ஈழத்து எழுத்தாளர் சொக்கன் (சொக்கலிங்கம்) படைப்புகளில் படைப்பாக்க உத்திகள்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், மதுரை -
- எழுத்தாளர் க.சொக்கன் (சொக்கலிங்கம்) -
முன்னுரைதமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் வலுவான இடத்தைப் பெற்றுள்ளன. அந்த வகையில் இலங்கையின் எழுத்தாளர் க.சொக்கலிங்கம் அவர்களின் சிறுகதைகள் தனித்த இடத்தைப் பெற்றுள்ளன எனில் மிகையாகாது. இயல்பான கதையோட்டத்துடன் மண்மணம் மாறாத சொற்கள் மிகுந்து நடைக்கு வலுச்சேர்க்கும் கதைக்களத்துடன் வாசிப்பவர்களைத் தூண்டும் கதைகள் சொக்கலிங்கம் அவர்களுக்கானது. இது படிப்பவர்களைக் கதையின் ரசனையுடன் ஒன்றிப் போகச் செய்வதோடு அவர் காலச்சமுதாயச் சிக்கல்களையும் வரிசைப்படுத்துகிறது.
இவரது சிறுகதைத் தொகுப்பில் உள்ள படைப்பாக்க உத்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. இவரது சிறுகதைகளில் கதைகூறும் முறை, மொழிநடை, நனவோடை உத்தி ஆகியவற்றின் மூலம் படைப்பாக்க உத்திகளை நோக்கலாம்.
கதைகூறும் முறை
இவர் தனது சிறுகதைகளில் ஆசிரியரே கதை கூறும் முறையைப் பின்பற்றியுள்ளார். இதை எடுத்துரை உத்தி என்பர். முதியோர் வாழ்க! என்ற கதையில் முதியோரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை அற்புதமான ஒரு கதையின் மூலம் விளக்குகிறார். இக்கதையில் கதைக்குள்ளே கதையாக தான் சொல்ல வந்த கருத்தை நடராசர் என்ற மூத்த கதாபாத்திரத்தின் வழி உணர்த்தியிருப்பது வெகு நேர்த்தியாக உள்ளது. இக்கதையில் அப்பா அடித்தாலும் பொறுத்துப் போகும் மகன்களும் முன்பு இருந்தனர், இப்பொழுது வயதானதால் அப்பாவை அவமதிக்கும் மகனும் பேர்த்திகளும் இருப்பதைச் சுருக்கமாக நறுக்கென்ற வார்த்தைகளால் பிரதிபலிக்கிறார். எண்பது வயதுப் பெரியவர் தனது நூற்றி ஐந்து வயது அப்பா அடித்ததற்காக அழுவதை,
“இரண்டு வருசத்துக்கு முன்பும் அவர் எனக்கு அடித்தவர். அந்த அடி எனக்கு நோவை ஏற்படுத்தியது உண்மைதான். இப்பொழுது நோகவில்லை என்றால்…? முதுமையின் பலவீனம், தளர்ச்சிதானே காரணம்? அப்பா விரைவில் எங்களைப் பிரிந்துவிடுவாரோ என்பதுதான் இப்பொழுது எனக்குக் கவலை. அதுதான் அழுகிறேன்”