” என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க .. ”
“ விதவிதமான க்ளயண்ட்ஸ்.. குடிகார நாய் ஒருத்தன் எல்லார்த்தையும் கஷ்டப்படுத்தறான். தற்கொலை பண்ணிக்கவன்னு மிரட்டல் வேற பண்றானம்மா.அதெப்பத்தி பேசிகிட்டிருந்தன்.”
”குடிகாரனோட ஒண்ணு சேத்தி சொன்னீங்களே . அது உங்களுக்கும் சேத்தா ‘
தேவராஜன் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
” செரி.. உள் ரூம்லே போயி உட்காருங்க. வந்தர்ரன்.. மகளே உள்ள போயி உட்காரு. வந்தர்ரேன்” சியாமளா தளதளத்துக் கொண்டிருந்த சேலையை சரிசெய்து கொண்டு உள் அறையைப் பார்த்தாள். அவளின் சேலைத்தலைப்பைப் பிடித்திருந்த குழந்தை தன் மிரட்சிப்பார்வையைத்தவிர்த்து இயல்பாகிப் புன்னகைத்தது.
சியாமளா வாசலில் நின்று பார்த்தபோதே நாலைந்து பேர் மும்முரமான விவாதங்களில் இருப்பது தெரிந்திருந்தது. தேவராஜன் அவர்களைப் பார்த்த கணத்தில் அங்கிருந்தே வா மகளே என்றார்.
அங்கிருந்தவர்கள் அதைக் கேட்டு புருவம் உயர்த்துவது போல் பார்த்தார்கள். மகளே என்ற அவரின் விளிப்புதான் அந்த புருவம் உயர்த்தலுக்குக் காரணம்.புருவம் உயர்த்தினவர்களின் மத்தியில் மீண்டும் சென்று உட்கார்ந்து கொண்டான். முன்வாசலில் இருந்த நாய் குரைத்து புது ஆள் யாரோ வருவதைச் சொன்னது
.” சும்மா இருடா கருப்பா. சும்மா சும்மா விசுவாசத்தைக்காட்டிக்காதே “ தேவராஜன் உரக்கச் சப்தமிட்டார். அந்த ஆள் மறைந்து போனார். நாயின் குரைப்பும் நின்று போய் விட்டது. லேசான சப்தத்தில் அந்த விவாதம் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு போல் குரல்கள் கேட்டன. முன் வாசலில் கட்டப்பட்டிருந்த கோழியொன்று கரகரத்து அதன் இருப்பைக்காட்டிக் கொண்டிருந்தது.
“ என்ன திடிர்ன்னு மகளே.”
தேவராஜன் உள் அறைக்கு வந்து உட்கார்ந்தார். குழந்தையின் எதிரில் அரைவட்ட நாற்காலியில் இடமிருந்தது
“ இந்தப்பக்கம் வந்தோம் . ஸ்கூல் தொறக்கப்போவுதே ஒரு நல்ல பேக் வேண்டியிருந்துச்சு.. வாங்குணம்”
” அப்பாவுக்கு பேக்கெ காட்டு மகளே”
“ அங்கிருக்கு “
“ எங்கம்மா.”
“ புத்தகம் வாங்குன இடத்தெலேன்னு சொல்லு “
“ புத்தகம் வாங்குன எடத்துலே எதுக்கு வுட்டுட்டு வந்தீங்களாமா”
“ போறப்போ எடுக்கத்தான் ”
“ இங்க கொண்டாந்திருந்தீங்கன்னா நானும் பாத்திருப்பன்லே “
“ நெக்ஷ்ட் டைம் கொண்டாரம் “ குழந்தையின் பார்வை எதிரிலிருந்த குழலூதும் கிருஷ்ணன் படத்தின் மீது படர்ந்த்து. விரல்களை வாய் அருகில் கொண்டு சென்று குழல் பாவனையைச் செய்தது. அதன் உதடுகளில் புன்னகை தவழ்ந்து மறைந்தது.
“ நீயும் கண்ணன் ஆகணுமா “
“ இல்லே கிருஷ்ணன் “
“ ஓ கிருஷ்ணன் ஆகணுமா “
“ அதெப்படி நான் கிருஷ்ணன் ஆகறது. ராதாவா வேண்ணா ஆகலாம் ”
“ அதெல்லா உனக்குத் தெரியுமா.. “ பின்பக்கமிருந்த பீரோவைத்திறந்து பணத்தை எடுத்து ஒரு கவரில் போட்டு குழந்தையிடம் தந்தார்.அந்த பீரோவில் ஒட்டப்பட்டிருந்த வெளிநாட்டுக்குழந்தை முகம் அந்தப்பக்கம் போய் நின்று கொண்டது.
“ ஸ்கூல் பீஸ் கட்டறதுக்கு பணமெல்லா வேணுமே. வாங்கிக்க பாப்பா” குழலூதும் கண்ணன் மேலேயே அப்பெண்ணின் பார்வை நிலைத்திருந்தது. ஒருநிமிடம் திரும்பிப் பார்த்தபடி “ ”அம்மாகிட்டதா இருக்கே “ என்றது. குழந்தையின் பின்பக்க மயிர்கள் கலைந்து கண்களை மறைத்ததை சியாமளா வலது கையால் தள்ளி விட்டாள்.
