பயனுள்ள மீள்பிரசுரம்: நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை! - ஜெயமோகன் -
எழுத்தாளர் நீலபத்மநாபனின் பிறந்தநாள் ஏப்ரில் 26. அதனையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள். -
[ஒன்று]
தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீல பத்மநாபனைப் பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப் படுவது இல்லை. அவரது படைப்புகள் பேசப்படுவதுமில்லை. அவரைப் பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால் கணிசமான சம கால வாசகர்கள் அவர் தமிழிலக்கியத்தின் கடந்த காலத்து நினைவுகளில் ஒன்று மட்டுமே என்று சொல்லவும் கூடும். இன்று அவருடைய படைப்புகள், அவரது பாணி ஏதும் அவ்வளவு முக்கியமில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளதை அவன் காண்பான். பல எளிய இளம் வாசகர்கள் உடனடியாக அவரை ஒதுக்கி விடுவதுமுண்டு . அதே சமயம் தமிழ் நாவல்கள் பற்றிய எந்த ஒரு விமரிசனத்திலும், எந்த பட்டியலிலும் அவரது இரு நாவல்கள் ‘தலைமுறைகள்’, ‘பள்ளிகொண்ட புரம்’ இடம் பெற்றிருப்பதையும் அவன் காண்பான். மிகப் பெரும்பாலான விமரிசகர்களுக்கு அவர்களுடைய மிகச் சிறிய பட்டியலில் கூட கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அப்படைப்புகளை தவிர்க்க முடியவில்லை என்பது ஓர் எளிய விஷயமல்ல. இந்த நிலை அவ்வாசகனுக்கு ஒரு ஆழமான குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.
நீல பத்மநாபனின் இலக்கிய பங்களிப்பின் முக்கியப் பகுதி அவருடைய இளமைப் பருவத்திலேயே நடந்து விட்டது என்பது ஒரு வகையில் சோகமானது. அதன் பின்பு மெல்ல, மெல்ல காலம் தன்னை கடந்து முன் செல்வதை கண்டபடி அவர் பின் தங்கி நிற்க வேண்டியிருந்தது. இலக்கியவாதிக்கு அங்கீகாரமும், புகழும் அவசியம் கிடைக்க வேண்டிய, முதிய காலத்தில் அவர் பழையவராக கணிக்கவும் படுகிறார் . எந்த படைப்பாளியையும் எப்போதாவது ஒரு நாள் காலம் கடந்து செல்லும். எப்போதைக்குமான படைப்பாளிகள் என்று நமக்கு தோன்றிக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி சட்டென்று காலத்தின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் நிற்பதை நாம் பார்க்கும் அனுபவம் இலக்கியத்தில் மிக வியப்பும், பிரமிப்பும், சில சமயம் அச்சமும் தருவதாகும்.