கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 9-ம் திகதி (09 - 12 - 2018) ஞாயிறு மாலை 5 மணிக்கு ஆறு நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ்ச் சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் என். சண்முகதாசன் அரங்கில், மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், மூத்த கலை இலக்கியப் படைப்பாளர் - பத்திரிகையாளர் திருமதி அன்னலட்சுமி இராசதுரை கௌரவிக்கப்படவுள்ளார்.
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிப்பார். 'ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன், ஓய்வுபெற்ற கல்லூரி அதிபர் மா. கணபதிப்பிள்ளை, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ். பாஸ்கரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல..., ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் பத்மா இளங்கோவனின் 'செந்தமிழ் குழந்தைப் பாடல்கள், செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்" என்ற நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றன.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஜி. இராஜகுலேந்திரா, 'தாயக ஒலி" சஞ்சிகை ஆசிரியர் தம்பு சிவா, டபிள்யூ. சோமரட்ணா, எம். ஏ. சி. இக்பால், மேமன்கவி, வசந்தி தயாபரன் ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்குவர். வி. ரி. இளங்கோவன் ஏற்புரையாற்றுவார்.
வி. ரி. இளங்கோவனின் நூல்கள் அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்டுப் பாராட்டுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முற்போக்கு மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் கலை இலக்கியப் படைப்பாளிகள் - இலக்கிய இரசிகர்கள் பெருமளவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.
- இ. ஓவியா
- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
.