(முகநூல் அஞ்சலி) நான் வளர்ந்த கருப்பையை நான் இழந்து போனேன்! மயிலங்கூடலூர் பி நடராசன் (ஆடலிறை) 14.10.1939 - 12.05.2022 - நா.சபேசன் -
என்னுடைய 'குரு' மயிலங்கூடலூர் பி நடராசன் நேற்று யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர் காலமாகும் போது எண்பத்திரண்டு வயது. இளவாலைக்கும் கீரிமலைக்குமிடையில் இருக்கும் மிகச் சிறிய கிராமமான மயிலங்கூடலை ஈழத்து இலக்கிய உலகில் நிரந்தரமாய் பதிந்துவிட்ட நடராசன் ஆசிரியரை எனது மிகச் சிறிய வயதிலிருந்தே அறிவேன். அவரது'கூடலகம்' வீட்டைச் சூழ எனது தந்தை வழி உறவினர்கள் இருந்ததும், அருகிலிருக்கும் வைரவர் ஆலயம் தாய்வழி உறவினர்கள் சிலருக்கு குல தெய்வமாக இருப்பதும் மயிலங்கூடலுக்கு அடிக்கடி செல்ல காரணங்கள். மயிலங்கூடல் வைரவர் ஆலயத்தின் பொங்கல், மடையின் போது ஆசிரியரை கண்டுள்ளேன்.
கிழக்கிலங்கையிலிருந்து மாற்றலாகி 1971ஆண்டின் பிற்பகுதியில் அவர் மகாஜனக் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக வந்தபோது, நான் மூன்றாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தேன். அவரது வயதையொத்த ஆசிரியர்கள் லோங்ஸோடும் சேர்ட்டோடும் பாடசாலைக்கு வருகிறபோது, விஞ்ஞான ஆசிரியரான அவரது நஷனலும் வேட்டியும்- அதை அவர் அணிந்திருக்கும் நேர்த்தியும் தனித்துவமாக காட்டின.
ஆசிரியராக வந்தவுடனேயே பாடசாலையின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பழைய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராக ஆ சிவநேசச்செல்வனோடு இணைந்து, பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாவை மூன்று நாட்கள் கொண்டாடியதிலும், ஈழத்தின் பெறுமதிமிக்க இலக்கிய மலர்களிலொன்றாக கருதப்படும் 'பாவலர் துரையப்பா பிள்ளை நூற்றாண்டு மலரை' வெளிக் கொணர்ந்ததிலும் ஆசிரியரின் பெரும் உழைப்பும் இருந்தது. இதே காலத்தில் கவிஞர் நுஃமானோடு இணைந்து மஹாகவி நூல் வெளியீட்டு குழுவிலும் பணியாற்றினார். மகாஜனாவின் சின்னப்பா இல்லப் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.