மீண்டுமொரு முழுநாள் நாவல் கருத்தரங்கொன்றினை விம்பம் கலை, இலக்கிய கலாச்சார அமைப்பானது வெற்றிகரமாக நடாத்திக் காட்டியுள்ளது. ஏற்கனவே ஒளியூட்டப்பட்ட நாவல்கள் அல்லது பிரபல்யமான படைப்பாளிகளின் நாவல்கள் என்றில்லாமல் எப்போதுமே விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை களமாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கின்ற படைப்புக்களையே தனது தேர்வாகக் கொண்டுள்ள விம்பம் அமைப்பானது இம்முறையும் தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டிலிருந்து சற்றும் வழுவாமல் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இதற்காக தனியொரு மனிதனாக இருந்து அர்ப்பணிப்புடன் இயங்கும் ஓவியர் கிருஷ்ணராஜாவின் பணிகள் என்றுமே எம்மைப் பிரமிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்துபவை. இது நான்காவது நாவல் கருத்தரங்கு. கடந்த 22.10.201 சனிக்கிழமையன்று வழமை போன்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடை பெற்ற இம்முழு நாள் கருத்தரங்கில் சமகால இலக்கியப் படைப்புக்கள் ஆன 10 ஈழ, தமிழக, பிறமொழி நாவல்கள் 18 விமர்சகர்களினால் அறிமுகமும் விமர்சனமும் செய்யப்பட்டன. இது மட்டுமன்றி ஒளிப்படக் கலைஞர்கள் சுகுணசபேசன் (லண்டன்), தமயந்தி (நோர்வே), தமிழினி (கனடா), அமரதாஸ் (சுவிஸ்), கருணா (கனடா), சாந்தகுணம் (லண்டன்) ஜெயந்தன் (சுவிஸ்)ஆகியோரது ஒளிப்படக் கண்காட்சியும் அங்கு இடம்பெற்றிருந்தது.
கலை 11 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அரங்கின் இருபுறமும் காட்சிப்படுத்தப் பட்டிருந்த ஒளிப்படங்களினால் அரங்கம் பிரமிப்பூட்டும் அழகுடன் திகழ்ந்தது.
நிகழ்வின் முதலாவது அமர்வு நவஜோதி யோகரட்ணம் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக தேவகாந்தன் எழுதிய ‘கந்தில் பாவை’ நாவல் விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டது. இந்நாவல் குறித்து கனடாவில் இருந்து ஸ்கைப் மூலம் கவிஞர் மு.புஷ்பராஜன் அவர்களும் கவிஞர் நா.சபேசனும் நிகழ்த்தினார்கள். இருவருமே இந்நாவல் குறித்த எதிர்மறையான கருத்துக்களையே அதிகம் வைத்தனர். முக்கியமாக இருவரும் இந்நாவலில் உள்ள வரலாற்று, புவியியல், விஞ்ஞான தகவல் பிழைகளையே அதிகமாக சுட்டிக்காட்டினர். இன்னமும் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் அவசரத்தில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் போல் குறுகி விட்டதாகவும் கூறினார்கள். இதனை அவர்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் அல்லது எண்ணவோட்டத்தில் சொன்னார்களோ தெரியவில்லை. ஆனால் இது தேவகாந்தன் என்னும் ஒரு அற்புதமான கதை சொல்லியினால் ஒரு உன்னதமான தளத்தில் படைப்பு மொழியில் எழுதப்பட்ட நாவலாகவும், கடந்த பல வருடங்களில் வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் நான் கருதியிருந்த எனது எண்ணங்களில் எந்தவித மாற்றங்களினையும் ஏற்படுத்தவில்லை.
அடுத்து லக்ஷ்மி சரவணகுமாரின் ‘கொமோரா’ நாவல் குறித்து ஹரி ராஜலக்ஷ்மி உரையாற்றினார். இந்நாவலிற்கு எதிராக ஏற்கனவே பின்னப்பட்ட விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அண்ட் கோ என்ற பலமான வலையமைப்பொன்றினால் மிகவும் காரசாரமாகவும் தீவிரமாகவும் சேறு பூசப்பட்டது நாம் அறிந்ததே. ஆயினும் வேறு அலைவரிசையில் சிந்திக்கின்ற எழுதுகின்ற ஹரி ராஜலக்ஷ்மி வித்தியாசமான விமர்சனத்தை முன்வைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஹரியினது சிந்தனையும் அவர்களது பலமான வலையமைப்புக்குள் சிக்குண்டதாலோ என்னவோ அவரும் அதே அலைவரிசையில் தனது பார்வையைச் செலுத்தி இந்நாவலானது குப்பை என்பதிற்குமப்பால் கடாசி வீசப்படவேண்டிய நாவல் என்று தனது உரையை முடித்திருந்தார். ‘ஏற்கனவே முடிந்த காரியம்’ என்று விசர்ச்செல்லப்பா பாணியில் எனக்குள் எண்ணிக் கொண்டேன்.
