நூல்களை வாசிப்பது என்பது எம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் அறிவாந்தவர்களாக எம்மை ஆக்கிக் கொள்வதற்கும் மிக முக்கியமானது என்று கருதுகின்றேன். முன்பெல்லாம் சாமானிய மனிதர்கள்தாம் இலக்கியங்களைப் படைத்தார்கள் என்று அறிகிறோம். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை படைத்திருக்கிறார்கள். அத்தகைய இலக்கிய வகைகளைப் பார்த்தாலும் நாவல் என்ற இலக்கிய வாகனம் மிகப் பிரதானமாகக் கொண்டாடப்பட்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. 100 ஆண்டுகள் கால வரலாற்றைக் கொண்டது எமது தமிழ் நாவல் என அறியமுகின்றது. தனி மனித வாழ்க்கையையும் அவனின் அனுபவங்களையும் - வரலாற்றையும் இணைக்கின்ற ஒரு பாலமாக நாவல்கள் அமைவதை நான் பார்த்திருக்கின்றேன்.
அந்த வகையில் இலங்கை மன்னார் மாவட்டம் வட்டக் கண்டல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட தொ. பத்தினாதன் அவர்களின் ‘அந்தரம்’ என்ற நாவல் குறித்து எனது கருத்துக்களை முன் வைக்கலாம் என்று எண்ணுகின்றேன். 208 பக்கங்களைக் கொண்டு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தினால் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பான விடயம். நூலின் அட்டைப்படம் அந்தரத்தை அழகாக, சைகையால் வெளிப்படுத்தி நிறகின்றது.
அகதிகளாக மேலை நாடுகளுக்கு 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புலம் பெயர்ந்ததாக அறியமுடிகின்றது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் துயர வாழ்க்கையை அதாவது அவர்கள் பட்ட வேதனைகள் கஷ்டங்கள் இழப்புக்கள் குறித்து புலம்பெயர்ந்த இலக்கியங்கள் வழியாகவும், அவர்களோடு உரையாடியதன் வழியாகவும், ஊடகங்கள் மூலமாகவும், அறிந்திருக்கிறோம். ஆனால் தமிழகத்துக்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்த அவர்களின் சோக நிலைகளை நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. பத்திரிகைகளில் செய்திகளாக படித்திருக்கிறேன்.
ஆனால் ‘அந்தரம்’ என்ற இந்த பத்தினாதனின் நாவலைப் படித்தபோது, இவர் தான் நோராக கண்டு அனுபவித்துப் படைத்திருக்கும் அவர்களின் அந்தரமான அகதி வாழ்க்கை என்னைக் கொஞ்சம் அதிரவைத்தது. நாவலில் சாந்தி, சசி, சரோ, செல்வி என்ற பாத்திரங்களை நாவலில் மெல்லியதாகப் படரவிட்டு நகர்த்திச் செல்கின்றமையை பாராட்டப்படவேண்டிய முக்கிய விடயமாக அவதானித்தேன். பல்வேறு சோக வரலாற்றை சம்பவங்களினுடாக சித்திரிப்பதை என்னால் உணரமுடிந்தது. குறிப்பிட்ட ஆண்டுகள், பெயர்கள் எல்லாம் நாவலில் சுட்டிக்காட்டும் போது எமது அப்பாவி மக்களின் நிலைப்பாடுகள் தாம் என்னுள் உண்மைக் காட்சிகளாகி விரிந்தன.
சாந்தி என்ற தாயானவள் தனது இரண்டு மகள்மாரையும், மகனையும் வறுமைக் கோட்டினூடாக அகதி வாழ்வு எப்படி மாற்றியமைத்தது என்று அவர்களின் அவல வாழ்க்கையின் கொடூரங்களை பத்தினாதன் அருமையாக நாவலில் நகர்த்திச் சித்திரிக்கின்றார். சாந்திக்கு ஏப்ரல் மாதம் 21 திகதி 56 வயது என்றும் எயிட்ஸ் நோயினால்தான் சாந்தி இறந்துபோனதாக முகாமில் இரகசியமாகப் பேசிக்கொள்கிறார்கள் என்றும் அந்தப்பாத்திரத்தை நிறைவு செய்கின்றார் பத்திநாதன். உண்மையாக அந்த சோக முடிவு வாகர்களாகிய எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றது, வைக்கும் என்று நினைக்கின்றேன்.
