தமிழர்களின் புத்தாண்டு எப்போது? - குரு அரவிந்தன் -
தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.
இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் பாராட்டாது, தென்னிந்தியாவில் இந்துக்கள் கடைப்பிடித்தது போலவே, சித்திரைத் திருநாளையே தமிழர்களின் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தைமாதத்தில் உழவர்களின் திருநாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த நடைமுறைகளில் மாற்றங்களைத் திடீரென ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல என்பது நாமறிந்ததே. மேலை நாட்டவரின் வருகையால் இலங்கைத்தமிழ் மக்கள் சிலரிடையே மதமாற்றங்கள் ஆங்காங்கே ஏற்பட்டதால், தமிழர்களில் மதம் மாறிய ஒரு பகுதியினர் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுவதைத் தவிர்த்திருந்தனர். ஆனாலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் இந்துக்களாக இருந்ததால், அந்த நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காது அவர்களுடன் கலந்து கொண்டனர்.
இராசிச் சக்கரத்தில் உள்ள 12 இராசிகளில் மேச ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதியதற்குக் காரணம் அவர்கள் இந்துக்களாக இருந்ததுதான். சித்திரை பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. நெடுநல்வாடை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சித்திரை பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. தொல்காப்பியத்தில் கார்காலமே தொடக்கமாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாக நச்சினார்க்கினியர் உரைநடையில் இருந்து அறிய முடிகின்றது. தமிழ் மாதங்கள் எல்லாம் ‘ஐ’ இலும் ‘இ’ யிலும் முடியும் என்பதையும் தொல்காப்பியரே குறிப்பிட்டிருக்கின்றார். இதேபோல தைமாதத்தையும் புதுவருடம் என்று நேரடியாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. இதனால்தான், வடமொழி ஆதிக்கத்தின் காரணமாகத் தென்னிந்திய இந்துக்களாக இருந்த தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். அந்த வழக்கமே இலங்கைத் தமிழர்களிடமும் இருந்தது. இது ஆங்கில நாட்காட்டியில் பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதியைக் குறிக்கும். சில ஆண்டுகளில் ஆங்கில நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதம் 13 ஆம் அல்லது 15 ஆம் திகதியிலும் இடம் பெறுவதுண்டு.