தமிழ்க்கவியின் ‘இனி ஒரு போதும்’ நாவல் குறித்து மீனாள் நித்தியானந்தன் உரை நிகழ்த்தினார். ஈழவிடுதலைப் போரின் இறுதிக்கட்டம் குறித்து பேசும் இந்நாவல் குறித்து அவர் உரையாற்றும் போது, அந்த இறுதி நிகழ்வுகள் குறித்து அவர் விபரிக்கும்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு உருக்கமான உரையினை ஆற்றினார். அண்மையில் மறைந்த தமிழக எழுத்தாளர் எஸ்.அர்ஷியாவின் தமிழகத்தில் வாழும் உருது மொழி பேசும் மக்களின் வாழ்வியலைக் களமாகக் கொண்ட ‘ஏழரைவகைப் பங்காளி’ நாவல் குறித்து பாத்திமா மஜிதாவும் கஜன் காம்ப்ளரும் காத்திரமான உரைகளை நிகழ்த்தினர்.
இரண்டாவது நிகழ்வு றஜிதா சாம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலாவதாக சென்னை சிந்தாரிப்பேட்டையில் அரச குடியிருப்பு மையங்களில் வாழும் வறிய மக்களின் வாழ்வினை பகைப்புலமாகக் கொண்டு படைக்கப் பட்ட தமிழ்ப்பிரபா எழுதிய ‘பேட்டை’ நாவல் குறித்து தோழர் வேலுவும் ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்துவும் உரையாற்றினார்கள். மத்தியகிழக்கிற்கு பணி நிமித்தம் செல்லும் மாந்தர்கள் படும் அவலங்களையும் இன்னல்களையும் விபரிக்கும் கவிஞர் சாரா எழுதிய ‘சபராளி அய்யுபு’ நாவல் குறித்து மாதவி சிவசீலனும் பா.நடேசனும் உரை நிகழ்த்தினார்கள். அடுத்ததாக கிழக்கிலங்கை முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைகளை களமாகக் கொண்டு படைக்கப்பட்ட ஜே.வஹாப்தீன் எழுதிய ‘கலவங்கட்டிகள்’ நாவல் மீதான விமர்சனம் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலில் பேசிய தோழர் கோகுலரூபன் இதன் மீது மிகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் தனதுரையில் “அண்மையில் நான் வாசித்த நாவல்களில் ஒரு மோசமான நாவல். நாவல் என்ற புரிதல் எதுவுமின்றி மிகவும் மட்டரகமான வர்ணனைகளினால் பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனை வெளியிட்ட கிழக்கிழங்கை சபை பதிப்பகத்தினர் இதற்கு பதிலாக பத்து நாவல்களை அவருக்கு வாங்கி கொடுத்து நாவல் என்றால் என்ன என்பதினையும் எப்படி எழுத வேண்டும் என்பதினையும் கற்றுக் கொடுத்திருக்கலாம்.” என்று ஆக்ரோஷமாக முன் வைத்தார். ஆனால் அடுத்து உரையாற்றிய யமுனா ராஜேந்திரன் "பரதவ மக்களின் வர்க்கப் போராட்டமாக இக்கதை யதார்த்தமும் இயல்புவாத செல்நெறியும் கொண்ட ஒரு நாவலாக விரிகின்றது. பரதவ மகளின் காதலும் அவல வாழ்வும் குறித்த இந்த நாவலை தகழியின் 'செம்மீன்' வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' நாவல்களின் தொடர்ச்சியாக நாம் பார்க்கலாம்." என்று கூறி இதற்கு முஸ்லிம் மீனவ மக்களின் வாழ்வு குறித்து பேசும் முதல் தமிழ் நாவல் என்ற புகழாரத்தையும் சூட்டினார்.
மூன்றாவது அமர்வினை நவரட்ணராணி சிவலிங்கம் தலைமை தாங்கினார். முதலில் மலையக மக்களை பகைப்புலமாகக் கொண்டு மு.சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ நாவல் குறித்து மு.நித்தியானந்தன் அவர்கள் உரையாற்றினர். அவர் தனதுரையில் “இந்நாவலானது 1867 இல் திருச்சியில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் வாழ்வினை, அவர்கள் நூற்றாண்டு காலமாகப் பட்ட அவலங்களை வெகு யதார்த்தமாக சித்தரிக்கின்றது” என்று குறிப்பிட்டார்.
பிறமொழி நாவல் வரிசையில் எடுத்துக்கொள்ளப்பட்ட அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘The Story of a Brief Marriage’ நாவல் குறித்து ராஜேஸ்வரி பாலசுப்ரமணியமும் சந்துஷ் குமாரும் உரையாற்றினார்கள். குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் குறித்து கெளரி பராவும் அருள் குமாரும் உரையாற்றினார்கள்.
மீண்டும் ஒரு முழுநாள் நாவல் கருத்தரங்கு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது குறித்து அனைவருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும். விளிம்பு நிலை மக்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் குரலாக, அடக்குமுறைகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக ஒலிக்கின்ற விம்பம் கலை, இலக்கிய கலாச்சார அமைப்பின் குரலானது தொடர்ந்தும் எதிரொலிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும். மீண்டும் தனியொரு மனிதனாக இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்திக் காட்டிய ஓவியர் கிருஷ்ணராஜாவின் அர்ப்பணிப்பு உண்மையில் போற்றுதலுக்குரியது. தொடர்ந்தும் அவர் பணி சிறக்கவேண்டும். Well done கிருஷ்ணராஜா.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.