனால், அடுத்த இரண்டு கிழமையும் பெரும்பாலானவர்களை அந்த வைரஸ் நலம் விசாரித்தபடி இருந்தது. நல்லவேளையாக இருமலைத் தவிர அதிகமாகப் பாதிப்பில்லை .
2022, நவம்பர் மாதத்தில் சிட்னியில் 4600 பயணிகளுடன் நியூசிலாந்தில் இருந்து வந்த ( Majestic Princess) குருஸ் லைனர் வந்தபோது 900 பேருக்கு கொரோனா வந்து அதில் 28 பேர் இறந்தார்கள், மேலும் அவர்களால் சிட்னிக்கு அதிகளவில் கொரானா தொற்று வந்தது என்பது நினைவாகியது.
புடாபெஸ்டிலிருந்து இரவில் பயணம் செய்த படகு அடுத்தநாள் அதிகாலையில் சிலாவாக்கியாவின் தலைநகராகிய பிரடஸ்லாவா நகருக்கு வந்து சேர்ந்தது.
பிரட்ரிஸ்லாவா: சிலாவாக்கியா குடியரசு
இரண்டாவது நாளில் எங்கள் படகு தரித்த இடம் சிலாவாக்கியாவின் தலைநகரான பிரட்ரிஸ்லாவா (Bratisalava) சிறிய நகரமான போதிலும், பழமையானது நகரத்தை இலகுவாக நடந்து பார்க்க முடிந்தது .
காலையில் நகரத்தில் பல இடங்களையும் அதனது வரலாற்றையும் அறிய முடிந்தது . பல காலமாக ஹங்கேரியோடு இருந்து பின்பு துருக்கியரால் ஆளப்பட்டது, என்பதால் மக்கள் தொகையில் அதிகமானவர்கள் ஹங்கேரிய இனத்தவர்கள். பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தினர் பிற்காலத்தில் ஜேர்மனி படைகளின் வசம் இருந்தபோது நாஜி படைகளுக்கு எதிராகக் கொரில்லா யுத்தம் செய்த வரலாறு இவர்களுக்கு உள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்பு செக்கோஸ்லாவாக்யாவுடன் சமஷ்டி முறையில் இணைந்திருந்தது. 1990 ஆம் ஆண்டுகளின் பின்பாக தனித்தேசமாக ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நேட்டோ உடனும் இணைந்துள்ளது.
பிரட்ரிஸ்லாவா நகரில் புறநகரில் உள்ள ஒரு விவசாயியின் வீட்டிற்குப் போய் பல மணித்தியாலங்கள் பேசமுடிந்து. அவர்கள் அன்றாட வாழ்க்கையை அவதானிக்க முடிந்தது. அவரது வீட்டின் நிலவறையில் குடும்பத் தேவைக்காக வைன் தயாரிக்கும் இடம் இருந்தது. பல விடயங்களை அவர்களே செய்வதைப் பார்க்க முடிந்தது. இந்த பழக்கம் பல ஐரோப்பியர்களிடம் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
நாங்கள் சென்ற காலத்தில் சிலாவாக்கியா பிரதமரை ரோபட் ஃபிகோவை (Robert fico) எழுபது வயதான ஒருவர், உக்ரேனியாவிக்கு சிலாவாக்கியா ஆதரவளிக்க வில்லை என்ற காரணத்தால் துப்பாக்கியால் பல முறை சுட்டிருந்தார். காயப்பட்ட பிரதமர் மீண்டும் உயிர் பிழைத்து, தற்போது தனது பொறுப்பிலுள்ளார்.
எனக்கு அந்த விடயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக எங்களை அழைத்து சென்ற பெண் வழிகாட்டியிடம் துருவினேன்.
பிரட்ரிஸ்லாவா நகரில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பல முக்கியமானவர்களது சிலைகள் இருந்தன. ஆனால், எதிரில் ஒரு சுவரில் ஒரு உலோக பட்டயம் இருந்ததைக் காட்டி எனக்கு விபரத்தை அந்த வழிகாட்டிப் பெண் சொன்னார்.
