ஓர் அருங்காட்சியகமும் இந்திய வரலாற்றின் ஒரு பக்கமும்! - ஜோதிகுமார் -
1600ல், கிட்டத்தட்ட 215 வியாபாரிகளும் முதலீட்டாளர்களும், லண்டனில் ஒன்றிணைந்து, ஈஸ்ட் இந்தியன் கம்பனி என்ற ஒரு கம்பனியை உருவாக்கிக்கொண்டனர். நோக்கம் : தென்னிந்தியாவில் திரவிய பொருட்களுக்கான, வர்த்தக உறவுகளை ஸ்தாபித்து, ஏகோபிதத்தை நிலைநாட்டுதல், என்பதுவே. (அபின் உட்பட–பருத்திப்பட்டு, ஏனைய பல்வகைப் பொருட்கள்). ஆனால், போர்த்துக்கல்-டச்சு-பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே களத்தில் இருந்த ஒரு சூழ்நிலையில், இக்கொள்ளையடிப்பில் ஓர் ஏகோபித்த நிலையானது, பெருத்த சவாலை ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால், இலாபங்களை ஈட்டித்தருவது என்ற கோதாவில், மேற்படி நடவடிக்கை தவிர்க்க முடியாததேயாகும்.
ஒரு 39 வருடங்கள் கழிந்துபோன நிலையில், 1639இல், சென்னையின் ஒரு ஒதுக்குபுற மீன்பிடி கடற்கரையில், இதற்கென ஒரு கோட்டை தனது கட்டுமானத்தை துவங்கியது (Fort Saint George). ஆனால், 1608லேயே (அதாவது, இதற்கு 30 வருடங்களுக்கு முன்னரேயே) ஆங்கிலேயர் சூரத், குஜராத் போன்ற இடங்களில் இத்தகைய வர்த்தக தளங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதும் அவதானிக்கத்தக்கதே.
தனது கடந்தகால, இரு தளங்களின் அனுபவங்கள், துணையிருந்தது போல, போர்த்துக்கேயர், திரவிய பொருட்களுக்காக, இலங்கையில், தொடுத்த போரின் போது, இலங்கையில் உள்ள கோயில்களை எல்லாம் சிதைத்தொழித்தனர் என்ற தகவல்களும், அதன் வழி பெற்ற அனுபவங்களும் ஆங்கிலேயருக்கு கை கொடுத்திருக்கலாம்.
இருந்தும், ரோமன் இராணுவத்தில் பணிப்புரிந்து, பின் ஈற்றில், மதத்துறவியாக பழுத்துவிட்ட Saint George என்ற இறந்து போன ஒரு மதகுருவின் பெயராலேயே மேற்படி கோட்டையானது, நிர்மாணிக்கப்பட்டது. இது தனது இறுதிவடிவத்தை 23.04.1644ல் நிறைவு செய்தப்போது, அன்றைய மதிப்பில் அது 3000 பவுன்களை விழுங்கி தீர்த்திருந்தது. ஆனால் இம் 3000 பவுன்கள் என்பது ஓர் ஆங்கிலேய பார்வையில் ஓர் முதலீடாகவே இருந்தது.