எனது புத்தக அடுக்குகளில் இருந்து அமரர் கல்கி எழுதிய 'இலங்கைப் பயணக் கதை' நூல் எனது கண்ணில் பட்டது. இதனை நான் ஒரு தற்செயலான நிகழ்வாகக் கருதவில்லை. இன்று தமிழகத்தில் இருந்தும் மேற்குலக நாடுகளில் இருந்தும் புற்றீசல்கள் போல் இலங்கை நோக்கி படையெடுத்து பலரும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் 'இலங்கைப் பயணக் கதைகள் ' குறித்து நானும் ஏதாவது எழுத்தவேண்டும் என்ற சமிக்ஞையாகவே புரிந்து கொண்டேன். இது பற்றி எழுத வேண்டுமாயின் இதயம் பேசுகிறது மணியன் எழுதிய 'இலங்கை பயணக் கட்டுரை ' நூலும் மிக அவசியமானதாக எனக்குப் பட்டது. பல மணி நேரப் பிரயத்தனங்களின் பின் கேட்பாரற்றுக் கிடந்த அந்த நூலையும் என் கையில் எடுத்துக் கொண்டேன்.
கல்கியின் 'இலங்கைப் பயணம்' 1938 இல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. மணியனின் 'இலங்கைப் பயணக் கட்டுரை'யும் ஆனந்த விகடனிலேயே தொடராக 1978 இல் வந்து, பின் 1979 இல் நூலாக வெளி வருகின்றது. இருவருமே பார்ப்பனிய எழுத்தாளர்கள். இருவரது எழுத்துக்களிலும் அவர்களது சாதியபிமானம் பல்வேறு சமயங்களிலும் தலை தூக்கும். மணியன் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து அதனைப் பயணக் கட்டுரைகளாக எழுதியவர். முன்னரெல்லாம் ஒரு பயணக் கட்டுரையினை எப்படி எழுதக் கூடாது என்பதற்கு இவரை உதாரணமாகக் கொள்வார்கள். ஆனால் இப்போதுள்ள நிலையில் இவர்களிடமே ஆலோசனை கேட்க வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். கல்கி பின்னர் 'இலங்கையில் ஒரு வாரம்' என்ற நூலையும் 1950 வாக்கில் எழுதியிருப்பதாக அறிய முடிகின்றது. ஆயினும் அது எனது பார்வைக்குக் கிட்டவில்லை.
கல்கிக்குத் தெரியும் அவரது வாசகர்கள் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதென்பது. ஆயினும் அவர் தனது பயணத்தினை பயமின்றி நேர்மையாகப் பதிவு செய்கிறார். இராவணன் ஒரு முட்டாள் என்பதாகக் கூறிக் கொண்டே தனது கட்டுரையினை ஆரம்பிக்கின்றார், இலங்கை அரசு அன்று இந்தியப் பயணிகள் மீது இந்தியர்கள் மிகவும் சுகாதாரக் குறைவானவர்கள் என்ற வகையில் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளைக் கடுமையாகச் சாடுகின்றார். யாழ்ப்பாணத்தின் கல்வி மேம்பாடு அவரை அசர வைக்கின்றது. யாழ்ப்பாணத்துச் சாதீயக் கொடுமைகள் குறித்து அவர் எதுவும் பேசவில்லையாயினும் இங்குள்ள சீதன முறைமை தமிழகத்தை விட மிக மோசமாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.
நுவரெலியா குறித்து அவர் எழுதியதுதான் விசேஷமானது.
"இப்படியெல்லாம் நுவரெலியா புகழுக்குரியதாக இருந்தாலும் எனக்கென்னவோ அங்கே பிரமாத விஷேசம் இருப்பதாகத் தோன்றவில்லை. 'இதுதான் நுவரெலியா' என்று நண்பர்கள் சொன்னதும் நான் முதலில் நமப்வில்லை. 'இதுதானா' என்று ஏமாற்றத்துடன் கேட்டேன். இங்கே எப்படியெல்லாமோ இருக்கும் என்றல்லாவா எண்ணிக் கொண்டு வந்தேன் ?"
