சென்ற ஞாயிற்றுக் கிழமை (4-11-2018) திரு.அகணி சுரேஸ் அவர்களின் மணிமேகலைப் பிரசுரத்தால் பதிக்கப்பட்டுள்ள, இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு என்ற நாவல் நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கல் நிகழ்வு ஈஸ்ட்ரவுன் ஒன்றுகூடல் மண்டபத்தில் மாலை மூன்று மணியளவில் அமரர் அலெக்ஸ்சாந்தர் நினைவு அரங்கில் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது. சிற்றுண்டி உபசாரத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வு வழமையான நூல் வெளியீடு போன்று இருக்காது சற்று வித்தியாசமானதாக இருந்தது.
இந்நிகழ்வில் நூல் பற்றிய விமர்சன உரைகளோ அல்லது வாழ்த்துரை, அறிமுகவுரை போன்ற நூலாசிரியர் பற்றிய உரைகளோ இருக்கமாட்டாது என்று நூல் ஆசிரியர் விரும்பம் தெரிவித்தாலும் மாறாகச் சிலரின் உரை வாழ்த்துரையாக மாறியிருந்தது. ‘எதிர்காலச்சந்தியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றுவதற்கு ஊக்கப்படுத்தலாம்’ என்ற தலைப்பில் அறிஞர்களின் உரைகள் இடம்பெறவேண்டும் என்று ஆசிரியர் விரும்பி இருந்ததால் உரையாற்றியவர்கள் அதுபற்றித் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவையோர் மிகவும் ஆர்வத்துடன் உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளின் சிறப்பான திறமைகளும் இந்த நிகழ்வில் வெளிக்காட்டப் பெற்றன. நிகழ்வுகளை தந்த சிறுவர், சிறுமிகளுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர். அறிஞர்களின் உரைகளுக்கு இடையில் அரைமணித்தியாலங்களுக்கு ஒரு தடவை சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. நூல் வெளியீட்டின் போது, அகணி சுரேஸ் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றும் அவரது மகனால் இசை அமைக்கப் பெற்று ஒலி வடிவில் இடம் பெற்றது.
நிகழ்வின்போது இடம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் உரையில் இருந்து ஒரு பகுதியயைத் தருகின்றேன்:
எதிர்காலச்சந்ததியினரை எவ்வாறு படைப்பாளர்களாக மாற்றலாம் என்ற தலைப்பில் உரையாற்றும்படி நூலாசிரியர் கேட்டிருந்தார். பொதுவாக எடுத்துக் கொண்டால் படைப்பாளிகள் என்று குறிப்பிடும் போது படைப்பாளிகள் பல விதப்பட்டாலும் இங்கே ஆக்க இலக்கியத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதைப்பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். எதிர்கால சந்ததியினரைப் படைப்பாளிகளாக மாற்றுவதற்கு முதலில் இலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதற்கு ஏற்ற சூழலை அவர்களுக்காக உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கு முதற் கட்டமாக வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். தாயகத்தில் படித்தவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் படைப்பாளிகளாக மாறவில்லை. பள்ளிப்படிப்பைத்தவிர வேறு எந்தப் பொழுது போக்குப்படிப்புகளுக்கும் அனேகமான பெற்றோர் பிள்ளைகளை அனுமதிக்கவில்லை. குறிப்பாக கதைப்புத்தகங்கள், வார, மாத இதழ்களைகூட வாசிக்க விடவில்லை. அதனாலே உயர்கல்வி கற்ற பலர் குறிப்பிட்ட துறையில் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், இலக்கியத்திலோ அல்லது பொது அறிவிலோ சிறந்து விளங்கவில்லை. எங்கள் சமூகத்தில் இன்றும் அங்கும்சரி, இங்கும்சரி அது ஒரு குறைபாடாகவே இருக்கின்றது. ஆனாலும் இதை எல்லாம் கடந்து ஆங்காங்கே பல படைப்பாளிகள் உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதே உண்மை.
