- நள்ளிரவிலும் சூரியன் துயிலாத நாடு எனப் பெயர்பெற்ற நோர்வே -
நோர்வே பற்றிய எதிர்பார்ப்புக்களை மனதில் சுமந்தபடி, அந்த நாடு தொடர்பான எங்களின் தனிப்பட்ட சரித்திரத்தை மீளவும் மீட்டிக்கொண்டு டென்மார்க் ஊடான எங்களின் நோர்வே பயணத்தை சங்கியும் நானும் ஆரம்பித்தோம்.
ரொறன்ரோவிலிருந்து புறப்பட்ட விமானம் குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே Copenhagen விமானநிலையத்தைச் சென்றடைந்தது. Stavangerக்கான எங்களின் விமானத்துக்கு ஐந்து மணி நேரக் காத்திருப்பு இருந்தமையால், ஏற்கனவே திட்டமிருந்தபடி, Copenhagen நகரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு அந்தக் காலை நேரத்தைப் (அது ரொறன்ரோவின் நடு இரவாக இருந்தபோதும்) பயன்படுத்தினோம். விமானநிலையத்திலிருந்து நகருக்குச் ரெயினில் செல்ல 20 நிமிடங்களே தேவையாகவிருந்தன.
நகரைச் சுற்றி நடந்தபோது, மேடும் பள்ளமுமாக இருந்த சமச்சீரற்ற நிலத்தில் மிகவும் இயல்பாக நிரைநிரையாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம்செய்தோரே எங்களின் கவனத்தை முதலில் ஈர்த்தனர். அதைப் பார்த்தபோது மிகுந்த வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அங்கிருந்த கட்டடங்களும் பல்வேறு வண்ணங்களில் கண்களுக்கு விருந்தாயிருந்தன என்றால் சடைத்திருந்த பெருமரங்களும் அவற்றில் கீழ் நிறைந்திருந்த நிழலும் மனதுக்கும் உடலுக்கும் மிகுந்த இதத்தைத் தந்தன. இப்படியாக இயற்கையையும் செயற்கையையும் ரசித்தபடி அங்கிருந்த உயர்ந்த மரங்களின் நிழலிருந்த வாங்குகளில் அமர்ந்து, அருகிலிருந்த bakery இல் வாங்கிய danish pastryகளைச் சாப்பிட்டோம். ரொறன்ரோவில் விற்கப்படும் danish pastryஐவிட, அது அதிக ருசியாக இருக்கிறதென்றா சங்கி. எனக்கோ கறுவாத் தூள் வாசத்துடன் இருந்த அந்தப் pastry அமிர்தமாக இருந்தது.
- கடற்கன்னிச் சிலை -
பின்னர் நடந்துசெல்லக்கூடிய தூரத்தில் எவையிருக்கின்றன என இணையத்தில் தேடிய சங்கி, அந்நாட்டு எழுத்தாளரான Hans Christian Andersen எழுதிய கதைகளிலேயே பிரபல்யமான கதையான The Little Mermaid இல் வரும் Mermaidஐப் பிரதிபலிக்கும் வகையில் Langelinie கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் Mermaid சிலை, Gefion Fountain, முதலாவது உலகப் போரின்போது உயிரிழந்த டென்மார்க் மாலுமிகளின் நினைவுச் சின்னமான Maritime Monument ஆகியவற்றைப் பார்க்கலாமெனக் கூறினா, அப்படியே அவற்றைப் பார்வையிட்டோம். இலைகள் தெரியாதளவுக்கு அழகாகப் பூத்திருந்த ரோஜாச் செடிகள் வழியெங்கும் வரவேற்றன.