“ இருந்தா என்ன .. அப்பாவும் ஸ்கூல்காரங்களுக்குத் தரணுமில்லையா “
முன் அறையில் உட்கார்ந்திருந்தவர்களின் பார்வை ஏகதேசம் அவர்களின் மீதே இருந்த்து. பத்துக்கண்கள் உட்கார்ந்திருந்த நாலு கண்களின் மேல் பதிந்திருந்தன.
“ குடிகாரங்களெப்பத்தி ஏதோ சொல்ல ஆரம்பிச்சீங்க.. கவுன்சிலீங் கூட பண்ரீங்களா.. “
“ அனுபவம்தா கொஞ்சம் ஆறுதல் வார்த்தைகளா வரும். அதுக்குன்னு தியரி ஒண்ணும் தெரியாது. போற போக்குலெ வந்துது”
“ எப்பவிருந்து இது ..இந்த கவுன்சிலிங்கெல்லா”
” எல்லாம் சேந்ததுதா ..ஒவ்வொண்ணும் பிரிச்சுபாக்க முடியுமா “
“ செரி வர்ரம் . நெறையப் பேர் இருக்காங்க. காத்திட்டிருக்காங்க “ சியாமளா எழுந்து குழந்தையின் இடது கையைப்பிடித்தாள். அது வலது கையில் அவர் தந்த கவரைப்பிடித்தபடி அவளைப் பார்த்தது.
சுவர் ஓவியம் பார்வையிலிருந்து சற்றே விலகிப்போனது.சுவர் ஓரத்து சுவரின் பிய்ந்த காறை மெல்ல விழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
முன் வாசலுக்குச் சென்று செருப்பைப் போட்டுக் கொள்ளும் போது குழந்தைத் திரும்பி பார்த்து “ டாடா டாட் “ என்றது. ” பை ..மகளே ‘ நின்றபடியே தேவராஜன் தலையை நிமிர்த்தியபடி வலது கையை உயர்த்தினார். புருவங்களைத் தாழ்த்தி சகஜமாகிக் கொண்டவர்கள் போல் அந்த ஐவரும் தேவராஜைப் பார்த்தனர். ஏதோ விளக்கம் கோருவது போல் அவர்கள் பார்வை தேவராஜ் மேல் நிலைத்தது.
“ இன்னிக்கு எனக்கு முடியுமுன்னு தோணலே”
“ என்ன உடம்பு செரியில்லையா..”
“ டாக்டர் கிட்ட செக்கப்புக்குப் போயிட்டு வந்தன். “
அறையின் குளிர்சாதனப்பெட்டியின் ரிமோட்டை எடுத்து குறைப்பதற்கான ஆயத்ததில் ஈடுபட்டவன் போல் தேவராஜன் இருந்தார். பின்பக்க திரைச்சீலை அவனின் முகத்தில் பட்டு தொந்தரவு செய்தது.
.” எதுவா இருந்தாலும் புரோக்கர்கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானே “
“ பணமும் தேவையாயிருந்துச்சு.உடனே அவர்கிட்ட எதுவும் சொல்ல முடியலே ..”
“ செரி அந்த புரோக்கர் நாய் கிட்ட சொல்லிட்டுப் போ. வேற ஆளெ அனுப்பச்சொல்லி ..”
“ சொல்லீர்ரன் “
“ என்னமோ சோகத்திலே இருக்கே. ஒரு ஸ்மால் அடிக்கறையா “
“ அதுக்கும் மூடு இல்லே”
“ செரி.. காசுதா வேணுங்கறே.. வாங்கிட்டுப்போ. என்னன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுபோ “
“ டாக்டர் இனிமேலையும் அபார்ஷன் ஒடம்புக்கு ஒத்துவராதுன்னார். உசிருக்கே ஆபத்துன்னார் “
“முந்தி எத்தனை தரம் பணியிருப்பே “
“ ரெண்டுதரம் .உசிரைக்காப்பாத்துன்னார்“
“ உசிரா.. கொழதையான்னு யோசிச்சு முடிவு பண்ணிரு “
“ உசிர் வேணுமுன்னாலும் குழந்தையும் காப்பாத்தணும் .. யார்துன்னுதா.. .. யார்துன்னு சொல்றது. கொஞ்சம் ஜாக்கிரைதியா இருந்திருக்கலா “
“ ஜாக்கிரதைங்கறது எப்பவுந்தா இருந்திருக்க வேண்டியிருக்கு. ஜாக்கிரதையா இருந்துத் தொலச்சிருக்கலாமே “ கண்ணாடி டம்ளரிலிருந்து வாயை எடுத்தவன் அதன் கசப்பை உள்வாங்கிக் கொண்டவன் போல் முகத்தைச் சற்றே சுளித்தான்.