இப்போது மணியன் எழுதிய 'இலங்கைப் பயணக் கட்டுரை' நூலினைப் பார்க்கலாம். 1979 ம் ஆண்டு பிரசுரமாகியுள்ள இந்நூலிற்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். மணியன் இந்த நூலில் என்ன எழுதுகின்றார் ? இது அவர் எழுதிய பதினோராவது பயணக் கட்டுரை நூல் என நினைக்கிறேன். அவர் தனது மற்றைய தேசங்களுக்கு சொன்று எழுதிய பயண நூல்களைப் போலவே இதனையும் எழுதிச் செல்கின்றார். தமிழ்த் தலைவர்களான அமிர்தலிங்கம், தொண்டமான், தேவநாயகம் போன்றவர்களையும் பகுத்தறிவுச் சிந்தனையாளர் டாக்டர் கோபூரையும் சந்தித்தது பற்றி எழுதுகின்றார். அப்போதுதான் பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா உடனான தனது கசப்பான சந்திப்பு குறித்து எழுதுகின்றார். யாழ்ப்பாணத்து குன்றும் குழியுமான தெருக்களை நையாண்டி செய்கின்றார். மிகப் பெரிய உணவகங்களில் கூட கிடைத்த தரமற்ற உணவுகளைக் குறிப்பிடுகின்றார். நல்லூர் கோயிலில் தனது மேலாடையைக் கழட்டச் சொன்ன கசப்பான சம்பவத்தினைக் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்தில் ஓடித் திரிந்த மிகப் பழைய கார்கள் பற்றி எழுதுகின்றார். இதில் இருவருக்கும் இவர்கள் சந்தித்த மனிதர்களின் மூலமாக இலங்கை அரசியல் குறித்தும் இலங்கை இனப்பிரச்சினை குறித்தும் தவறான தகவல்கள் தாராளமாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. அதனையும் அவர்கள் எழுதிச் சென்றிருக்கின்றனர். இவர்களுக்கு இலங்கையில் ஆயிரக் கணக்கான வாசகர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் யாருக்கும் பயப்படாமல் அனைத்தையும் எந்தப் பயமுமின்றி துணிவுடன் எழுதிச் சென்றிருக்கின்றனர்.
இப்போது நாம் அண்மையில் தமிழகத்தில் இருந்து அங்கு போய் வந்து பயணக் குறிப்புக்களை எழுதியவர்களைப் பார்ப்போம். இதில் சாரு நிவேதிதா, அராத்து, சரவணன் மாணிக்கவாசகம், அ.மார்க்ஸ் போன்றோர் முக்கியமானவர்கள். அல்லது இவர்கள் எனது முகநூல் நண்பர்களாக இருப்பதினால் இவர்கள் பதிவுகள் எனக்கு முக்கியமானதாகப் பட்டது. அத்துடன் இலங்கையை தாயகமாகக் கொண்டு இப்போது மேற்குலகில் புலம் பெயர்ந்திருக்கும் ஆளுமைகள், எனது நண்பர்கள் எழுதிய பயணக் குறிப்புக்கள் பற்றியும் பார்க்கலாம். இதில் ஒரு சிலர் தமது பயணம் இனிமையானதாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். சிலர் நிறைவானதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இதில் பெரும்பாலோர் தமக்கு அங்கு கிடைத்த கசப்பான அனுபவங்களையே பதிவு செய்திருந்தனர்.
இதில் சரவணன் மாணிக்கவாசகம் தனது குறிப்புக்களை ஓரளவு நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார். அவர் தனது பயணக் குறிப்புக்களை பதினைந்திற்கும் மேற்பட்ட சிறு கட்டுரைகளாக எழுதி தனது வலைத்தளத்திலும் முகநூலிலும் பதிவிட்டு பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார். இவர் இன்று நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு தலை சிறந்த விமர்சகராகக் கருதப்படுபவர். இது வரை பல நூல்களிற்கு விமர்சனம் எழுதியுள்ளார். அவற்றில் ஈழத்துப் படைப்பளிகளின் நூல்களும் பல. எனவே இவர் இன்று ஈழ தமிழ் இலக்கியத்திலும் பெரிதும் அறியப்பட்டவர். எனவே இவரது பயணத்திற்கு இந்த அறிமுகங்கள பெரிதும் உதவியுள்ளன. இவர் தனது பதிவுகளை நேர்மையாக யார் மனதையும் நோகடித்து விடக் கூடாதே என்ற மெல்லிய எச்சரிக்கை உணர்வுடன் எழுதியிருந்தார்.
