- டால்ல்ஸ்டாயும் மாக்சிம் கார்க்கியும் -
இருபதாவது முறை வாசிக்கும் போதே, இக்குறுகிய வரிகளில் மறைந்து கிடக்கும் அழுத்தங்களை ஓரளவில் என் மனதளவில் கிரகிக்க கூடியதாக இருந்தது. இத்தனை இரத்தின சுருக்கமாக கூறுதல் கடினம். ‘கடுகைத் துளைத்து’ என்று கூறுமாப்போல், கிட்டத்தட்ட, இங்கேயும் அதே பண்பலைதான். ஆனால், இது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் செயற்படுவதாய் இருக்கின்றது எனலாம்.
இறைவன் பொறுத்து டால்ல்ஸ்டாய் கொண்டுள்ள அபிப்ராயங்கள் விசித்திரமானது எனலாம். தொளதொளத்து போன தன் சட்டை பைக்குள் கையை விட்டு, ஒரு டயரியின் நைந்த பகுதியை கொடுத்துவிட்டு: “இறைவன்…அதுவே எனது ஆர்வம்” என கார்க்கி திகைத்து போகும்படி வரையறுக்கும் இவரது வார்த்தைகள் எம்மையும் ஒருகணம் அதிர செய்கின்றது. என்ன இது? ஆசையா? அல்லது ஆர்வமா?? அல்லது மனிதகுலத்தின் மேலேயே தன் ஒட்டுமொத்த மரியாதையையும் வைத்ததன் விளைவா?.
ஆயிரம் இலக்கியங்களை முகர்ந்து பார்த்ததன் விளைவும், பின் இங்குள்ள தத்துவ செல்வங்களை அனைத்தையும் ஒன்று திரட்டி, அவற்றுடன் ஆயிரம் மனிதர்கள் நடந்த காலடி சுவடுகளையும் உள்ளெடுத்து, தன் கருத்தை சிருஷ்டித்ததன் விளைவா இவரது வார்த்தைகள் என்ற ஒரு கேள்வி எம்மை திக்குமுக்காட செய்கின்றது. மகாபாரதத்தின் தோற்றுவாயை அல்லது இராமாயணத்தின் தோற்றுவாயை உள்ளடக்க கூடிய இக்கேள்விகள் தனித்தன்மை வாய்ந்தவை என்பது தெளிவு.
இதன் தொகுப்பு ஒருவேளை இவரது கடவுளாக பரிணமித்திருக்கலாம். இது கார்க்கியின் அவதானிப்பு. மறுபுறத்தில் இது பாரதியின் கடவுளுடனும் பயணிக்கலாம் - காலங்களை கடந்த நிலையில்.
கார்க்கிக்கு கைகொடுத்த பல விடயங்கள் பாரதிக்கு கிட்டாதவையாக இருந்திருக்கலாம். ஆனால் அவை உழைப்பின் பிரம்மாண்டத்தையும், ரஷ்யாவின் புதிய விழிப்பினையும், அந்னியமாக்காது ‘கடைக்கண்’ வைத்த நிலையினையே பாரதிக்கு அளித்திருக்கின்றது. அவனது கடவுளும், சிறுமை காட்டாது உழைப்பை உள்ளடக்கி கொள்கின்றது. இதுவே, ஒருவேளை பாரதிக்கும் டால்ஸ்டாயிக்கும் இருந்த ஒற்றுமை என அபிப்பிராயப்படலாம். இது பொறுத்து டால்ஸ்டாயின் குறிப்புகளை மேலும் புரட்டி பார்த்தலும் தகும்.
டால்ஸ்டாயின் மொழி ஆளுகை பொறுத்து கூறும் போது இவர் இத்திசையில் பயணித்திராவிட்டால், ஒரு இயற்கை விஞ்ஞானியாக மாறியிருப்பார் (Naturalist).
அதாவது, யதார்த்த விதிகளை புறந்தள்ளாது அவ்விதிகளை உள்வாங்குவது இவரது முதலாவது படிநிலையாகின்றது. இவை அனைத்தும் சேர்வதே இவரது மொழி ஆளுமை.
