- Bryggen துறைமுகம் -
காலையுணவின் பின்னர், Bergenக்குச் செல்லும் 8 :30 மணி பஸ்ஸில் ஜீவாவும் விமலாவும் எங்களை ஏற்றிவிட்டனர். அந்த பஸ்ஸின் மேல் தட்டில் இடது பக்கமாக இருந்த முன் சீற்றில் இருந்து நோர்வேயின் இயற்கை அழகை ரசித்தபடி, வெவ்வேறு சுரங்க வழிகளினூடாகவும், பஸ்ஸுடன் சேர்ந்து இரண்டு தடவைகள் கப்பலிலும் நாங்கள் பயணித்தோம்.
நோர்வேக்கு வருகிறோம் என்றதும், “எங்கடை இடம் நல்ல வடிவான இடம், வாங்கோ, எங்கடை வீட்டிலையே தங்கலாம்” என கமலினி அன்புடன் வரவேற்றிருந்தா. நான்கு மணி நேரப் பயணத்தின் முடிவில், Bergenஇல் இறங்கியபோது கமலினி சொன்னதில் எவ்விதமான மிகைப்படுத்தலுமில்லை என்பது தெளிவாக, அந்த அழகில் நாங்கள் சொக்கிப்போனோம். மலைகளின் நடுவில் அங்கங்கே வீடுகள் செருகப்பட்டிருப்பது போன்ற அந்தக் காட்சி picture post card ஒன்றைப் பார்ப்பதுபோல இருந்தது. ‘என்னமோ ஏதோ’ என்ற கோ திரைப்படப் பாடல் இங்குதான் படமாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Bergen பஸ் நிலையத்துக்கு இளைய மகன் அஜனுடன் வந்த கமலினியுடன் அவரின் வீட்டைச் சென்றடைந்தோம். எதையெல்லாம் பார்ப்பதற்கு சங்கி விரும்புகிறா எனக் கேட்டபடி, சங்கிக்கு மிகப் பிடித்த உணவான பால் அப்பங்களைச் சுடச் சுட கமலினி பரிமாறினா. அவவுக்கு உதவியாகக் குசினியில் அஜனும் நின்றிருந்தது இன்றைய இளம் சமுதாயத்தில் நிகழும் மாற்றத்துக்கு ஒரு சாட்சியாக இருந்தது. சாப்பாட்டு மேசையில் இட்டலியும் கூடவே இருந்தது. விருந்தினர்கள் வருகிறார்கள் என்பதையறிந்த கமலினியின் சினேகிதி ஒருவரின் உபகாரம் அது என அறிந்தபோது, அந்தச் சினேகிதி அப்படிச் செய்யுமளவுக்குக் கமலினியும் அவவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறாரெனப் புரிந்தாலும், காலில் சில்லுப் பூட்டியதுபோல ஓடித்திரியும் நாங்கள் வாழும் ரொறன்ரோவில் இப்படியெல்லாம் நிகழுமாவென என்னை அது அதிசயிக்க வைத்தது.
மகாஜனாவில் 11ம்,12ம் வகுப்புப் படித்த காலங்களில் கமலினியும் நானும் பக்கத்துப் பக்கத்து வகுப்புக்களிலிருந்து படித்திருந்தோம். அதைவிட அவ, அம்மாவின் பழைய மாணவி என்றொரு உறவும் எங்களிடையே இருந்தது. இருப்பினும், புலம்பெயர்வின் விளைவு, கிட்டத்தட்ட 40 வருடங்களின்பின், நாங்கள் இருவரும் அம்மம்மாவாகிய பின்னர்தான், எங்களை மீளவும் சந்திக்க வைத்திருந்தது. பாடசாலை ஒன்றில் வேலைசெய்யும் கமலினி எங்களுக்காக இரண்டு நாள்கள் வேலைக்கு லீவு எடுத்திருந்தா.
