அஞ்சலிக்குறிப்பு : ஊடகவியலாளர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் விடைபெற்றார் ! - முருகபூபதி -
“ வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம் சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான்.
ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறு வேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றி பெற்றுவிடுகின்றன. “
இவ்வாறு அர்த்தம் பொதிந்த எழுத்தை எழுதிய எமது அருமை இலக்கிய நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் நேற்றைய தினம் கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி என்னை வந்தடைந்தபோது, அதிர்ந்துவிட்டேன்.