உலகத்தமிழ் உறவுகளுக்கு அன்பின் வணக்கங்கள். சங்க இலக்கியம், வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுகளை மெய்ப்பிக்கும் இலக்கிய சான்றுகள். இவற்றில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். பழம் இலக்கியங்களை படித்து என்ன ஆகப்போகிறது என நினைப்பவர்கள் சற்றே நேரம் ஒதுக்கி இவ்விலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியலை படித்தர்களானால், அறம், காதல், வீரம் , வணிகம் , தலைமை , ஆளுமை என்பதெல்லாம் என்ன என்பதில் தெளிவான பார்வையை பெறுவார்கள். தெளிவு பிறந்தால் அச்சமூகம் நிச்சயம் சிறந்ததொரு சமூகமாக வளர வாய்ப்புள்ளது. மேலைநாட்டு வாழ்வியலை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கேனும் நம் பண்டைத்தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள காட்டுவோமாக.
இந்த கட்டுரையில் காவிரியின் பெருமையை, அழகை சங்க இலக்கியம் பட்டினப்பாலையின் வழியாக பருகுவோம் வாருங்கள்.
301 வரிகளைக் கொண்டதும் ,வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சமூகவியல் நோக்கர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் மற்றும் மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் விருப்பமானதும், பயன்தரத்தக்கதுமான நூல்களில் பட்டினப்பாலையும் ஒன்று. உள்ளதை உள்ளபடியே கண்ணாடி போல காட்டுவது சங்க இலக்கிய நூல்களில் காணப்படும் இயல்பு.
கரிகால் பெருவளத்தான் திருமாவளவன் ஆண்ட காவிரிப்பூம்பட்டினத்து நிலப்பரப்பை அழகுபடக் குறிப்பிடுகிறது பட்டினப் பாலை.
பாடல் துவக்கமாக காவிரியின் சிறப்பை அமைத்துக்கூறும்போது, ‘வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற் காவிரி’ என்று காவிரி பாய்கிற வெள்ளப் பெருக்கு போல் நயமும் மொழிநடையும் இருப்பது கண்டு மகிழமுடியும்.
இப்படி நூல் முழுவதும் படித்து ரசிக்கக் கூடிய வரிகள் ஏராளம். தமிழின் மிகப் பெரிய கருவூலத்தில் இந்நூலும் ஒன்று.அது பற்றி தமிழர் என பெருமை கொள்ளும் நாம் தெரிந்து கொள்வது தானே முறை.
இன்று கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் உரிமையுடையது போன்ற சூழல் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள வறண்ட காலத்தில் மட்டும் தமிழக மக்களால் காவிரி என்ற சொல் ஒலிக்கும் சொல்லாக உள்ளது காவிரி. ஆனால் காவிரியின் வரலாற்றைப் பார்க்கும்பொழுது காவிரிக்கும் காவிரி மீட்பு குழு அமைத்து காவிரித்தாயை மீட்கும் நிலையில் இன்று போராடும் தமிழகத்திற்குமான தொடர்பு மற்றும் உரிமை பன்னெடுங்காலமாக உள்ளது என்பதனை விளங்கி கொள்ள முடியும்.
“நீயே தண்புனல் காவிரிக் கிழவன்” (புறம்)
“கரிகாலன் காவிரி சூழ் நாடு” (பொருநராற்றுப்படை- பிற்சேர்க்கைப் பாடல்)
“காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர்” (புறம்- 385:8-9)
முதலான சங்க இலக்கிய பாடலடிகள் காவிரியாற்றின் உரிமையாளர்களாகப் பண்டைத் தமிழ்ச் சோழ மன்னர்கள் இருந்துள்ளதற்கு சான்று.
“ பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
“கழைநிலை பெறாக் காவிரி நீத்தம்” – (அகம்.-6)
“கழையளந் தறியாக் காவிரி” (அகம். 32)
“ கழைமாய் காவிரி” (அகம். 10)
“கழல்கால் பண்ணன் காவிரி வடவயின்” (அகம். 177)
“பல்வேல் மத்தி கழாஅர் முன்றுறை” (அகம். 226)
என்னும் பாடலடிகள் காவிரி ஆழமான நீர்நிறைந்தோடும் சிறப்போடு விளங்கியதை நினைவூட்டும். இன்று வறண்டு கிடக்கும் மணல்வெளியைக் காண்போர் இவ்வரிகளை நம்புவது கடினம்
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி
நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும், (15)
கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி
குற்றம் இல்லாத, புகழையுடைய, விளங்குகின்ற வெள்ளி என்ற கோள், திசை மாறி, தான் நிற்க வேண்டிய வட திசையில் நிற்காமல் தென் திசைக்கண் போனாலும், நீர்த்துளிகளை உணவாகக் கொண்ட வானம்பாடி வருந்துமாறு, மழை பெய்தலைத் தவிர்த்து, வானம் பொய்த்தாலும், தான் பொய்யாது, குடகு மலையின்கண் துவங்கி, கடலில் புகும் காவிரி ஆறு. அது தன்னுடைய நீரைப் பரந்து நிலத்திற்கு வளமையைச் சேர்க்கும்.