இன்று இங்கே உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால் வாசிப்புப் பழக்கம் இளம் தலைமுறையிடம் இல்லாததே!. இதை ஊக்கப்படுத்தினால் அவர்களுக்குப் பிடித்தமான துறையில் அவர்களால் முன்னேறமுடியும். பெரும் செலவு செய்யாமலே இதை நடைமுறைப் படுத்தலாம். சின்ன வயதில் இருந்தே அவர்களுக்கு அறிவு பூர்வமான குட்டிக் கதைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினால், அந்த வாசிப்பு அனுபவம் ஒரு கட்டத்தில் அவர்களிடம்; படைப்புந்தலை ஏற்படுத்தலாம். படைப்பு மனநிலை, அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற தீவிரநோக்கம், அதற்கான உழைப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து வெளிவரும்போது, இலக்கியத்திற்கு சிறந்த படையல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. படைப்பாளுமையின் தளங்களாகக் கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, விமர்சனம், செய்திகள் என்று பல தளங்கள் இருக்கின்றன. வாசகர்களைக் கவரவேண்டுமானால், படைப்பாளிகளுக்கு மொழி அறிவும், அதைப் பயன்படுத்தும் திறனும், அப்புறம் கொஞ்சம் அதிஸ்டமும் முக்கியமாக இருக்க வேண்டும். இதுதான் படைப்பாளியின் வாசக வட்டத்தை நிலைநாட்டுகின்றது. வாசக வியாபகம் விரிந்து சென்றால் உங்கள் பக்கம் இலக்கிய உலகத்தின் பார்வையைத் திருப்ப முடியும்.
அடுத்த தலைமுறையின் கவனத்தை இலக்கியத்தின் பக்கம் திருப்ப வேண்டுமானால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாசிப்புப் பழக்கத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இங்கே வெளிவரும் தூறல், தளிர், விளம்பரம், தங்கதீபம் போன்ற சில இதழ்கள் சிறுவர்களைப் படைப்பாளிகள் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதால், பல சிறுவர்களின் ஆக்கங்களை அந்த இதழ்களில் காணமுடிந்தது. தமிழ் மிரர் பத்திரிகையில் ‘யுத்கோணர்’ என்ற பகுதியைப் பொறுப்பெடுத்து இளம் தலைமுறையினரிடம் இருந்து ஆங்கிலத்தில் ஆக்கங்களைப் பெற்றுப் பிரசுரிக்கின்றோம். முதலில் அவர்கள் தயக்கம் காட்டினாலும், அவர்களுக்கு ‘உங்களால் முடியும்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை எழுத வைத்திருக்கின்றேன். ஒவ்வொரு மாதமும் இரண்டு இளம் வயதினர் அதில் எழுதுகிறார்கள். தமிழில் முடியாவிட்டாலும் ஆங்கில இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் தமிழர்களாக வெகு விரைவில் தலைதூக்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
உங்கள் பிள்ளைகளால் முடியும் என்றால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதித்தாருங்கள். நீங்கள் தான் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இங்கே எல்லா வசதிகளும் இருக்கின்றன. பிள்ளைகளுக்கு இத்துறையில் அனுபவம் இல்லாததால் எதை எழுதுவது என்று கேட்டார்கள். தெரிந்ததை எழுதுங்கள், எங்கள் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக எழுதிப் பழகுங்கள் என்று பதில் சொன்னேன். பரதநாட்டியம் பழகும் மாணவி ஒருவர் பரதநாட்டியத்தில் கண்களின் பங்கு என்ன என்பது பற்றி எழுதியிருந்தார். இன்னுமொரு மாணவி வீட்டையும், நாட்டையும் எப்படிச் சுத்தமாக வைத்திருக்கலாம் என்று எழுதியிருந்தார். புதுப்புது ஆக்கபூர்வமான எண்ணங்கள் அவர்களிடம் இருக்கின்றன, அதை எழுத்து மூலம் வெளிக் கொண்டு வருவதற்குப் பெற்றோராகிய நீங்கள்தான் துணை புரிய வேண்டும்.
