ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று வரும்போது, யாரும் இத்தனை சொற்களுக்குள் சிறுகதை இருக்க வேண்டும் என்று வரையறை செய்வதில்லை. இப்பொழுது வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி வருகின்றது. பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட சிறுகதைகளின் அளவை மட்டுப்படுத்துகின்றன. நீண்ட கதைகளை விரும்புவதில்லை.
கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகள் அளவில் சிறியவை. ஆனால் உள்ளடக்கத்தில் பல அம்சங்களைத் தொட்டு நிற்பவை. அசத்துபவை. `மகிழ்’ வெளியீடாக, இந்த வருடம் (2022) வந்திருக்கும் `நோ போல்’ சிறுகதைத்தொகுதியில் மொத்தம் எட்டுக்கதைகள் இருக்கின்றன. கடந்த பதினாறு வருடங்களில் எட்டுச் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி, வாசிப்பதும் சினிமா பார்ப்பதும் தனக்கு மிகவும் பிடித்தமானது எனக் குறிப்பிடுகின்றார். கிருஷ்ணமூர்த்தியின் ஆரம்பகாலச் சிறுகதைகளில் இருந்த விடயதானம் தற்போதைய கதைகளில் காணக் கிடைக்கவில்லை. வேல் அன்பன், ஒரு வீடு – இருவேறு உலகம், பசி, சாப்பாடு சிறப்பாக வந்திருக்கின்றன. உயிர் சிறுகதை எழுதப்பட்டுள்ள உத்தி ஏனைய கதைகளில் இருந்து வேறுபடுகின்றது.
புலம்பெயர் நாட்டின் சில தமிழர்களின் சீத்துவக்கேட்டை சொல்கிறது `ஒரு வீடு – இரு உலகம்’. வீடு கட்டுவதும், அதை மற்றவர்களுக்கு சுத்திக்காட்டி தம்பட்டம் அடிப்பதும் இன்று ஃபாஷனாகிவிட்டது. வீட்டிற்குள்ளும் ஐ போனில் தான் உரையாடல். மகனும் அவனது பெண் சிநேகிதி சீனாக்காரியும் மேல்வீட்டில் லிவிங்டுகெதராகக் குடியிருப்பது, கீழ்வீட்டில் இருக்கும் பெற்றோருக்குத் தெரியாது என்றால் பாருங்களேன்! இது `ஒரு வீடு – இரு உலகம்’.
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை `வேல் அன்பன்’. 2042 ஆம் ஆண்டில் நடைபெறும் கதை. பிரபல எழுத்தாளர் வேலுப்பிள்ளை அன்பழகன் - வேல் அன்பனைப் பற்றிச் சொல்லும் கதை. சமீர், வேல் அன்பனின் தீவிர வாசகன். வேல் அன்பனை நேரில் பார்த்தது கிடையாது. ஒரு முதியோர் இல்லத்தில் பணி புரிகின்றான். சமீப காலமாக வேல் அன்பன் மாயமாக மறைந்துவிட்டார். பிள்ளை என்ற பெயரில், சமீர் வேலை செய்யும் அதே முதியோர் இல்லத்தில் இருக்கின்றார். சமீருக்கும் பிள்ளைக்குமிடையே நடைபெறும் (வேல் அன்பன் என்று தெரியாமலே) உரையாடல் சுவாரஷ்யமானது. கதையின் முடிவு திகைக்கவும் கலங்கவும் வைத்துவிடுகின்றது. வேல் அன்பனின் சாயலில் பல எழுத்தாளர்கள் நம் கண்முன்னே தோன்றக்கூடும்.
- நூலாசிரியர் கிருஷ்ணமூர்த்தி -
சிலவேளைகளில் பணத்தினால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. பசியைக்கூடத் தணிக்க முடிவதில்லை. ஒரு குழந்தையின் பசியைப் போக்கமுடியாத பணம், யுத்தத்தில் சிக்கியுள்ள குழந்தைகளின் பசியைப் போக்கட்டும் என முடிவெடுத்து `அகதிகளுக்கு நிதி’ என்ற உண்டியலில் பணத்தைப் போடுவது `பசி’ என்ற சிறுகதையின் முடிவு. அதே போல அறுசுவை உணவை ஆக்கத் தெரிந்த ஒருவருக்கு, அதைச் சாப்பிடக் கொடுத்து வைக்க முடியாத சூழ்நிலையைப் பிரதிபலிக்கின்றது `சாப்பாடு’ சிறுகதை.
பொதுவாக ஒரு புத்தகத்தின் தலைப்பானது – அந்தத் தொகுப்பில் இருக்கின்ற ஒட்டுமொத்தச் சிறுகதைகளையும் பிரதிபலிக்கும் வண்ணமோ, அல்லது தொகுப்பில் இருக்கின்ற கதைகளில் உச்சமான ஒன்றின் பெயராகவோ இருப்பது வழமை. அந்த வகையில் `நோ போல்’ என்ற புத்தகத்தின் தலைப்பு எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. `நோ போல்’ சிறுகதை கிரிக்கற் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லிச் செல்கின்றது. முரளிதரன் பந்துவீச்சில் ஒரு தவிர்க்க முடியாத விளையாட்டு வீரராக இருக்கலாம். ஆனால் அவரின் ஏனைய செயற்பாடுகளில் எனக்கு உடன்பாடு இல்லை.
கிருஷ்ணமூர்த்தி எண்ணிக்கையில் மிகக் குறைவான சிறுகதைகள் எழுதியிருந்தாலும் நல்ல சிறுகதைகள் சிலவற்றை இத்தொகுப்பில் தந்திருக்கின்றார். புதிய உத்வேகத்தில் மீண்டும் எழுத வந்திருக்கும் அவருக்கு எனது வாழ்த்துகள். புத்தகம் பற்றிய தொடர்புகளுக்கு : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.