பேராசிரியர் மார்க்ஸ்சும் அங்கு போனார். ஈழ விடுதலைப் போரின் முடிவிற்கு பின்பாக இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலிற்கேற்ப பணி புரிபவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் இலங்கை அரசினை மகிழ்ச்சிப் படுத்தும் வகையிலேயே இவரது நடவடிக்கைகள் எப்போதும் அமைந்திருக்கும். ஈழ விடுதலைப் போராட்டத்தினை கீழ்த்தரமாகச் சித்தரித்தே இவரது எழுத்துக்கள், பேச்சுக்கள் எப்போதும் பதிவாகியிருக்கும். தனது 2 வார இலங்கைப் பயணம் குறித்து அவரும் முகநூலில் பல பதிவுகளை இட்டிருந்தார். ஆயினும் அவர் இப்பயணம் குறித்து பெரிதாக எந்த சர்ச்சைகளிலும் சிக்கவில்லை.
இங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் உட்பட்டு கசப்புணர்வுகளுடன் தாயகம் திரும்பியவர்கலில் முக்கியமானவர்கள் சாரு நிவேதிதாவும் அராத்துவும். சாரு நிவேதிதா அங்கு போவதற்கு முன்னரே அவர் எழுதிய 'குழந்தை செக்ஸ்' குறித்த கதைகளும் பெண்கள் மீது அவர் புரிய முற்பட்ட பாலியல் தாக்குதல்களும் பலராலும் முகநூலிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப் பட்டிருந்தன. எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு பெண்கள் பட்டாளம் இருப்பதாக பீற்றிக் கொள்ளும் அவரிட்கு அங்கு ஒரு பெண் கூட அவரைச் சந்திக்க வராதாது மிகுந்த கோபத்தினையும் மனக்கசப்பினையும் ஏற்படுத்தி இருந்தது. கவிஞர் ரியாஸ் குரானாவின் அனுசரணையில் அங்கு போய் இருந்த அவரிட்கு பல்வேறு நெருக்குதல் காரணமாக ஏறாவூர் புத்தக கண்காட்சியில் அவர் கலந்து கொள்ள மறுக்கப்பட்டது பலத்த கோபத்தினை ஏறபடுத்தி இருந்தது. இதற்கிடையில் அவர் பின்வருமாறு 'இலங்கை நாய்கள்' குறித்து ஒரு பதிவினை இடுகின்றார்.
"---இதில் இன்னொரு பயங்கரம் என்னவென்றால், இலங்கையின் மக்கள் தொகையை விட நாய்களின் தொகை அதிகமாக இருந்தது. எங்கே திரும்பினாலும் நாய்கள்தான். அது மட்டும் அல்லாமல் இந்த இலங்கை நாய்களைப் போன்ற முட்டாள் நாய்களை நீங்கள் உலகின் எந்த மூலையிலும் பார்க்க முடியாது. அதுகள் பாட்டுக்கு எந்தக் கவலையும் இல்லாமல் வாகனங்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் சாலையைக் குறுக்காகக் கடக்கின்றன. சில லூசு நாய்கள் சாலையின் நடுவிலேயே படுத்துக் கிடக்கின்றன. பல நூறு நாய்கள் கால் கையை இழந்து நொண்டிக் கொண்டு போவதையும் கண்டேன். நான் இலங்கைக்காரனாக இருந்திருந்தால் இதற்கு எதிராக ஒரு பெரிய போராட்டமே நடத்துவேன்---"
இது ஈழத்தவர்களை பெரிதும் கோபம் கொள்ள வைக்கின்றது. பல்வேறு சமூக வலைத் தளங்களிலும் பலரும் அவர் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். எப்போதுமே ஒரு ஸ்டன்ட் மூலமாகவே இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தினைத் தக்க வைத்துள்ள அவர் இங்கேயும் ஒரு ஸ்டன்ட் அறிக்கையினை வெளியிடுகின்றார். "இங்கே பாசிக்குடாவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. இங்கே இருந்து கொண்டு எழுதுவது சாத்தியம் இல்லை. ஏனென்றால், இவர்களின் அவதூறுகளுக்கு நான் பதில் எழுதவில்லை. எழுதினால் தலை என்னிடம் இருக்காது. அதனால் கொழும்பு கிளம்புகிறேன்." - உலகமே நகைக்கும் படியாக மீண்டும் தான் ஒரு பொய்யர் என உலகிற்கு நிரூபித்து விட்டு வெறுப்புணர்வுடன் தாயகம் திரும்புகிறார். இந்நிகழ்வு குறித்து அராத்து பின்வருமாறு எழுதுகின்றார்.
