அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் நாளை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெறுகிறது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இம்முறை மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடைபெறும் இவ்விழா குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் கலை இலக்கிய மாத இதழின் பிரதம ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் அனுப்பியிருக்கும் தனது வாழ்த்துச்செய்தியில், " 2001ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர்விழா இவ்வருடம் மெல்பன் நகரில் இடம்பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. " என குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலை-இலக்கிய ஆர்வலர்கள் வருடந்தோறும் ஒன்றுகூடும் விழாவாக இது நடைபெற்றுவருகிறது. அத்தோடு இலங்கையிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வது வழக்கமாகும்.2001ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது எழுத்தாளர் விழாவிலே நானும் எனது துணைவியாரும் பங்குபற்றினோம். அவ்விழாவில் மல்லிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழை அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சார்பில் வெளியிட்டுவைத்து உரையாற்றியமை மறக்கமுடியாத அனுபவமாகும். அத்தோடு அவ்விழாவில் இடம்பெற்ற கருத்தரங்குகளில் பங்குகொண்டதும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்ததும் இனிமையான நிகழ்வுகள். அதன்பின் 2004ஆம், 2006ஆம், 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற விழாக்களிலும் நாம் இருவரும் பங்குபற்றினோம். 2004ஆம் ஆண்டு கன்பரா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் "ஞானம்" இதழின் அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா சிறப்பிதழை வெளியிட்டது எமக்குப் பெருமைதரும் நிகழ்வாக அமைந்தது.
வருடம்தோறும் நடக்கும் இவ்விழாக்கள் மெல்பன், சிட்னி, கன்பரா, குவின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் இடம்பெற்று, இப்பிரதேசங்களில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குகொள்ள வகைசெய்வதும் சிறப்பான செயற்பாடாகும். இவ்வருட விழாவில் ஓவியக்கண்காட்சி, மறைந்த தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் ஒளிப்படக்காட்சி, நூல்கள், இதழ்கள்,பத்திரிகைகள் கண்காட்சி, நாவல் இலக்கியக் கருத்தரங்கு, கவிஞர்கள்அரங்கு, மெல்லிசை அரங்கு என்பன இடம்பெறவுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். தமிழ்மொழியை தமிழர்பண்பாட்டை தமிழர் தம் கலை இலக்கிய முயற்சிகளை புகலிட நாட்டில் போற்றிப் பேணும் பெரும்பணியாக இவ்விழாக்கள் அமைகின்றன. ஒவ்வொரு வருடமும் இவ்விழாவைச் சிறப்பாக ஒழுங்குசெய்து சிறந்த முறையில் நடத்திவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியச் சங்க நிர்வாகிகள் யாபேரது பணிகளையும் பாராட்டுகிறேன். விழா சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.