இங்கு வயங்கு வெண்மீன் என்று கூறப்படுவது சுக்கிரன் எனப்படும் குற்றம் இல்லாத, புகழையுடைய வெள்ளி என்ற கோள் (கிரகம்) ஆகும். இந்த வெள்ளி தான் வழக்கமாகச் செல்லும் பாதையினின்றும் திரிந்து திசை மாறி, தான் நிற்க வேண்டிய வட திசையில் நிற்காமல் தென் திசைக்கண் போனால மழை பொய்த்து போகும். இங்கு பேசப்படும் வானவியல் தமிழரின் தொன்மையை பறை சாற்றுகிறது. எப்போது மழை பொய்த்து போகும் என கோளை வைத்து கணித்திருக்கிறார்கள் நாம் முன்னோர்கள்.
‘தளி’ என்பது மேகத்திலுள்ள நீர். வானம்பாடி நீராக உண்ணுவது இந்தத் தளிநீரை மட்டுமே. நீர்த்துளிகளை உணவாகக் கொண்ட வானம்பாடி பறவைகள் , மழை பெய்தலைத் தவிர்த்து, வானம் பொய்த்தால் வருந்துகின்ன்றன.
அவ்வாறு வானம் பொய்த்தாலும், காவிரியாறு தொடர்ந்து ஓடிவந்து சோழநாட்டு மக்களைக் காக்கும் தாயாக விளங்கியதால் "பொய்யாக் காவிரி" என்கிறார் உருத்திரங்கண்ணனார். காவிரியாறு குடகு மலையில் தோன்றிக் கீழைக் கடலில் கலக்கிறது என்பதை “மலைத்தலையக் கடற்காவிரி” என்பர்.இது அணைகள் கட்டப்படாத அன்றைய காவிரி.
குடகு மலையின்கண் துவங்கி, கடலில் புகும் காவிரி ஆறு. அது தன்னுடைய நீரைப் பரந்து நிலத்திற்கு வளமையைச் சேர்க்கும்.மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் நிறைந்து கழனியில் பொன்னைப் போல விளைச்சல் பெருகும். வானம்பாடி நீரின்றித் தேம்பினாலும், காவிரியில் புனல் பாய்ந்து பொன் கொழிப்பது தவறுவதில்லையாம். காவிரித் தாய்க்குத் தலை, தலைக்காவிரி தோன்றும் இடம் குடகுமலை.
இப்படி காவிரி பொய்க்காத காவிரி பூம்பட்டினத்தின் வளமான காலனிகளில் என்னென்ன விளைந்தன தெரியுமா?
விளைச்சல் நீங்காத அகன்ற வயல்களில் கருமை நிறமான முதிர்ந்த கரும்புகள் குறைவில்லாமல். கரும்புகள் இன்று ஆலைகளுக்கு விற்கப்படுகின்றன. தொழில் புரட்சியில் தான் மேற்கத்திய உலகத்தால் ஆலைகள் உருவாக்கப்பட்டன என எம்முள் விதைக்கப்பட்ட வரலாறு, மூலத்தை அறியும்போது பொய்த்து போகிறது இங்கு.
ஆலைகள் கட்டி கரும்பு பாகு காய்ச்சியத்தை புலவரின் பின்வரும் வரிகளால் அறியலாம் :
'விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி
நீர்ச் செறுவின் நீள் நெய்தல்...'
மணமுள்ள பாகைக் காய்ச்சும் ஆலைகளின் நெருப்பின் புகைச் சுடுவதால், அழகு கெட்டு, நீரையுடைய வயல்களில் பூத்து கிடக்கும் நீண்ட நெய்தல் மலர்கள் வாடி விடுகின்றன. அந்த இடத்தில், காய்ந்த செந்நெல்லின் கதிரைத் தின்ற வயிற்றையுடைய எருமையின் முதிர்ந்த கன்றுகள் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும். நெற்குதிர்களின் நிழலில் எருமைகள் உறங்குவது என்றால் ஒவ்வொரு நெற்குதிர்கள் என்ன அளவில் உயரத்தில் இருந்திருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
குலைகளையுடைய தென்னையினையும், குலைகளை உடைய வாழையினையும், காயையுடைய கமுகினையும், மணங் கமழும் மஞ்சளையும், பல இனமான மாமரங்களையும், குலைகளையுடைய பனையையும், கிழங்கையுடைய சேம்பையும், முளையையுடைய இஞ்சியையும் உடையன மருத நிலங்கள் என்ற கூற்றின் மூலம் என்னென்ன விளைந்தன , எப்படி தரமான உழவு நடந்தது காவிரிக்கரையில் என்பது விளங்கும்.இன்று இவையெல்லாம் இங்கேயே விளைவிக்காமல் இறக்குமதி செய்யப்படுவதையும் எண்ணிப்பார்க்கலாம்
இதையெல்லாம் தெரிந்து கொண்டு பெருமைப்படலாம். வேறு என்ன செய்ய என்கிறீர்களா? உண்மையான வரலாறு வாழும் தலைமுறைக்கு வழிகாட்டும்.லட்சங்களை கொட்டி ஏமாந்து வெளிநாடுகளில் வேலை தேடும் எம் இளைஞர்கள் பொன்கொழிக்கும் மண்ணை பயன்படுத்தி சுயமாக சொந்தக்காலில் நிற்கலாம். வரலாற்றை இப்போது வாழ்வில் விளக்காக பயன்படுத்தலாம்.
அடுத்த கட்டுரையில் காவேரிப்பூம்பட்டினத்தின் மக்களின் வாழ்வு , செழுமை எவ்வாறு இருந்தது என்பதை பட்டினப்பாலை விளக்குவதை பார்க்கலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.