"இலங்கையில் தெருநாய்கள் அதிகம் என சாரு எழுதப்போக , இலங்கை மக்களைத்தான் சாரு நாய்கள் என சொல்லி விட்டார் என்று சிலர் வேண்டுமென்றே திரித்தார்கள். சிலர் திரித்தவுடன் அது பரவியது. இலக்கியம் , வாசிப்பு , சாருவைப் பற்றி தெரியாதவர்களுக்கெல்லாம் அது சென்றடைந்தது. யாரோ இந்திய எழுத்தாளராம் , அவர் இலங்கை மக்களை நாய் என்று சொல்லி விட்டாராம் எனப் பரவியது. ஆன்லைனின் பாதகங்களில் இது ஒன்று. எனக்கு என்ன ஆச்சரியம் எனில் , இலங்கை எழுத்தாளர்கள் யாரும் - "இல்லை , சாரு அப்படிச் சொல்ல வில்லை " என்று எழுதவேயில்லை. அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும் சாரு மாட்டிக்கொள்ளட்டும் , உதை வாங்கட்டும் என்றே அமைதி காத்தார்கள் எனத் தோன்றுகிறது."
அராத்துவினை ஈழத்தில் அறிந்தவர்கள் மிகச் சிலரே. அதுவும் முகநூல் வாயிலாகத்தான் இருக்கும். இலங்கையில் அவரது நூல்களை வாசித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அங்கு போயிருந்த அராத்து அங்கிருந்து கொண்டு காமெடியாக இட்ட சில பதிவுகள் ஈழத்தவர்களை நன்கு புண்படுத்தி விட்டது. அவரையும் பலரும் சமூக வலைத் தளங்களில் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்கள்.
" நான் சும்மா ஜாலிக்கு லெமன் டீ , ரொரொன்ற்றோ என எழுதியதற்கு செடல் குத்திக்கொண்டு , தீ மிதிப்பது போல ஆடித் தீர்த்தனர்."
பார்க்கும்போதே புரிகின்றது. இலங்கைப் பயணம் இவர்களுக்கு உவப்பானதாக அமையவில்லை.
இதற்குமப்பால் மேற்குலகில் இருந்து அங்கு இலங்கைக்குப் போன புலம்பெயர் மக்கள் பலரும் (இவர்களுக்கு இலங்கை தாயகம்) தொடர்ந்தும் பல பதிவுகளை தொடர்ந்தும் இட்ட வண்ணம் உள்ளனர். தாம் கூழ் குடித்த அனுபவங்களையும் கள்ளுக் கொட்டிலிற்கு போன அனுபவங்களையும் தாராளமாகவே பதிவு செய்து வருகின்றனர். தாம் போகும் போது இருந்தது போல் இலங்கை இப்போது இல்லையே என கண்ணீர் வடிப்பது இவர்களது பதிவுகளின் சாரமாக இருக்கின்றது.
