14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ரபாரதிமணியன் நாவல். மாயத்தைப் பின்வைத்து, .ஆசைகளை முன் வைத்து உள் மனநிலை வெளிப்பாட்டின் எண்ணத்தொகுப்பு! - மு.கவியரசன் , திருநெல்வேலி. -
நாவல்: 14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ரபாரதிமணியன்
வெளியீடு - உயிர்மை பதிப்பகம் | விலை -ரூபா 135
மனிதன் என்பவன், என்னதான் அறிவாலும், ஆற்றலாலும், சிந்திக்கக்கூடிய செயல்திறன் படைத்தவனாக உயர்ந்து விளங்கினாலும், இவ்வுலகில் வாழும் மற்ற உயிர்களைப் போலத்தான் அவனும். இவற்றிற்குள் இருக்கக்கூடிய வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியம். ஓர் உயிர் பிறக்கிறதென்றால் அதற்கென்று உரிய கடமைகள் இருக்கின்றது. முதலில் ஆரோக்கியமான வாழ்வு சூழலை ஏற்படுத்திக்கொண்டு, தன் இனத்தை, தலைமுறையை அடுத்தக்கட்ட நகர்விற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதான் எல்லா உயிர்க்கும் பொதுவான, முக்கியமான கடமை. மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்பின் தான் மனிதனுக்கான அறிவு, நாகரீகம், மற்ற பிற எல்லாம். ஆனால் மனிதன் தன்னுடைய எண்ணவோட்டங்களுக்கு ஏற்ற, சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நிலையான மனநிலைப்பாட்டோடு இருப்பது கடினம். நடைமுறை வாழ்க்கைக்கும், இப்படித்தான் வாழவேண்டும் என்று யூகித்து எழுதிய வாழ்க்கைக்கும், நிலைத்தன்மை என்பது உறுதியானதாக இருப்பது அரிதானது. இதற்குள் எப்போதும் ஓர் அலை என்பது இருந்துகொண்டே இருக்கும். அவ்வலையைத்தான் சுப்ரபாரதிமணியனின் 14/40 கொண்டை ஊசி வளைவு எனும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் வழியாக விவரிக்கிறது.