ஐந்து பகுதிகளாக விரிந்து செல்லும்; நாவல் தமிழ்நாட்டிற்குச் சென்ற இலங்கை அகதிகள் குறித்த பல்வேறு தகவல்களை விளம்பி நிற்கின்றது. தமிழ்நாட்டில் 108 அகதி முகாம்கள் இருப்பதாக அறிய முடிகின்றது. அந்த முகாம்களில் நமது முகாம் முன்னோடியாக இருக்க வேண்டும். பெண்கள் சுய உதவிக் குழுக்களின் தலைவிகளிடம் அகதிகளின் மேம்பாடுகள் குறித்துப் பேசுகின்றார்கள். அகதியாக வந்த சில குடும்பங்களைக் கோழிப்பண்ணைகளில் மூன்று மாத காலம் இருத்திவிட்டு பின்பு உச்சப்பட்டிக்கு மாற்றுகிறார்கள். அங்கு 70 குடும்பங்கள் மாற்றப்படுகிறார்கள். ஆனால் 100 குடும்பங்களுக்கு மேல் அங்கு வாழுகிறார்களாம். அந்த அகதிகள் முகாம் நடுப்பகுதி - மேட்டுப்பகுதி - பள்ளப்பகுதி என்றிருந்தது. தனித்தனியான ஓலைக் கொட்டில் கிடையாது. ஐம்பதடி நீளத்திற்கு மூங்கில் தடியால் கொட்டில்போட்டு, சுத்தி ஓலையால் அடைத்து - பத்தடிக்கு பத்தடியாக நடுவில் தடுப்பு ஏற்படுத்தியிருந்தார்களாம். பலத்த காற்று வந்தால் மற்றும் பேய்மழை வந்தால் எப்படி அந்தக் குடும்பங்கள் வாழ்வது? பாம்புகளும் பூச்சிகளும் படையெடுத்து அவற்றினால் அழிவுகளும் எத்தனை உயிர்ச்சேதங்கள். நடுப்பகுதியில் மட்டுமே அகதிகள், பள்ளப் பகுதியில் அரசால் குடியமர்த்துவதுமட்டும் என்றும் - பல்வேறுபட்ட குழப்பங்களுடன் எவ்வளவு காலத்திற்கு - எப்படிக் குடும்பங்கள் வாழ்வது? சோகத்துள் என் உடலைக்கொஞ்சம் உலுக்கிவிட்டது.
இத்தகைய அகதி வாழ்க்கையில் ஒழுக்கக் கேடுகள் அதனால் ஏற்படுகின்ற வாக்குவாதங்கள் - சண்டைகள் - அவர்களால் பாவிக்கப்படும் கீழ்த்தரமான சொற்பிரயோகங்கள் - வறுமை – ஏமாற்றங்கள் - தற்கொலைகள் - அங்குள்ள அதிகாரிகளால் மிரட்டப்படுவது – சிறைக்குச்செல்வது போன்ற பல சமூகச் சீரழிவுகளை இந்த நாவலினுடாக என்னால் பார்க்க முடிகின்றது.
அடுத்து ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் வருவாய்த்துறை அதிகாரியாக நியமிப்பார்கள். அவர்கள் தமிழ் அகதிகளாக வந்த மக்களுடன் நடத்திக்கொள்ளும் முறைகேடான விடயங்கள். அவர்களிடம் லஞ்சத்தை எதிர்பார்ப்பது - அகதி முகாமை விட்டு வேறு இடத்திற்குச் செல்வதற்கு அனுமதிப்பத்திரங்கள் வேண்டுவதற்குப் படும் அலைச்சல்கள் - அதிகாரிகளின் அதிகாரத்தன்மைகள் போன்ற பல்வேறு விடயங்களை நாவலாசிரியர் சுட்டிக்காட்டி மனித வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்துகின்ற விடயங்கள் சிறப்பானது என்றே கூறுவேன்.
அகதிகளாக வாழ்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் கடிதங்கள் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை. போலியான முகங்கள் - நம்பிக்கையற்ற உறவுகள் - ஊடகங்கள் - காதல் - காமம் -தற்கொலைகள் என்ற அகதிகளின் துயரங்களை காத்திரமான முக்கிய பதிவாக்கி பத்தினாதன் இந்த நாவலில் சித்தரித்திருக்கின்றார்.
நாவலின் சில இடங்கள் மலையக மக்களின் வாழ்க்கைக்கும் என்னை அழைத்துச் சென்றது. மலையக மக்களின் துன்ப துயரங்களை நேரில் பார்த்தவள் என்ற வகையில் அவர்களும் அந்த லயங்களில் வாழும்போது இத்தகைய சோகம்நிறைந்த வாழ்க்கைதான் அனுபவித்திருந்தார்கள். தற்போது அவர்கள் நிறைந்த கல்வி அறிவுடன் வாழ்க்கைத்தரம் சிறிது உயர்ந்துள்ளதாக அறியமுடிகிறது.