21-2-2018 ஒரு பத்திரிகையாளரும் அவரது இணையரும் (Jan Kuciak and Martina Kusnirova) துப்பாக்கியால் வீட்டில் வைத்து மாபியா முறையில் எந்த ஒரு தடயமும் அற்று கொலை செய்யப்பட்டனர். பத்திரிகையாளர் பண மோசடிகளைப் புலனாய்வு செய்ததால் அந்த கொலை நடந்தது. அதன் பின்பு கொலையாளி கைதாகினார். விசாரணையில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், அவர் பணத்திற்காக இந்தக் கொலையைச் செய்திருந்தார் என்பதும் வெளியாகியது. அந்த கொலையின் பின்பாக முக்கியமான தொழிலதிபர் இருந்ததாக அறியப்பட்டது . இந்த விடயம் முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது அந்த தொழிலதிபருக்கும் அரசாங்கத்திலிருந்த தற்போதைய பிரதமருக்கும் தொடர்பு உள்ளதாகப் பேசப்பட்டதால் ஃபிகோ அரசிலிருந்து இராஜினாமா செய்தார். அந்த பத்திரிகையாளரும் அவரது இணையரதும் பெயரில் ஒரு நினைவுச் சின்னம் உள்ளது.
ஏதோ ஒரு காலத்தில் பத்திரிகையோடு சம்பந்தப்பட்ட எனக்கு உண்மையான பத்திரிகையாளர்கள் எப்படி உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள் என்பதை உணரமுடிந்தது.
நாங்கள் பிரட்ரிஸ்லாவா நகரைச் சுற்றிய கார் 45 வருடங்களுக்கு முன்பான சோவியத் மாடல் லாடா கார். அதிக அளவு புகையை வெளித்தள்ளியபடி ஓடியது. சோவியத் ஒன்றியத்தால் தொழிலாள வர்க்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட கார் என்றாலும் ஓட்டத்தில் குறை எதுவும் சொல்ல முடியாது. இன்னமும் உல்லாசப் பிரயாணிகளுக்காக அந்த காரை பாவிக்கிறார்கள். எனது வேண்டுகோளுக்கிணங்க, சாரதி அந்த காரின் காரின் பின்பகுதியைத் திறந்து காட்டினார். மிகவும் எளிமையான தயாரிப்பு. அக்காலத்தில் பல கிழக்கு ஐரோப்பா நாடுகளில் உற்பத்தி செய்தார்கள்.
இரண்டாவது உலகப்போரில், 6,845 சோவியத் போர் வீரர்கள் மரணமடைந்தார்கள். அவர்கள் பிரட்ரிஸ்லாவா நகரின் சிலாவின் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு அங்கு நினைவுச் சின்னம் வைத்திருந்தார்கள். குற்றின்மேல் அமைந்த அந்த நினைவுச் சின்னம் மிகவும் பிரமாண்டமானது. அந்த சின்னம் இன்னமும் ரஸ்யர்களால் பராமரிக்கப்படுகிறது. அந்த பகுதியில் வளரும் மரங்கள் கூட ரஸ்யாவிலிருந்து வந்தவை என அறிந்தேன். நாட்டுக்காகப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்வதிலும் அவர்களுக்கு மதிப்பளிப்பதிலும் மற்றைய நாடுகள் ரஸ்யர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். வெளிநாட்டவர்களான எங்களுக்கே அந்த இடத்தை பார்க்கச் சென்றபோது எங்களை அறியாது மனத்தில் மரியாதை உணர்வு உருவாகியது. தற்பொழுது இளம் காதலர்கள் சந்திக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் செக்கோஸ்லாவாக்கியா என்ற பெயரிலிருந்த நாட்டில் பிரிந்து சிலாவாக்கியா உருவாகியது. சிறிய நாடாக இருந்தபோதிலும் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு. எங்களது படகு இரவு மீண்டும் பயணிக்கிறது.
[ நதியில் பயணம் மேலும் தொடரும் ]