பெற்றோராக நாங்கள் ... - ஶ்ரீரஞ்சனி -
பிள்ளைவளர்ப்பு என்பது ஒரு கலை, அதில் யாருமே பாண்டித்தியம் பெற்றுவிடமுடியாது என்பதுதான் யதார்த்தம். ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கெட்டியவகையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பெற்றோரியத்தில் இதுதான் சரியான வழியென்று ஒன்றில்லை என்பதுடன், ஒரு பிள்ளைக்குச் சரிவரும் உத்திகள் இன்னொரு பிள்ளைக்குச் சரிவர மாட்டாது என்பதாலோ என்னவோ பெற்றோரியம் தொடர்பாகக் கற்பதிலோ, அது பற்றிய புத்தகங்களை வாசிப்பதிலோ அதிகமானோர் ஆர்வம் காட்டுவதில்லை.
முன்பொரு காலத்தில் பிள்ளைவளர்ப்பு என்பது பெற்றோரினதும், உறவினரினதும் வழிகாட்டலில் அமைந்திருந்தது. இந்தக் காலத்தில், கூட்டுக்குடும்பமாகவும் இல்லாமல், அயலில் வாழ்பவர்களையும் அறிந்திராமல், தனித்துவாழும் பெற்றோருக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி கொடுக்கும் சவால்களுக்கும் பிள்ளைவளர்ப்பில் முகம்கொடுக்க வேண்டிய பிரச்சினை இருக்கிறது.
எங்களில் பலர் தண்டனையால் வழிநடத்தப்பட்டோம். அப்படிப் பயத்துடன் வளர்ந்ததால்தான் நாங்கள் நன்றாக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையில், எங்களில் சிலர் இப்போதும் அதற்கே வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அது சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் குடும்பப் பிளவுகளுக்கும்கூட சிலவேளைகளில் காரணமாகிறது. அதேவேளையில், இப்போது பரவலாக வன்முறை ஏற்கத்தகாதது என்ற அறிவிருப்பதால், வேறு சிலர் பிள்ளைகளின் உடலும் மனமும் நோகாமல் அவர்களை வளர்க்கவேண்டுமெனப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகப் பிள்ளைகள் விரும்புவதையெல்லாம் எப்பாடுபட்டும் பூர்த்திசெய்ய வேண்டுமென்றும் நினைக்கிறார்கள்.