அ.ந.கந்தசாமி (1924 -1968) நூற்றாண்டு நினைவு தினக்கட்டுரை! 'மதமாற்றம்' ! - அ.ந.கந்தசாமி -
- மதமாற்றம் நாடகக் காட்சி -
- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.
மதமாற்றம் முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் அறுபதுகளில் ஆரம்பக்காலகட்டத்தில் மேடையேற்றப்பட்டிருந்தாலும் அப்போது அது உரிய வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னர் 1967இல் கொழும்பில் நாடகவியலாளர் லடீஸ் வீரமணியின் இயக்கத்தில், எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில் , ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன் போன்ற பலரின் நடிப்பில் மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நான்கு தடவைகள் அடுத்தடுத்து மேடையேறிச் சாதனை நிலை நாட்டியது.
அப்போது அது பற்றி நாடகாசிரியர் அ.ந.கந்தசாமி செய்தி (2.7.1967) பத்திரிகையில் சுய விமர்சனக் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அதனையும், நாடகம் பற்றி வெளியான விமர்சனக் குறிப்புகளையும், நாடகம் நூலுருப்பெற்றபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசங்லிங்கன் எழுதிய முன்னுரையினையும் இங்கு நீங்கள் வாசிக்கலாம். - வ.ந.கி -
'மதமாற்றம்' ! - அ.ந.கந்தசாமி -
சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.