மதிய உணவுக்குப் பின்னர், நோர்வேத் தமிழ் வானொலிக்கு நான் பேட்டி கொடுப்பதென கமலினி ஒழுங்குசெய்திருந்தா. ஆனால், பேட்டி எடுப்பவர் அன்று நலமில்லாமல் இருந்தமையால் World Cultural Heritage Site ஆக UNESCO பேணுமிடங்களில் ஒன்றான Bryggen துறைமுகத்தைப் பார்க்கச்சென்றோம். அங்கிருந்த மரத்திலான கட்டடங்கள் பல்வேறு நிறங்களில் அழகாகத் தோற்றமளித்தன. இப்பகுதி பல தடவைகள் தீயினால் அழிந்திருந்தபோதும், பழைய நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் மீளமீள நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்றும் அறிந்தோம். நோர்வேயின் நினைவுக்காக புகழ்பெற்ற அதன் கம்பளியிலான சுவற்றர் ஒன்றையும் அங்கிருந்த கடையொன்றில் வாங்கிக்கொண்டோம். பின்னர் அவ்விடத்துக்கு அண்மையிலிருந்த ஒரு கோபுரத்தில் ஏறி அவ்வூரின் அழகை ரசித்தோம்.
அதைத் தொடர்ந்து, ஆறு மணியளவில் சகமாணவியாக இருந்த சுபத்திராவின் வீட்டில் அவ தயாரித்திருந்த வெங்காயத் தோசை, மசாலாத் தோசை, குண்டுத் தோசை என விதம்விதமான தோசைகளை சாம்பார், சட்னியுடன், கடந்திருந்த காலங்களை மீட்டும் உரையாடல்கள் சகிதம் சாப்பிட்டோம். நாங்கள் வளர்ந்தவிதம், புலம்பெயர் வாழ்க்கையில் எங்களின் பிள்ளைகளை வளர்ப்பதில் நாங்கள் முகம்கொடுக்க வேண்டியிருந்த சவால்கள், தற்போது அவர்கள் தங்களின் பிள்ளைகளை வளர்க்கும் முறை எனப் பலதையும் அலசிய அந்த இரவை அவர்களின் வீட்டு யன்னலுக்கூடாகத் தெரிந்த மலைகள் மேலும் லயிக்க வைத்திருந்தன.
- Textile Industry Museum -
பின்னுவது (knitting) சங்கியின் பொழுதுபோக்குகளில் ஒன்றென்பதால், Bergenஇல் அவ பார்க்க விரும்பிய இடங்களில் ஒன்றாக அங்கிருக்கும் Textile Industry Museum இருந்தது. தனது வீட்டுக்கருகிலிருக்கும் அந்த மியூசியத்தை சங்கி சொல்லித்தான் அறிய வேண்டியிருக்கிறதென அதிசயப்பட்ட, அதே பொழுதுபோக்கைக் கொண்டிருக்கும் கமலினிக்கும் அங்கு போவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தது. கம்பளி நூலால் பின்னப்படும் உடுப்புகளை (knitwear) ஒரு காலத்தில் உருவாக்கியிருந்த தொழிற்சாலைக்கருகில், அதன் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த மியூசியத்தில் வழங்கப்பட்டிருந்த வழிகாட்டலுடனான சுற்றுலாவில் கலந்துகொண்டோம்.