- Gefion Fountain - நீரூற்று -
The Little Mermaid ballet ஒன்றைப் பார்த்துப் பிரமித்துப்போன Carl Jacobsen என்பவர், அதன் சிலையை வடிக்குமாறு Edvard Eriksen என்ற சிற்பியைக் கேட்டிருக்கிறார். அத்துடன் அந்த balletஇல் நடனமாடிய Ellen Priceஐ ஒத்ததாக அந்தச் சிலையை உருவகிக்க அவர் விரும்பியிருந்தார். ஆனால் சிலை நிர்வாணமாக இருக்கப்போகிறது என்பதை அறிந்த Ellen Price அதற்கு உடன்படவில்லை. முடிவில் அவரின் முகச் சாயலையும் சிற்பியின் மனைவியின் உடலையும் ஒத்ததாக அந்தச் சிலை 1913 இல் அமைக்கப்பட்டிருக்கிறது.
மூன்று மணி நேரத்தின் பின்னர், மீண்டும் ரெயின் ஏறி விமானநிலையத்தை அடைந்த நாங்கள் அன்று மதியம் Stavangerஐச் சென்றடைந்தோம். என் அம்மாவின் அண்ணாவின் இளையமகன் சர்மா Stavanger விமானநிலையத்திலிருந்து எங்களை அவரின் வீட்டுக்குச் கூட்டிச்சென்றார். சங்கி சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதால் கீரை, பருப்பு, வறை, உருளைக்கிழங்குக் குழம்பு, பொரியல், தயிர் என ருசியான சாப்பாட்டுடன் சர்மாவின் மனைவி கலா அங்கு காத்திருந்தார். இலங்கையிலிருந்தபோது சிறுவனாக இருந்த சர்மாவுடன் அதிகம் பேசியதில்லை, கலாவை முன்பு கண்டதில்லை. அப்படியிருந்தும் மிக இயல்பாக அவர்கள் பழகினர். கலாவும் நானும் ஏதோ நீண்ட காலச் சினேகிதர்கள் போலப் பலதையும் பேசிக்கொண்டோம், அப்படி உணர்வதாகவும் கதைத்துக் கொண்டோம்.
அவரின் பிள்ளைகள் மூவரும் பிறந்தபின்னர், கலா பல்கலைக்கழகம் சென்று பட்டம்பெற்று, பெற்றோலின் இரசாயன இயல்புகளை ஆராயும் வேலைசெய்கிறார் என்பது மிகவும் மெச்சத்தக்க விடயமாக இருந்தது. மூன்றாம் வகுப்பிலிருந்து படித்த ஆங்கிலத்தையே எங்களில் பலரால் சகஜமாகப் பேசமுடியாமல் உள்ளபோது, புதியதொரு மொழியை எப்படி இவர்கள் எல்லாம் படித்தார்களோ என அதிசயமாக இருந்தது. நல்லவேளை, ஆங்கிலமல்லாத மொழி பேசும் நாட்டில் நாங்கள் வாழவில்லையென நான் ஆசுவாசப்பட்டுக் கொண்டேன்.
சாப்பிட்டதும் குளித்து உடை மாற்றிக்கொண்டு அவர்கள் வீட்டுக்கருகிலிருக்கும் sola beachக்குச் சென்றோம். வெள்ளை மணலும் தெளிந்த வானமுமாக கடற்கரை மனதுக்கு மிக ரம்மியமாக இருந்தது. இருப்பினும் குளிர்காற்று ஜக்க்ற் ஊடாகவும் ஊடுருவிச் சற்று நடுங்கவைத்துக் கொண்டிருந்தது. கடல் நீரில் காலை நனைத்தால்தான் கடற்கரைக்கு வந்தமாதிரி இருக்குமென நான் சொல்லி முடிப்பதற்கிடையில் கலா தண்ணீருக்குள் போய்விட்டா. நானும் போகலாமென்ற தெம்பை அது தரவே கால்களை மெதுமெதுவாக நீரில் நனைத்தேன். காலடியில் உணர்ந்த அலையடிப்பு மிகச் சுகமான உணர்வைத் தந்தது.