“ என் உசிரோட இன்னொரு உசிரும் .. அது யார்துன்னு தெரியாமெ”
“ அதுக்கு நான் தகப்பனா இருக்கட்டுமா “
“ கிண்டலா கேக்கறீங்களா ”
”பல சமயங்கள்லே கிண்டலா கேட்டிரூக்கன். இப்போ சீரியஸ்சாத்தா சொல்றேன் “
“ எப்பிடிங்க “
“ நீ கேட்டெ .. நான் சொல்றேன். நீயும் சாகக்கூடாது. அந்தக்குழந்தைக்கும் அப்பன் ஒருத்தன் வேணும். அது நானா இருந்துட்டுப் போறன் “
“ முடியுமா. யார் ஏத்துக்குவாங்க “
“ இதுலே ஏத்துக்க என்ன வேண்டியிருக்கு. இந்த நாப்பத்தஞ்சு வயசிலெ என்ன யார் எதுக்குன்னு கேட்டிருக்காங்க.என்னைப் பத்தி எல்லார்த்துக்கும் தெரியும். தெல்லவாரித்தனமாத்தா வாழ்க்கை போயிட்டிருக்கு. குடியும் பொம்பளைகளும்ன்னு. பெரிசா நல்லதா எதுவும் பண்ணுனதில்லே..உனக்காச்சும் செய்யலாமே. திடீர்ன்னு ஞானோதயம்மன்னு கூட சொல்லலாம் “
“ என்னெக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களா..”
“ அதெல்லா இல்லே. உன் கொழந்தைக்கு மட்டும் தகப்பன்கற ரோல் . அவ்வளவுதா. அந்தக் கொழந்தையெ வளர்க்கறதிலெ தகப்பன் பேருன்னு ஒண்ணு வேணும்பாரு. அந்த அவதூறிலிருந்து வாழ்க்கை முழுவதும் உன்னெக்காப்பாத்த மட்டும் என்னாலே முடியும்ன்னு தோணுது ”
“ அது போதுங்க “
“ செரி ..நீ போலாம். அந்த புரோக்கர் கிட்ட சொல்லிட்டுப் போயிரு .வேற ஆளெ அனுப்பச் சொல்லி ”
குளிர் அறையை மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பாட்டிலின் வாசம் அறையெங்கும் நிரம்ப ஆரம்பித்தது.
வாகனங்களின் நெரிசலில் அந்தக்குறுக்குச்சந்து திமிறிக்கொண்டிருந்தது .இருபுறமும் மனிதத்தலைகள் ஹெல்மெட்டுடன் மொட்டையாகக் காணப்பட்டன.
” டாட்.. பை “ தேவராஜன் எழுந்து வந்து வாசல் அருகில் நின்றார். இரட்டைச் சக்கர வாகனம் ஒன்று குறுக்காய் நின்று இடைஞ்சல் செய்து கொண்டிருந்தது.இருபுறமும் ஜடையை விரித்தப்பெண் போல் வாகனங்கள் நின்றிருந்தன. ‘ பை டாட்.. “
“ ஓகே.. மகளே “. குழந்தைக்கு வாகனங்களில் கவனம் என்பது போல் அதன் பார்வை இருபுறங்களிலும் நகர்ந்தது.
“ ரெண்டு பேர்த்தே கூடச் சேத்திட்டையுன்னு கேள்விப்படேன்.”
“ ஆமாங்க. அதைப்பத்தி இன்னிக்குச் சொல்லனும்ன்னு நெனச்சேன். கூட்டமா இருந்ததுனாலே ஜாஸ்தி பேச முடியலெ..”
“ அதுதா..”
“ பக்கத்து வீட்லெ இருந்த குடிகாரன் ஒருத்தன். உங்க பாஷையிலெ ஒரு குடிகார நாய். பெரிய தொந்தரவாப் போச்சு. அவனை பொறுத்துக்க முடியாமெ அவன் பொண்டாட்டி மண்ணெண்னெய் வெச்சு அவனைக் கொளுத்திட்டு அவங்களும் செத்துட்டாங்க. அவங்களோட ரெண்டு பொண்ணுக இப்போ என்கூடத்தா இருக்காங்க .. வேற அவங்க உறவினர்கள் யாரும் அந்தப் பொண்ணுகளெக் கண்டுக்கலே. அதுதா”
“ எப்பிடி பணரீதியா சமாளிக்க முடியும்ன்னு தோணுதா..”
“ நீங்க வாங்கிக் குடுத்த ரிப்கட்டிங்க் மிஷின் ஓரளவுக்கு பிரயோசனமா இருக்கு. நாலு பேர் சாப்படறதுக்கு ஆகற வருமானம் அந்த மிஷின் போடுது...”
வாகனங்கள் மெல்ல நகர ஆரம்பித்தன. வலது பக்கத்தில் இருந்த பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு தேவராஜின் பார்வையில் சிறு வீடாய் வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.வாகனங்களின் திமிறலில் அந்த வீதி அடைபட்டிருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.