கம்பளியின் மணம் அந்தவிடத்தை நிறையவே ஆக்கிரமித்திருந்தது. கம்பளியிலிருந்து நார்களைச் சிக்கெடுத்த பின்னர், அந்த நார்களை நூலாக்கி, முடிவில் அந்த நூலிலிருந்து ஆடைகளை உருவாக்கும்வரையான படிமுறைகளை அவர்கள் செய்துகாட்டினார்கள். நாங்களும் அதனைச் செய்து பார்த்தபோது, அந்தக் காலத்தில் அந்தத் தொழிலைச் செய்தவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்திருக்க வேண்டியிருந்திருக்குமென்பது விளங்கியது. அத்துடன், கிட்டத்தட்ட ஒரேமாதிரியான வாழ்க்கைதான் உலகெங்கும் இருந்திருக்கிறது என்ற நிதர்சனமும் திரும்பவும் நினைவுக்கு வந்தது. தொழிற்சாலையைச் சூழ தொழிலாளர்களுக்கான வீடுகள், பாடசாலைகள், மற்றும் மருத்துவ நிலையங்களும் இருந்திருக்கின்றன என்பதையும் அறிந்தோம். அங்கு விற்பனைசெய்யப்பட்ட நூல் பந்தொன்றையும் மறக்காமல் சங்கி வாங்கிக்கொண்டா.
- உயர்ந்த மலையான Ulriken -
அடுத்த நாள் Bergenஇல் இருக்கும் ஏழு மலைகளிலும் மிக உயர்ந்த மலையான Ulrikenக்குச் சென்றிருந்தோம். 643 மீற்றர் உயரமான அதன் உச்சிக்கு ஏறுவதற்கு உதவியாக 290 மீற்றர் தூரத்துக்கு 1300 படிகள் உள்ளன. எனினும், நேரத்தையும் உடல் வலுவையும் கருத்திலெடுத்து, cable carஇல் அந்த மலை உச்சிக்குச் சென்று நகரின் கொள்ளை அழகை கண்களுக்கு விருந்தாக்கினோம். பின்னர் சங்கி zipline மூலம் சற்றுக் கீழே சென்று பின் மீள மேலே ஏறி வந்தா, ஆனால் எங்களுக்கோ அப்படிச் செய்வதற்குப் பயமாகவிருந்தது. மீளவும் Cable Car மூலம் கீழிறங்கிய நாங்கள், நீர்நிலைகளும் அழகான மலர்களும் நிறைந்த Byparken என்ற பூங்காவை வழியில் பார்த்துவிட்டு எங்களின் ஊரவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றோம்.
- Cable Car -
தெல்லிப்பழையில் எங்களின் அயலவராகவும், அப்பாவின் உற்றதொரு நண்பராகவும் அம்மாவின் சக ஆசிரியராகவும் இருந்த, என் அப்பாவின் பெயரைக்கொண்ட சுப்பிரமணிய மாஸ்ரரின் கடைசி மகன் கிருஷ்ணானந்தனும் நானும் மகாஜனாவிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் ஒரே காலத்தில் படித்திருக்கிறோம். தற்போது மெல்பேர்னில் வாழும் அவரை, கடந்த வருடம் அங்கு சென்றிருந்தபோது சந்திக்க முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை, எனினும் Bergenஇல் வாழும் அவரின் அண்ணனான முருகானந்தனையும் அவரின் மனைவி சாந்தாவையும் பிள்ளைகளையும் அவர்களின் வீட்டில் சந்திக்க முடிந்திருந்தது. பழைய கதைகளை அளாவியவாறு ஒன்றாக இட்டலி சாப்பிட்ட எங்களை மகிழ்விக்க ஒரு பாட்டுப் பாடும்படி அவரின் வயதுவந்த மகள் ஜனனியிடம் சாந்தா கேட்டா. என்ன பாட்டுப் பாட என ஜனனி என்னைக் கேட்டா, பிடித்த பாட்டுக்களென பல திரைப்பாடல்கள் இருந்தமையால் எதென எனக்கு உடன் சொல்லத் தெரியவில்லை. நீங்களே தெரிவுசெய்யுங்கள் என்றதும், ‘முத்துமணி மாலை’ என்ற பாடலை ஜனனி அருமையாகப் பாடினா. அப்போதுதான் நோர்வே மேடைகளிலும் அவ பாடிவருகிறா என்பதை அறிந்தோம்.
[ தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.