மன்னாரில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் சமூகம் மற்றும் சாதியில் எழும் நடைமுறைப்பிரச்சனைகள் - அந்த மக்கள்pன் கிறிஸ்த்தவ வாழ்க்கை முறைகள் அதாவது அவர்களின் ஞானஸ்தானம், முதல்நன்மை, உறுதிபூசுதல் மெய்விசுவாசம் - இறக்கும்தருவாயில் ‘நோயில்; பூசுதல்’ அவஸ்தை குடுக்கிறது என்று நான் அறிந்திருக்கிறேன். இவை பற்றிய விளக்கங்கள்... அதனைவிட கத்தோலிக்க சமயத்தில் திருமணம் நடைபெறுவதற்கான விபரங்களின் விபரிப்பு என்றெல்லாம் அவர்களின் நடைமுறைகளை அழகாகவே கூறியிருக்கிறார். அத்தாட்சிப் பத்திரங்கள் எடுப்பதில் ஏற்படும் சிக்கல்கள் என்று அந்தச்சமூகம் எவ்வளவு தூரம் ஒடுக்கப்படுகின்ற சமூகமாக இந்திருக்கின்றது – எப்படி அவற்றை அவற்றிகெல்லாம் முகங்கொடுக்கின்றார்கள் என்பதையெல்லாம் வெளிக்கொண்டு வருகின்றார்.
இதற்கிடையில் சாந்தியின் பின்னோக்கிய நினைவு என்று இளவாலை லேடீஸ் கொன்வன்ற் பற்றியும் ‘அது யாழ்ப்பாணத்தில் அழகான ஊர். இளவாலை லேடீஸ் கொன்வென்ருக்குப் பின்னால் இருந்தது அவளது வீடு. அப்பா அரசு உத்தியோகம். அங்கு ஒரு சொந்தக்காரப் பொடியனைக் காதலித்து திருமணம் செய்து மூன்று குழந்தைகள் . புருசனை இராணுவக் குழு பிடித்தக்கொண்டு போனது. சாந்தியின் புருஷன் திரும்பி வரவில்லை என்று நாவலைத் தொடர்கிறார் பத்தினாதன். சாந்தி வசதியான குடும்பத்திலிருந்து வாழ்ந்த வாழ்க்கை எப்படியெல்லாம் சோபை இழந்து துன்பங்கள்; அனுபவித்ததைச் சுட்டும் அழுத்தமான சித்தரிப்புகள் நாவலுக்கு உயிர்ப்பூட்டியிருகின்றன என்று நான் கூற விரும்புகின்றேன்.
நானும் இளவாலைக் கொன்வன்ரில்தான் எனது கல்வியை மேற்கோண்டேன். (அவ்வேளைகளில் மன்னார் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மாணவிகள் கொன்வென்ற் விடுதிகளில் தங்கியிருந்து கல்வியை மேற்கொள்வதுண்டு என்ற வகையில் என்னை அந்த இடம்; தரிக்க வைத்தது)
நாவல் என்பது உண்மைக் கதைகளைத்தான் இலக்கியமாக்கிப் படைக்கின்றன. நாங்கள் அறிந்திராத உண்மைகள் எதை எதை எல்லாம் மறைக்கப்படுகின்றதோ யாரெல்லாம் இருட்டில் வாழ்கின்றார்களோ – யாரெல்லாம் குற்றவாளிகளாக உருவாக்கப்படுகின்றார்களோ என்ற உண்மைப்பணியை நாவல் செய்கின்றது என்பதைப் புரிந்துகொண்டேன். சமூகத்தில் கைவிடப்பட்டவர்கள் - ஒழுக்கம் பிறழ்ந்தவள் என்று சமூகத்தினால் விலக்கப்படுதல் - சமூகம் ஏன் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பதை வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கூடாக இந்நாவல் அசத்தலாகவே விளம்புகிறது.
பத்தினாதனின் ‘அந்தரம்’ நாவலின் முன் அட்டைக்கு வருகிறேன். நாம் இறந்தவர்கள் இடத்துக்குச் சென்றால் இப்படி ஒரு அடையாளம் தெரியாத கையொன்று அந்தரத்தில் இருக்குமோ என்ற ஒரு சிந்தனையையும் என்னைத் தூண்டியது. அடையாளம் தெரியாமல் முடிந்துவிடப்போகின்ற இந்த வாழ்க்கைக்குத்தானா இவ்வளவு பேராசைகள், இவ்வளவு போட்டி பொறாமைகள், இவ்வளவு மோதல்கள், இவ்வளவு துரத்தல்கள், இவ்வளவு பணத்தைக் குறிவைத்தல்கள் என எண்ணத் தோன்றின. கானல் நீரைத் துரத்துவது போலல்லவோ துரத்திக்கொண்டே இருக்கிறோம் எமது வாழ்க்கையை. இத்தகைய மனிதனின் மனத்தின் ரகசியங்களும் சேர்ந்து என்னைக் குடைந்து வலியுறுத்தின..
இத்தகைய நாவலை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாசிப்பது ஒரு வெளிச்சத்தைக் காட்டவதாக அமைகின்றது. அத்தோடு அகதியாகச் சென்று துன்பப்பட்ட இத்தகைய மக்களுக்கு
உதவவேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்துகின்றது.. அதுவே இந்நாவலுக்கான முதல் வெற்றி என்பதை கூறி - நாவலாசிரியருக்கு நிறைந்த பாராட்டைத் தெரிவித்து –விடை பெறுகின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.