மொழியின் கையாளுகை தொடர்;பில் அவர் ஒரு ‘பரம்பொருள்’ என கார்க்கி அபிப்பிராயப்படுவது ஒரு சரியான செய்கையே. இவர் கிருஷ்ணன் போன்ற வகைப்பட்டவர் அல்ல. ஆனால் ‘பரம்பொருள்’. அதாவது ‘முழுத்தெய்வம்’ வகைப்பட்ட ஒருவர். அதாவது ‘வானம் வசப்படல் வேண்டுமிங்கு’ அல்லது ‘சொல் புதியன செய்தல் வேண்டும்’ என்பதெல்லாம் அவரது கருத்தாழத்தில் ஊறிக்கிடக்கும் விடயங்களாகின. தன்னை பதிப்பவர் எனவேதான் ‘பரம்பொருள்’ என்ற சொல் அழுத்தம் திருத்தமாக கார்க்கியால்; பாவிக்கப்படுகின்றது. ‘சுபத்திரையை நொடியில் களவாட துணியும் தந்திரங்களை’ நொடியில் படைக்கக்கூடிய வியூகங்களை அமைக்கக்கூடியவன்தான் கிருஷ்ணன். ஆனால் இத்தனை தெய்வங்களின் ஒட்டுமொத்த சாணக்கியங்களையும் குறிப்பாக விசமங்களையும், தந்திரங்களையும் உள்ளடக்கியவர் டால்ஸ்டாய் என்பது கார்க்கியின் கூற்று. இவை கைக்கு எளிதில் அகப்படாதது என்பது வேறு விடயம்-கிருஷ்ணனின் விசமங்கள் போல. ஆனால் இவை அனைத்தும் ஒரு பெரிய ஆளுமையின் ஒரு பக்கமே.
- டால்ஸ்டாய் -
கார்க்கியின், டால்ஸ்டாயும், செக்கோவும், Sullerரும் இணையற்ற நண்பர்களாக காட்சி தருகின்றனர். இலக்கியங்களை வாசிப்பதும், வெவ்வேறு தத்துவங்களை அலசுவதும், மாலைகளில் காலாற நடந்து திரிவதும், டால்ஸ்டாயின் டயரிகளை வாசித்து மகிழ்வதும் இவர்களின் நடப்பாக இருக்கின்றது. செக்கோவின் கூற்று: ‘அவனது அறையில் தங்குவதென்பது பொருந்தாதது. நான் அடியோடு விரும்பாத ஒன்று’. வாய்;விட்டு சிரித்தபின் செக்கோவ் கார்க்கியிடம் கூறுவார்: ‘இதுவா? பொறாமைத்தான்-கிழவருக்கு’. தன் மகனை விட மிக உயர்வாக செக்கோவை நேசிக்கும் டால்ஸ்டாய் இது. இக்கருத்து பல தளங்களில் வாசிக்கப்படலாம். ஆனால், இதன் உட்கிடை, கார்க்கி உணர்வது போல், டால்ஸ்டாயை எவ்விதத்திலும் சிறுமை கொள்ள செய்வதில்லை. இறைவனின் பிரம்மாண்டத்தை உள்ளடக்கிய மேதை அவர். லெனினின் கருத்து: ‘நீங்கள் அறிவீர்களா? முழு ஐரோப்பாவினையும் அலசி ஆராய்ந்தால், இவரை மிஞ்சக்கூடிய எந்தவொரு எழுத்தாளரும் உண்மையில் உள்ளனரா?’. கார்க்கி சிரித்துக்கொள்வார். பிறிதொரு சமயத்தில் லெனினை பற்றியும், அவரது மரணத்தின் பின், கார்க்கி எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்;;படுகின்றது. ஆனால், இங்கே தொட்டிருக்கப்பட்ட தளங்கள் அங்கே தொடப்படவில்லை என தோன்றுகின்றது. அதாவது, டால்ஸ்டாய் இயங்கிய தளமும், லெனின் இயங்கிய தளமும் சாராம்சத்தில் வேறுபட்டவை. ஒருவர், தனிமனித அடிப்படையில், மனு குலத்தையும் அதன் வரலாற்றையும் அணுகிய வேளை, லெனின், தத்துவங்களின் அடிப்படையிலும் பொருளியல் அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் அணுகியிருக்கலாம் என தோன்றுகின்றது. இதனாலோ என்னவோ ஒரு சிறிய இலங்கையில் சாதிக்கமுடியாத எண்ணங்கள் பலவற்றை, ரஷ்யா என்ற பிரம்மாண்டம் மனுகுல வரலாற்றில், உலகிலேயே முதன்முறையாக சாதித்து காட்டியது. அதிலும், அத்தனை முரண்களையும் யதார்த்தங்களையும், பின்னடைவுகளையும் முன்னிறுத்திய ஒரு நாடு!