இந்த மேற்குறித்த பதிவுகளில் இருந்து நாம் ஒரு விடயத்தினை குறிப்பிடலாம். இலங்கைக்குப் போயிருந்த இவர்களில் பலரும் தமக்கு அங்கு கிடைத்த கசப்பான அனுபவங்களைப் பற்றியே பதிந்திருந்தனர். ஆனால் இவர்கள் யாவரும் தமது பயணத்திற்கு முன்னும் பின்னும் ஒரு விடயத்தினை மறந்து விட்டிருக்கின்றனர். அது என்னவெனில், கடந்த முப்பது வருட காலமாக ஒரு கொடிய யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு சின்னா பின்னமாகிச் சீரழிந்து, தற்போதுதான் மெல்ல மெல்ல உயிர் பெறத் துடிக்கும் ஒரு தேசமொன்றிற்குத்தான் தாம் போய் வந்திருக்கின்றோம் என்பதினை.
மிக அண்மையில் பாக்கியநாதன் அகிலன் 'எழுநா' சஞ்சிகையில் எழுதிய 'ஈழத்தமிழரும் கறுப்புச் சுற்றுலாவும்' என்ற கட்டுரை என் மனதில் மிகுந்த பாதிப்பினைச் செலுத்தி இருந்தது. அவரது கட்டுரையின் ஆரம்ப வரிகள் சிலவற்றை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
"அண்மைக் காலத்தில் அதிகம் கவனிப்புப் பெற்ற ஒரு சுற்றுலா முறையாகச் கறுப்புச் சுற்றுலா (Black tourism) காணப்படுகிறது. குறிப்பாக 1990களில் இது முக்கியமான புலமை உரையாடலாக உருவாகியது. சிலவேளைகளில் இருள் சுற்றுலா (Dark tourism) அல்லது துயரச் சுற்றுலா (Grief tourism) எனும் பெயர்களாலும் அழைக்கப்படும். இது ஒரு மக்கள் குழுமத்தின் அல்லது தேசத்தின் துயரடர்ந்த நிகழ்ச்சிகளான இறப்பு, கொலை, அழிவு முதலியன நடைபெற்ற இடங்களை அவற்றின் சான்றாதாரங்களை உள்ளடக்கிய சுற்றுலா முறையாகும். கறுப்புச் சுற்றுலா பற்றிய புலமையாளர்களான ஜோன் லினொன் மற்றும் மக்லம் பொலி ஆகியோர் கறுப்புச் சுற்றுலாவை 'மனிதப்பண்பற்ற செயல்களின் பிரதிநிதித்துவமாயும், காண்போருக்கு அவை எவ்விதம் வியாக்கியானமாகின்றன என்பது பற்றியதுமான' பயணமாக வரையறை செய்கிறார்கள். கெவின் பொக்ஸ் கோத்தம் 'துயரம், கொடுமை, வலியினாலான இடங்களை நோக்கி மக்களை எடுத்துச்செல்லும்' பயணமாகக் கறுப்புச் சுற்றுலாவைக் காண்கிறார். அது அடிப்படையில் பொழுதுபோக்கு, மகிழ்வளிப்புச் சார்ந்த ஒன்றாக அல்லாமல் ஒருவகையான கல்வியூட்டற் சுற்றுலாவாக அமைய வேண்டும் என கறுப்புச் சுற்றுலாப் புலமையாளர்கள் வாதிக்கின்றனர். றாமி கலால் றசீக் இவ்வகை இடங்களைக் காணச்செல்லும் சுற்றுலாப் பயணிகளை 'இருள் சுற்றுலாவினர்' என அழைக்கிறார். இவ்வகைப் பயணிகள் கறுப்பிடங்களின் வரலாற்று முதன்மை, அதன் சான்றாதாரத் தன்மை, நிகழ்ந்து முடிந்த மானிடத் துயரத்திற்கு மதிப்பளித்தல் அதனைக் கூட்டாகப் பகிர்தல் என்பனவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இவ்விடங்களுக்குப் பயணம் செய்கிறார்கள் எனப் பொதுவாகக் கூறப்படும். கறுப்புச் சுற்றுலாவானது, அதன் பார்வையாளர்களிடம் சமூக நீதிக்கான நாட்டத்தையும், பொறுப்புக் கூறல் உணர்வுத்தோழமையும் எதிர்பார்ப்பதுடன் எதிர்காலத்தில் இவை மீளவும் நடைபெறக் கூடாது என்ற மனநிலையை வருங்கால சந்ததியிடம் ஏற்படுத்தலையும் நோக்கமாகக் கொண்டது. ஒருவகையில் ஒரு கூட்டுத் துக்கம், கூட்டு மனக்காயத்தை ஆற்றுதல் முதலான விடயங்களுக்கான களங்களாகவும் இவை காணப்படுகின்றன."
