படித்தோம் சொல்கின்றோம் : வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் ! தி. லஜபதிராய் எழுதிய - வரலாற்றை வழிகாட்டியாகக் கொள்ள விரும்புவோர் படிக்கவேண்டிய நூல் !! - முருகபூபதி -
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், தோன்றிய அனைத்து சிங்கள – தமிழ் – முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பல சந்தர்ப்பங்களில் பிளவடைந்துள்ளன. அல்லது நீதிமன்றங்களைச் சந்தித்துள்ளன. ஆயுதம் ஏந்திப்போராடிய தமிழ், சிங்கள இயக்கங்களும் அரசியல் ரீதியாக தமது இனத்திற்கு விடிவைத் தேடித் தருவதற்காகவே அவ்வாறு ஆயுதம் ஏந்தியதாகச் சொன்னாலும், ஆளும் அதிகார வர்க்கத்தினால்தான் அடக்குறைக்கு ஆளாகின. ஆனால், இவ்வியக்கங்கள் தமது இயக்க உறுப்பினர்களினால், நீதிமன்றத்தை நாடவில்லை. தம்மிடமிருந்த ஆயுதங்களினாலேயே தீர்வுகளை கண்டடைய முற்பட்டனர். இவர்களுக்கு நீதிச்சட்டங்களில் நம்பிக்கை இருக்கவில்லை. ஆயுதங்களை மட்டுமே நம்பினர் ! சமகாலத்தில், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், தமிழரசுக்கட்சியும், தமிழர் விடுதலைக்கூட்டணியும் தங்கள் உட்கட்சி விவகாரங்களை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கின்றன.
இந்தப்பின்னணிகளுடன்தான், தமிழ்த்தேசிய விடுதலைக்கு ஆயுதப்போராட்டம்தான் தீர்வு, என்ற நோக்கத்தை இலக்காகக்கொண்டிருந்த ஈ.பி. டி. பி, ஈ.பி. ஆர். எல். எஃப், புளட், டெலோ, ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பி, தேர்தல்களிலும் போட்டியிடத் தொடங்கின. 1971 இல் நடந்த ஏப்ரில் கிளர்ச்சியை முன்னெடுத்த மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே. வி. பி. இயக்கமும் அக்காலப்பகுதியில் தடைசெய்யப்பட்டு, பொது மன்னிப்பின்பேரில் அதன் முக்கிய தலைவர்கள் 1977 இல் சிறையிலிருந்து விடுதலையாகி, மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோன்று எழுந்து, ஜனநாயக வழிக்குத் திரும்பி தேர்தல்களிலும் ஈடுபட்டு, 1983 ஆம் ஆண்டு அன்றைய ஜே. ஆர். ஜெயவர்தனாவின் ஐ. தே. க. அரசின் பதவிக் காலத்தில் மீண்டும் தடைசெய்யப்பட்டது, 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து கிளர்ச்சிகளை நடத்தியதையடுத்து, இவ்வியக்கத்தினர் கொடுரமாக அழிக்கப்பட்டனர். அதன் தலைவர்கள் ரோகண விஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார, மாரசிங்க உட்பட பலர் கொல்லப்பட்டனர்.