இதன் காரணத்தாலோ என்னவோ பாரதியையும் லெனின் கவர்ந்திழுக்காமல் விட்டபாடில்லை. காளியை அழைத்து, லெனினின் கருமங்களை சித்தரித்து, அவனது சிந்தையை அகட்டி விரிக்கும் பண்பு அவனது அடிப்படை கூறுகளில் ஒன்றானது.
இங்கே, லெனினது மதம் பொறுத்த அல்லது கடவுள் பொறுத்த கண்ணோட்டம் குறிக்கத்தக்கதாகின்றது. மார்க்ஸ் வலியுறுத்திய அதே கண்ணோட்டத்தை போன்று அல்லது அதை விட தீவிரமான கடவுள் பொறுத்த கண்ணோட்டத்தை முன்வைக்கும் லெனின், நேரம் கிடைக்கும் போதெல்லாம், மிகுந்த பிரக்ஞையுடன், லண்டனில் மார்க்ஸின் கல்லறைக்கு செல்வது, அவரது புனித கடமைகளில் ஒன்றானது.
டால்ஸ்டாயின் கடவுளை இதனுடன் ஒப்பு நோக்கியிருக்க கூடியவர் கார்க்கி எனலாம். வேறுபாடுகள் நிறைந்த இவ்ஒப்பு நோக்கல் முக்கியமானது.
உதாரணமாக உடற்பயிற்சியை ஏளனமாக பார்க்கக்கூடிய ஓர் உழைப்பாளியின் ஒரு ஏளனம் கலந்த, இகழ்ச்சி பார்வை புரிந்துகொள்ளப்பட வேண்டியதே. அவனது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது அந்னியமாகப்பட்ட ஒரு விடயமாக இருக்கும். ஏனெனில், நொடிதோறும் அவனது வாழ்வு உடற்பயிற்சியோடு பயணிக்கின்றது. இச்சூழலில், தனித்து உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்குவது பார்க்கப்பட வேண்டிய ஒன்றே.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாழ்நிலை என்பது அவரவர் கருத்து நிலையை தீர்மானிக்கும் அடிப்படை கூறாகின்றது.
இதனுடன், கைலாசபதி அபிப்பிராயப்படுவதையும் ஒன்று சேர்ப்பது விரும்பத்தக்கது. கைலாசபதி அபிப்பிராயப்படுவது போல இவற்றின் எல்லைக்கோடுகள் இவ் இடைவெளிகளை, மனிதன் உளமாற நேசிப்பதன் மூலம் நொறுக்கி விடுகின்றன. மனித நேசிப்பை கோரக்கூடிய இவ் அணுகுமுறை ஒருவகையில் புதினமானது என கூறிக் கொள்ளலாம்.
இருந்தும், இப்புள்ளியின் அடிப்படையிலேயே டால்ஸ்டாய்-கார்க்கி இருவரின் கடவுளர்களின் உருவாக்கமும் கூட வேறுபடலாம்.
ஒருவரின் கடவுள் தனிமனித அணுகுமுறையிலும், மற்றவரின் கடவுள் மக்கள் திரளின் கவனம் ஈர்த்ததாகவும் இருக்கின்றது (இதனை லெனின் கடுமையாக விமர்சித்து நிராகரித்த போதிலும்).
