சிறுகதை: ஆப்பு - மு தனஞ்செழியன்
அமுதா போட்டிருந்த செருப்பை ரோட்டில் தேய்த்து கொண்டே அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்த முயன்றாள். கைகளில் பிடித்து நிறுத்தும் பிரேக் இருந்தும் அமுதாவிற்கு கால்களால் நிறுத்துவதே பரிச்சியமான ஒன்று.
வண்டியை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வேகமாக நடந்தாள் “நானே அவசரத்துல வேகமாக போய்கிட்டு இருக்கேன் ! நீயாவது ஞாபகப்படுத்த மாட்டியா? எத்தனை தடவை உனக்கு சொல்றது.” என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டே அவள் மறந்து வைத்துவிட்டுப் போன மதிய உணவை எடுத்து பையில் வைத்துக் கொண்டால். “சரி, சரி போயிட்டு வரேன்” என்று அவசரத்தில் அவள் அம்மாவின் முகத்தை கூட பார்க்காமல் சுவரைப் பார்த்து கூறிவிட்டு வெளியில் நடந்தாள்.
அமுதா ஒரு பிரபலமான கால் சென்டரில் வேலை செய்கிறாள். அந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அது ஒரு பழைய காலத்து ஓட்டு வீடு சென்னையில் இதுபோன்ற ஒரு வீட்டை பார்ப்பது மிகவும் அரிது. அமுதா கடைக்குட்டி என்பதால் அவள் அம்மா அவள் எது செய்தாலும் மௌனமாய் மட்டுமே இருப்பாள் அவ்வப்போது மகிழ்ந்தும் கொள்வாள். சுந்தரி ஏதும் பேசாமல் மகளை வழி அனுப்பி வைத்தாள்.
சுந்தரி மீண்டும் வீட்டிற்குள் வந்து அவளுக்கான அடுப்படி பணிகளை மேற்கொண்டாள் இது தினமும் சுந்தரியின் வீட்டில் நடக்கும் படலம் தான்.
வீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தனது கணவரின் புகைப்படத்தை துடைத்து அதற்கு பூவும், பொட்டும் வைத்து விடுவாள். அந்த புகைப்படத்தை துடைக்கும் போதெல்லாம் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் அவைகளை தொண்டைக் குழியில் போட்டு புதைத்து விடுவாள்.