- மூன்று தூண்கள்: Sverd i fjellஐப் பார்க்கச் சென்றோம். Sverd i fjell என்றால் பாறையில் நாட்டப்பட்ட வாள்கள் எனப் பொருள்படும். கிட்டத்தட்ட 10 மீற்றர் உயரமான மூன்று வெண்கல வாள்கள் -
பின்னர், அங்கிருந்து Sverd i fjellஐப் பார்க்கச் சென்றோம். Sverd i fjell என்றால் பாறையில் நாட்டப்பட்ட வாள்கள் எனப் பொருள்படும். கிட்டத்தட்ட 10 மீற்றர் உயரமான மூன்று வெண்கல வாள்கள் நுழைகளிக்கு (fjord) அடுத்துள்ள ஒரு சிறிய பாறையில் நடப்பட்டுள்ளன. 872 ஆம் ஆண்டில், ஒரே கிரீடத்தின் கீழ் நோர்வே முழுவதையும் ஒருங்கிணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க Hafrsfjord போரை நினைவுகூர இது அமைக்கப்பட்டிருக்கிறது. உயரமான வாள், வெற்றி பெற்ற மன்னர் Harald Fairhair ஐயும், மற்றைய இரண்டு சிறிய வாள்களும் தோற்கடிக்கப்பட்ட அரசர்களையும் குறிக்கின்றன. அத்துடன் அகற்றப்பட முடியாத நிலையில் திடமானதொரு பாறையில் வாள்கள் நடப்பட்டிருத்தல் அமைதியைக் குறிக்கிறது என்கிறார்கள்.
மன்னர் Harald ஒரு பெண்ணை விரும்பியிருந்ததாகவும், நோர்வே முழுவதையும் அவனின் அரசின் கீழ் கொண்டுவந்தால்தான் அவனைத் திருமணம் செய்வேனேன அந்தப் பெண் சொன்னதாகாகவும், அதுவரை தலைமயிரை வெட்டுவதோ சீவுவதோ இல்லையெனச் சபதமெடுத்த Harald முடிவில் முழு நோர்வேயையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார் என்றுமொரு கதை அங்குள்ளது. துச்சாதனனின் குருதியால் தன் கூந்தலை நனைக்கும்வரை, அவிழ்ந்த கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதுமில்லை, முடிவதுமில்லை எனச் சபதமெடுத்த மகாபாரதத் திரெளபதியை எனக்கு அது நினைவுபடுத்தியது.
அன்றைய நாளின் முடிவில், 350 - 550 AD காலத்திலிருந்த, அதாவது Iron Age பண்ணைகளைப் பிரதிபலிக்கும் Jernaldergårdenஐப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தோம். கற்களாலான அழகிய வீடுகள் அதிசயத்தைத் தந்தன.
வீட்டுக்குச் சென்றதும் குரக்கன் பிட்டும் மீன்குழம்பும் முட்டைப் பொரியலும் கலா செய்தா. உயிருடன் இருக்கும் salmon மீன்களை அவற்றின் வாழிடத்தில் முழுமையாகப் பார்த்திருந்தாலும் அன்றுதான் கறிக்கென வாங்கும் salmon மீன் ஒன்றை முழு மீனாகப் பார்த்தேன். நோர்வேயின் ஏற்றுமதிகளில் salmon மீன்களும் முக்கிய இடம்வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு 11 மணியாகியும் சூரியனுக்கு விடைபெறப் பிடிக்கவில்லை. நள்ளிரவுச் சூரியனைப் பார்க்க மிக நீண்ட தூரம் வடக்கே போகவேண்டியிருந்தது என்பதால் அதனை எங்களின் திட்டத்தில் சேர்க்கமுடியவில்லை. இருப்பினும் கிட்டத்தட்ட நடு இரவுச் சூரியனைப் பார்த்ததுபோலவே இருந்தது. காலையிலும், 4 மணிக்கு முன்பே சூரியன் விழித்து விட்டாரென்பது யன்னலுக்கு ஊடாகத் தெரிந்தது. சரி ஆறு மணிவரையாவது படுப்போமென இன்னொரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு எழும்பியபோது, காலை உணவாகக் கலா waffle செய்துவைத்திருந்தா. வீட்டில் செய்த அந்த waffleகளை நோர்வே நாட்டுக்குரிய Brunost எனப்படும் மண்ணிறச் சீஸ் சேர்த்துச் சாப்பிட மிகவும் நன்றாகவிருந்தது.
