மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் உழைக்கும் பெண்கள்! - முனைவா் த. அமுதா ,கௌவர விரிவுரையாளா், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி(த), வேலூா் -2 -
- எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி -
முன்னுரை
இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும். சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
பெண்ணியம்
17 ஆம் நூற்றாண்டில்தான் பெண்ணியம் என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது அது என்ன பொருளில் வழங்கியதோ அதனின்றும் இப்போது அது முற்றும் மாறுபட்டதாகவே அமைந்துள்ளதை பெண்ணியம் என்ற சொல் பெண் விடுதலை, பெண்ணடிமை, பெண் கல்வியின்மை, பெண்ணுரிமை முதலிய பல பொருள் தருவதாக இன்று பொருள் கொள்ளப்படுகிறது. பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அவா்களுக்குக் கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவ பெண்ணியமாகும்.