அன்பர்களே! எனதருமைத் தந்தையார் வித்துவான் வேந்தனார் அவர்களால் , க.பொ.த- சாதாரணதரம்- தமிழ் இலக்கியப் பாடத்திற்கு எழுதப்பட்ட "பாரதியார் பாடல்கள் விளக்கவுரை" என்ற நூல் எனக்கு சில மாதங்களுக்கு முன் கிடைக்கப் பெற்றது. அதில் பாரதியார் "நடிப்புத் சுதேசிகள்" என்ற தலைப்பில் எழுதிய கவிதைகளுக்கு என் தந்தையார் எழுதிய விளக்கவுரையை நேற்று வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அதை வாசிக்கையில் இன்றும் எம்மிடையே வாழ்கின்ற சிலர், பாரதியார் குறிப்பிட்ட நடிப்புச் சுதேசிகளிலும் கீழ்த்தரமான நடிப்புச் சுதேசிகளாக வாழ்வதை எண்ணிப் பார்த்தேன். பாரதியாரின் இத் தலைப்பிலான பாடல்களுக்கு வேந்தனார் எழுதிய விளக்கவுரைகளில் ஓரிரண்டை, இன்று பாரதியின் 136 ஆண்டு பிறந்தநாள் நினைவாக, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
பாரதியாரின் 'நடிப்புச் சுதேசிகள்' பற்றி வித்துவான் வேந்தனார்.....
" பாரத நாட்டில் விடுதலைப்போர் நிகழ்ந்த காலத்திலே, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பன இல்லாமல் வெறும் போலி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் சிலரின் நடிப்பைக்கண்ட பாரதியார், அவர்களை இகழ்ந்து பாடிய கவிதைகளை நடிப்புச் சுதேசிகள் என்னும் இப் பகுதியில் காண்கின்றோம்.
பொது மக்களின் மதிப்பைப் பெறுதற்காகப் போலிவேடம் பூண்டு நாட்டுப்பற்றுக் கொண்டவர் போல் நடித்து வாழ்ந்த நயவஞ்சகச் சுதேசிகளை இகழ்ந்து பாடிய பாரதியாரின் கவிதைகளில் கிடந்து அலைமோதுகின்ற உணர்ச்சிக் குமுறலும், கோபக் கனலும், இகழ்ச்சிப் பெருக்கும் எமது உள்ளத்தையும் தீண்டி உணர்ச்சி ஊட்டுகின்றன. நாட்டை அடிமைப் படுத்தி ஆளும் பகைவர்கள் ஆற்றுகின்ற கொடுமைகளிலும், நாட்டுப்பற்றில்லாமல் நாட்டுப்பற்றுள்ளவர் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றி வாழ்கின்ற நடிப்புச் சுதேசிகளின் கொடுமை நஞ்சினும் கொடியது என்பதே பாரதியாரின் நெஞ்சத் திரையில் நிழலாடும் கருத்தாகும்."
"ஊக்கமும் உளவலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக்கோர் கணமும்- கிளியே வாழத் தகுதியுண்டோ?
விளக்கம்:- இக் கவிதையில் ஆறறிவு படைத்த மக்கள் உள்ளத்தில் என்றும் நிலையாக விளங்க வேண்டிய பண்புகளாகிய ஊக்கம் , உளவலி, உண்மை பேசுதல் என்பவைகள், ஒன்றும் இல்லாத விலங்குகளாக விளங்கும் நடிப்புச் சுதேசிகள், ஒருகணமேனும் இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என பாரதியார் மூளும் நெருப்புப்போல் கொதித்து மொழிகின்ற வெஞ்சின உரைகளைக் கேட்கின்றோம். பகுத்தறிவு இல்லாத மக்களை விலங்குகளாக மதித்துக் கூறுதல் ஆன்றோர் மரபாகும்.
"மாவும் மாக்களும் ஐயறி வினவே
பிறவு முளவே
அக் கிளைப் பிறப்பே"
என்பது தொல்காப்பியம்.
மாக்கள் எனப்படுவார் மன உணர்ச்சி இல்லாதவர் எனப் பேராசிரியர் கூறும் உரையையும் நோக்குக.
'ஊக்கமும் உளவலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்கள்' என பாரதியார் நடிப்புச் சுதேசிகளின் பண்பை எடுத்துரைக்கும் தொடர்களைப் படிக்கும் பொழுது எழுகின்ற ஓசை, ஓர் கணப் பொழுதேனும் நடிப்புச் சுதேசிகள் இவ்வுலகில் வாழத் தகுதி அற்றவர்கள் தான் என்னும் எண்ணத்தை எமது உள்ளத்திலும் எழுப்புகின்றது."
"நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விருப்புங் கொண்டே கிளியே சிறுமை யடைவாரடி"
விளக்கம்:- இக் கவிதையில் நடிப்புச் சுதேசிகள் நாடு விடுதலை அடையும் வண்ணம் உழைக்க வேண்டுமெனக் கூறிக் கொண்டே, பொதுமக்கள் தம்மைக் குறைவாக மதிக்கும் வண்ணம் நாணமில்லாதவர்களாய், இழிதொழில்களைச் செய்து செல்வத்தைத் தேடும் விருப்பத்தை உடையவர்களாய் கீழ்மை அடைவார்களெனக் கூறி வருந்துகின்ற பாரதியாரின் மனநிலையை உணர்கின்றோம்.
தேசத் தொண்டர் என்னும் போர்வையில் புகுந்துகொண்ட நடிப்புச் சுதேசிகள், தம்மை உண்மைத் தொண்டர்களென எண்ணிய பொதுமக்கள் அவமதிப்பார்கள் என்பதைக்கூட நினைக்காமல், தீய வழிகளால் செல்வத்தை தேட முயன்று சிறுமை அடைகின்ற செயலை எண்ணி எண்ணிப் பாரதியார் மிக அருவருப்படைகின்றார்.
இழி செல்வத் தேட்டில்
விருப்பங் கொண்டே
கிளியே சிறுமையடைவாரடீ
என்னுந் தொடர்களைப் படிக்கும் பொழுது எழுகின்ற ஓசை பாரதியாரின் அருவருப்பை அப்படியே எடுத்துக் காட்டுகின்றது.
வேந்தனார் 16 வயது பாடசாலை மாணவர்களுக்கு, தமிழ் இலக்கிய பாடத்திற்கு, பாரதியார் பாடல் விளக்கவுரையில், பாடத்திட்ட வரையறைகளுக்கு உட்பட்டு நின்று, எவ்வாறு இனப்பற்றை, மொழிப்பற்றை மாணவர்களுக்கு புகட்ட முயன்றார் என்பதை அவரின் க.பொ.த சாதாரண, உயர்தர பாடநூல்கள் ஐந்தையும் வாசிப்போர் நன்குணர்வார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.