பகுதி 2
- மாக்சிம் கார்க்கி -
Suller மீது, டால்ஸ்டாய் கொள்ளும் காதல் அளப்பறியது. சற்றே முட்டாள்தனமானது என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு வயதான மாது தன் செல்ல கிளியை தடவி கொடுப்பது போன்றது. ஆனால், இவ்வகை மனிதர்கள் மனித மனங்களை, அவனது ஆன்மாவை மாற்றக்கூடியவர்கள் என கார்க்கி அபிப்பிராயம் கொள்வார்.
இவர்களில் பலர், புறநகர்களில் குடியிருப்பதும் அவர்கள் அங்கிருக்கும் மனிதர்களை பாதிப்பதும், அம்மனிதர்கள் பதிலுக்கு இவரை காதலிப்பதும் எளிதாகின்றது.
Suller அப்படிப்பட்ட ஒரு ஜீவன். ஆனால், பெண்களோ இவனை ஏறெடுத்தும் பார்த்ததாயில்லை. உதாசீனப்படுத்துகின்றார்கள். இதனை பார்த்து கோபம் கொள்கிறார், கார்க்கி. இவ் உதாசீனத்தின் பின்னால், பெண்களின் ஓர் அந்தரங்க செயல்பாடும்;, ரகசிய கணிப்பும் உண்டென்றும், கவலையற்று திரியும் இச்சுதந்திர மனிதன் நாளை புரட்சி அலைகளின் முன்வரிசையில் உட்காருவாரா அல்லது யாது செய்யக் கூடும் என்ற சுவாரஸ்யமான கேள்வி அவ் அந்தரங்க கேள்வி திரைகளின் மறைவில் உண்டு என கார்க்கி கருதுவார்.
ஆனால், டால்ஸ்டாயின் விடயமோ வேறுபடுகின்றது:
“சுதந்திரம், சுதந்திரம், சுதந்திரம்: ஓ… போதும் நிறுத்திக் கொள் ‘லியோவ்ஷாகா…!’ ” டால்ஸ்டாய் ஒருமுறை அவரிடம் கோபமுற்று கூறுகின்றார்: “சுதந்திரம்… கிளிப்பிள்ளை போல் பேசுகிறாய் நீ. சரி. இறுதியில் உனக்கு இந்த சுதந்திரம்தான் கிடைத்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். பின்…? முடிவற்ற ஒரு வெறுமை… ஆம். இதைத்தான், நீ இறுதியில் தேடி முடித்திருப்பாய். ஆனால் அது உண்மையில் உன்னை ஒரு சோம்பேறியாக மாற்றியிருக்கும். நீ ஒரு குரூர மனிதனாய் மாறியிருப்பாய். அல்லது ஒரு பிச்சைக்காரனை போல் போக்கற்றவனாய் முடிவடைந்திருப்பாய்-இதுத்தான் வாழ்வு!” .
“வாழ்வில் எதுத்தான் உன்னை பிணிக்கக்கூடும்? பறவைகள் போன்று கட்டற்று… பறவைகள் கூட கூடுகட்ட வேண்டி இருக்கின்றதே… எனவே இந்த கதையை விடு”.
“புத்தர் சுதந்திர மனிதன்தான். கிருஷ்த்துவும் அதை போன்று…சுதந்திரம்தான். ஆனால், இங்கே பார். இருவருமே ஏனையோரின் பாவங்களை சுமக்க துணிந்தவர்கள்தாம். அதன் விளைவுகள் தனித்து வாதிக்கத்தக்கது. ஆனால் நீ என்ன? வாதிக்கின்றாய். வாதிக்கின்றாய். முடிவின்றி வாதிக்கின்றாய். சமயங்களில் என்னை ஏசவும் செய்கின்றாய். விட்டால் மூக்கையும் உடைப்பாய். நில். நிறுத்து இதை.”
மௌனிக்கும் கார்க்கி விசனத்துடன் இருவரையும் பார்ப்பார்.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.