வெறும் கற்பனைக் கதைகளைக் குறிப்பிடாமல், நிஜமாகவே நாங்கள் எடுத்த சில முயற்சிகளை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சியை ஊரிலே உள்ள, மகாஜனக்கல்லூரியில் பரீட்சாத்தமாகச் செய்து பார்த்தோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த கல்லூரியில் முதலில் படிப்பகம் ஒன்றை ஏற்படுத்தினோம். அடுத்து இங்கிருந்து முடிந்தளவு நூல்களை அனுப்பினோம். கிழமையில் ஒரு பாடநேரத்தில் பிள்ளைகள் படிப்பகத்திற்குச் சென்று ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டும். இப்போது கல்லூரி அதிபரே அதை முன்னின்று நடத்துகின்றார். தொடக்கத்தில் ஒரு புத்தகத்தை வாசித்தவர்கள் இப்போது இரண்டு மூன்று புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் கொடுப்பதற்கு முடிந்த அளவு உதவி செய்தோம். அதேபோல கல்லூரி அதிபராக இருந்த திரு. ஜெயரட்தினம் அவர்களின் நினைவு விழாவிற்கு சிறுகதைப் போட்டி ஒன்றை பாடசாலையில் நடத்தி அதற்கான ஊக்கப் பரிகளைக் கொடுத்தேன். அதேபோல மகாஜனாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது வெற்றிமணி பத்திரிகையின் ஆதரவுடன் மாணவர்களுக்காக இலங்கை முழுவதற்குமான சிறுகதைப் போட்டியை நடத்தினேன். ஆர்வத்துடன் பல இளம் தலைமுறையினர் பங்கு பற்றியிருந்தனர். தூறல் இதழில் அந்தக் கதைகளைப் பிரசுரித்த போது சிறந்த பல படைப்பாளிகளை அதன் மூலம் இனங்காண முடிந்தது. மகாஜனா பழைய மாணவர் சங்கத்தின் வெளியீடான மகாஜனன் மலரின் தொகுப்பாசிரியராக இருந்தபோது ஒருமுறை வெளியிட்ட மலரில் முழுவதுமே இளைய தலைமுறையின் ஆக்கங்களை வெளியிட்டிருந்தோம். அவர்களால் முடியும் என்ற நம்பிக்கையை அது உருவாக்கித் தந்தது. அடுத்த தலைமுறையிலிருந்து ஒருசில படைப்பாளிகளையாவது உருவாக்குவதற்கு இந்த முறை இலகுவானது. இதை எல்லாப் பாடசாலைகளிலும் நடைமுறைப் படுத்தினால் நல்ல பலனை அடைய முடியும். இங்கே படைப்பாளிகளை உருவாக்குவதில் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. பிள்ளைகளின் ஆக்கங்களை வெளியிடுவதானால் பெற்றோரின் அனுமதி வேண்டும். ஆகவே இந்த முயற்சிக்கு முதலில் பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும். பிள்ளைகளை நல்வழியில் கொண்டு செல்வதற்குப் பெரும் தொகையான பணத்ததைச் செலவிட வேண்டும் என்பதில்லை. வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் போது தேடல் தானாகவே வருவதால் அறிவு வளர்ச்சி அடையும். சிறு வயதிலேயே எது நல்லது, எது கெட்டது என்பதை அவர்களாகவே புரிந்து கொள்வார்கள். எல்லோரிடமும் திறமை இருக்கிறது, அதை வெளியே கொண்டு வர வேண்டும். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கின்றோம். எனக்கு இந்த வாய்ப்பைத் தந்த இனிய நண்பர் அகணி சுரேஸ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, அவரது எழுத்துக்கள் இன்னும் வெளிவந்து கனடிய தமிழ் இலக்கியத்திற் அணி சேர்க்க வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகின்றேன். நன்றி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.