பால்கறக்கும் வேலைசெய்து கொண்டிருந்த Anne Hov என்ற நோர்வேயியப் பெண் செய்த ஒரு புது முயற்சியினால் இந்தப் புதுவகைச் சீஸ் உருவானது. இரும்புச்சட்டியில் whey (மோர்) கொதிக்கும்போது அதற்கு creamஐச் சேர்த்து திரவத்தன்மை 80 வீதமாகக் குறைந்த பின்னர் ருசிக்காக ஆட்டுப்பாலும் சேர்த்து இது உருவாக்கப்படுகிறதென இணையத்திலிருந்து அறிந்துகொண்டோம். வயிறுகுளிரச் சாப்பிட்டுவிட்டு, நோர்வேயின் மிகச் சிறந்த நுழைகளி எனப் பேசப்படும் 42 கிமீ நீளமான Lysefjordஇல் கப்பலில் பயணித்தோம்.
- Vålandstårnet towerஇல் ஏறிநின்று முழு Stavangerஐயும் 360 பாகையில் பார்த்து மகிழ்ந்தோம் -
ஏறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தின்போது உருவான கிட்டத்தட்டச் செங்குத்தாகவிருக்கும் 604 மீற்றர் உயரமான Preikestolen மலை மற்றும் நீர்வீழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாகவும், மனதுக்கு ரம்மியமாகவும் இருந்தன. அந்த மலையில் ஏறவேண்டுமென்பதே சங்கியின் விருப்பமாக இருந்தது, ஆனால் நான்கு மணி நேரம் தேவைப்படும் 8 கிமீ நெடுந்தூர சிரமமான நடையை என்னால் செய்யமுடியாதென்பதால் அதனைக் கப்பலில் இருந்து களித்தோம். பின்னர் Øvre Holmegate - The colourful street, Breiavatnet lake ஆகியவற்றைப் பார்த்துவிட்டு Vålandstårnet towerஇல் ஏறிநின்று முழு Stavangerஐயும் 360 பாகையில் பார்த்து மகிழ்ந்தோம்.
- கிட்டத்தட்டச் செங்குத்தாகவிருக்கும் 604 மீற்றர் உயரமான Preikestolen மலை -
மாலையில் மாமாவின் மற்ற மகனான ஜீவா வீட்டில் கொண்டுபோய் கலா விட்டுவிட்டார். ஜீவாவின் மனைவி விமலா சைவப் புரியாணியும் கோழிப் புரியாணியும் செய்துவைத்திருந்தார். பூக்கன்றுகள் சூழ, அவரின் வீட்டினையும் வளவையும் அவர் வைத்திருந்த முறை மிகவும் மனதைக் கவரக்கூடியதாக இருந்தது. அவர்களின் திருமணமான மகளும் கணவருடன் அங்கு வந்திருந்தார். ஜீவாவின் மனைவி மக்களை அங்குதான் முதன்முதலாகப் பார்த்தோம். ஜீவாவினதும் மனைவினதும் ஒருமைப்பாடும் மகிழ்ச்சியைத் தந்தது.
இரவுணவின் பின்னர் அவர்களுடன் தாவரவியல் பூங்காவைப் போய்ப்பார்த்துவிட்டு வந்து இரவு மூன்று மணிவரை இருந்து பத்தும் பலதும் கதைத்தோம். ஜீவா நன்கு கதைப்பார், முன்பு போலவே அவர் இருந்தார். அதனால் மிக இயல்பாக மனம் திறந்து கதைக்கக்கூடியதாக இருந்தது. முடிவில், காலை 8 :30 மணிக்கு Bergenக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறவேண்டுமென்பதால், இன்னுமொரு நாள் நின்றிருக்கலாமென்ற வருத்தத்துடன் படுக்கைக்குச் சென்றோம்.
- Copenhagen வீதிக்காட்சி -
[தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.