நான் ஆரம்பத்திலிருந்தே வாத்தியாரின் இரசிகன். ஆனாலும் நடிகர் திலகத்தின் படங்களைப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. காரணம் அவரது நடிப்பு. அவரது நடிப்பு மிகை நடிப்பென்றால் அதற்குக் காரணம் அக்காலகட்டத்தின் தேவையாக அது இருந்ததுதான். அதனால்தான் அவர் அப்படி நடித்தார். திரைப்படங்கள் என்பவை கலைக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. வர்த்தகமே அதன் முக்கிய அம்சம். பெரும்பான்மையான இரசிகர்கள் விரும்பியது வசனங்களையும், வசனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கூடிய நடிப்பையும்தாம் நடிகர் திலகம் சிறந்த நடிகர் அதனால் அவரால் அக்கால இரசிகர்கள் விரும்பியதைத் தன் நடிப்பால் கொடுக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் என் அம்மா, அப்பாவுக்கு மிகவும் பிடித்த திரைப்பட ஜோடி சிவாஜி _ பத்மினிதான்.
தமிழ்ச் சினிமா பாட்டிலிருந்து வசனத்துக்கு மாறிக்கொண்டிருந்த வேளையில் அவ்வுலகில் வந்து குதித்தவர் விழுப்புரம் சின்னையா கணேசன் (சிவாஜி கணேசன்). சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டெரிப்பதை மையமாகக் கொண்ட திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை சினிமாவைத் தம் கட்சிகளின் பிரச்சாரத்துக்குப் பாவிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் வெளியான திரைப்படம் கலைஞரின் வசனத்தில் வெளியான 'பராசக்தி'. அதில் முக்கிய கதாநாயகனாக நடித்ததன் மூலம் , ஒரேயுடியாக உச்ச நட்சத்திரமாகியவர் நடிகர் திலகம். அவரே அத்தகையதொரு வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளி விழாக் கொண்டாடிய 'பராசகதி' இலங்கையில் 240 நாட்களைக் கடந்து ஓடியது.நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்வுக்கு அஸ்திவாரமிட்டது , ஒரு விதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் கூறலாம். அறிஞர் அண்ணாவின் 'சிவாஜி கண்ட சாம்ராச்சியம்' நாடகத்தில் நடித்ததன் மூலம் விழுப்புரம் சின்னையா கணேசன் சிவாஜி கணேசனானார். கலைஞர் வசனத்தில் நடித்து, 'பராசகக்தி'யில் குணசேகரனாக அவ்வசனங்களைப் பேசியதன் மூலம் , முதற் படத்திலேயே உச்சத்தைத்தொட்டவர் அவர். பின்னர் அவர் காங்கிரஸ்காரராகி விட்டார். ஆனால் அப்போது காங்கிரஸ்காரராகவிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் , எம்ஜிஆராகி , திராவிட முன்னேற்றக் கழகத்தவராக மாறித் தன் படங்களில் கட்சிப் பிரச்சாரம் செய்து , தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தார். அதுவொரு வரலாற்றுச் சாதனை மட்டுமல்ல வரலாற்று முரணுக் கூட.
இன்று வரை நடிகர் திலகத்தின் 'பராசக்தி' வசனங்களை யாரோ ஒருவர் பேசிக் காட்டிக்கொண்டுதானிருக்கின்றார்கள். நடிகர்கள் பலர், நடிகர் சிவகுமார் உட்பட, திரைப்பட வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தபோது பேசிக் காண்பித்தது சிவாஜியின் 'பராசக்தி'யின் வசனங்களைத்தாம். 'பராசக்தி' குணசேகரனை இன்றுவரை யாரும் மறக்கவில்லை.
ஜூலை 21 நடிகர் திலகத்தின் நினைவு தினம். அவர் நினைவாகப் 'பராசக்தி' திரைப்படத்தில் இடம் பெறும் ' கவிஞர் உடுமலை நாராயண கவியின் வரிகளில் , பாடகர் சி.எஸ் .ஜெயராமனின் குரலில், ஆர்.சுதர்சனத்தின் இசையில் ஒலிக்கும் 'கா கா கா' , 'தேசம், ஞானம் கல்வி' பாடல்களையும், அவரது மிகவும் புகழ்பெற்ற 'பராசகதி' நீதி மன்றக் காட்சியினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.
பாடல்களின் சட்டங்களைக் கூர்ந்து கவனியுங்கள். நடிகர் திலகத்தின் பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தும் முகபாவங்களை நிச்சயம் நீங்கள் இரசிப்பீர்கள். நீதிமன்றக் காட்சியில் அவரது வசன உச்சரிப்பையும், அதில்தொனிக்கு ஆக்ரோசத்தையும், பல்வகை உணர்வுகளையும் வழங்கும் அவரது குரலை நிச்சயம் நீங்கள் இரசிப்பீர்கள்.
பாடல் - கா கா கா -
பாடல் - தேசம் , ஞானம் கல்வி -
'பராசக்தி' நீதி மன்றக் காட்சி -