இங்கு எனக்கு ஒரு விடயம் பயங்கரமாக எரிச்சலூட்டுகின்றது. பாரீஸ் போயிருந்த சாரு நிவேதிதா வகையறாக்கள் பாரீசிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள, நாசிகளால் குண்டு வீசப் பட்டு மனிதப் படு கொலைகள் நிகழ்த்தப் பட்ட இன்றும் நினைவுச் சின்னமாக போற்றப்படும் Oradour-sur-Glane போன்ற கிராமங்களுக்கு போகின்றனர். அது குறித்து தமது நூல்களில் பல நூறு தடைவைகள் எழுதி தமது போலி மானிட நேயத்தினை வெளிப்படுத்துகின்றனர். அப்படிப் பட்டவர்கள் ஏன் இலங்கையில் இதுவரை இடம்பெற்ற படுகொலைகள், அழித்தொழிப்புக்கள் போன்றவற்றினை எல்லாம் எழுதத் துணிவதில்லை ?
நான் மேலே சாரு நிவேதிதா எழுதியிருந்த 'நாய்கள்' பற்றிய குறிப்பினை விபரித்திருந்தேன். இதே போல் கல்கியும் சுமார் 80, 90 வருடங்களுக்கு முன்பே எழுதியிருப்பதுதான் எனக்கு மிகவும் ஆச்சரியமூட்டியது. கல்கி இப்படியாக எழுதுகின்றார்.
"இலங்கையின் சாலைகளில் பிரயாணம் செய்யும்போது இன்னொரு விநோதத்தைக் காணலாம். நம்மூர்ச் சாலைகளில் எருமை மாடுகள் எதிர்ப்படுவது போல் அங்கே யானைகள் சர்வ சாதரணமாய் எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும். அப்படி யானைகள் 'ரைட்'டாக வந்தாலும் சரி 'ராங்க்'காக வந்தாலும் சரி நாம் விலகித்தான் போக வேண்டும். அவற்றுடன் பாதை விதிகளைப் பற்றி தர்க்கம் செய்ய முடியாது.ஓ! அந்த யானைகளின் பக்கத்தில் மோட்டார் போகும்போது நாமும் நமது மோட்டார்களும் எவ்வளவு அற்பமானவையாகி விடுகின்றோம்.---"
உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. சுமார் 80, 90 வருடங்களுக்கு முன் யானைகளால் நிரம்பியிருந்த ஒரு சின்னஞ் சிறு தீவு எப்படி இப்போது நாய்களால் நிரம்பியிருக்கின்றது என்று.
முடிவாக இந்தக் கட்டுரையினை கலாமோகனின் 'நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை' என்ற சிறுகதையுடன் ( காலச்சுவடு மார்ச் 2020 ) முடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.
"மிகவும் காலையில் பாரிசில் நடப்பது இனியதே! யாழ்ப்பாணத்தில் நடந்தால் நாய்களின் நினைவுகளோடும் பயத்தோடும் நடக்க வேண்டியிருக்கும். பல வீதிகளில் அங்கு நான் நடந்தேன். சயிக்கில்களை வேகமாக ஓட்டினேன். பல நாய்களில் எனக்குப் பரிதாபம் ஏற்பட்டது. வீதியில் உலவும் நாய்களை நாய் பிடிகாரர்கள் பிடித்தார்கள்.---- " .
கலாமோகன் இலங்கைக்காரர். எனவே இலங்கை நாய்களைப் பற்றி எழுதுவதற்கு அவருக்கு எந்தவித பயமுமில்லை. அசௌகரியமும் கூட இல்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.