எமது ஈழ மற்றும் தமிழகச் சமூகத்தில் சிறை சென்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. அத்துடன் ‘சிறை மீண்ட செம்மல்’ எனப் பட்டமும் பெறுவார்கள். சிலர் பிற்காலத்தில் இதை ஒரு முதலீடாக்கி ஆட்சிபீடமேறினார்கள். நமக்குத் தெரியப் பலருக்குச் சிறையைப் பற்றிய அனுபவம் உள்ளது. சிறைக்குச் சென்ற காரணம் அரசியலாகட்டும் அல்லது சங்கிலித் திருட்டாகட்டும். அனுபவம் ஒன்றே. அப்படியிருக்கும் சமூக வெளியில், அவுஸ்திரேலியாவில் அதுவும் பேர்த்திலுள்ள சிறையைப் பற்றி நான் எழுத என்ன அவசியம் உள்ளது ?
00
ஃபிரிமான்டில் சிறை, கொலை செய்யப்பட்ட பெண், பேயாக அலையும் சிறை என்ற ஒரு விடயம் என்னைக் கவர்ந்தது. என்னளவில் அதுவே இந்த சிறையின் முக்கியத்துவம். வீடுகளில், சுடுகாடுகளில் ஏன் தெருவில் ஆவியாக அலைவது எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதிலும் ஆவிகளில் பெண்கள் அதிகமென்பர்கள். காலங்காலமாக அநியாயமாகக் கொலை செய்யப்படுபவர்கள் அவர்களே!
மனிதர்களைபோல் அல்லாது சுதந்திரமாக இருக்க வேண்டிய ஆவி ஏன் சிறையில் அலையவேண்டும் ?
இப்படியான விடயத்தைக் கேள்விப்பட்டது இதுவே முதல் தடவை . அதுவே என்னை அங்கே செல்ல வைத்தது.
அந்தச் சிறைக்குள்ளே சென்றதும் சிறையின் இரும்பு வாசற் கதவு ' "பூம்" என்ற பெரிய ஓசையுடன் மூடப்பட்டது. அந்த வகையான சப்தத்தை நான் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டுத் திருபம்பினேன். ஆசுவாசப்படுத்தி சுற்றிப் பார்த்தபோது, என்னுடன் முப்பது பேர் அந்த அறையுள் நின்றோம். நான் சிலரோடு அங்கிருந்த மரப் பலகை பெஞ்சில் அமர்ந்தேன்.
எங்கள் முன்பாக முப்பது வயதான தாடி வைத்த வாட்டசாட்டமான இளைஞன் “நல்வருகை” என்று சொல்லிவிட்டு “உங்களில் எத்தனை பேர் இதுவரையும் சிறைக்குச் சென்றிருக்கிறீர்கள்” என்று கேட்டான்.
அந்தக் கேள்வி என்னை மீண்டும் திடுக்கிடவைத்தது.
“யாராவது வெளிநாட்டுக்குப் போய் வந்தீர்களா அல்லது மெல்பேனில் இருந்து வந்தது யார்?” என்பதுபோல் அந்தக் கேள்வி இயல்பான தொனியில் இருந்தது.
யாராவது பதில் சொல்வார்களா ?
நாகரிகமற்ற கேள்வியானது என நினைத்தபோது, சட்டென்று மூன்று கைகள், பாடசாலை வகுப்பில் ஆசிரியருக்கு, உடன் தெரிந்த பதிலைச் சொல்லக் கை தூக்குவதுபோல் உயர்ந்தன.
எனக்கு மேலும் அந்தரமாகிவிட்டது. நான் அவர்கள் பக்கம் திரும்பவில்லை.
ஆனால், அந்த இளைஞன் சிரித்துவிட்டு மேலும் பேசினான் .
‘சில வருடங்களுக்கு முதல் நீங்கள் இருக்கும் பலகை பெஞ்சில் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றவாளியாக சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் எல்லோரும் குந்தியிருப்பார்கள். அப்படி இருப்பவர்களை எண்ணிவிட்டு, ஒவ்வொருவராக எழுந்து நிர்வாணமாக முன்பாக வரச் சொல்லுவார்கள். முன் நின்றவர்களிடம், கைகளையும் கால்களையும் நீட்டச் சொல்லி விரல், பாதங்களைப் பார்த்துவிட்டு ஏதாவது போதை வஸ்து உள்ளதா எனக் கேட்பார்கள். அதன்பின் அவர்களைப் பலமாக இருமும்படி சொல்வார்கள் – வாயிலோ அல்லது குதத்திற்குள்ளே ஏதாவது மறைத்திருந்தால் இருமும்போது அவை வெளியே வரும். அதன் பின்பே உங்களுக்கு சிறை உடை, நீர் குடிக்கும் பாத்திரம் மற்றும் மலம் சலம் கழிக்க ஒரு பெரிய பாத்திரம் தரப்பட்டு, அதன்பின் ஒரு பத்திரத்தில் கையொப்பம் பெறப்படும். அந்தப் பத்திரத்தில் சிறையின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடப்பீர்கள். அதாவது இதுவரையும் வெளியே உங்களுக்கு இருந்த சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கிறேன் என்பதாக எழுதியிருக்கும் ” என்றான்.
மேலும் ‘குற்றவாளிகள் தரவரிசையாகப் பிரிக்கப்படுவார்கள். முக்கியமானவர், கொலைகாரர் மற்றைய சிறு குற்றங்கள் செய்தவர்கள் எனப் பிரிப்பார்கள். அதில் மிகக் கடைசியில் சிறுவர்களை பாலியல் வன்முறை செய்தவர்கள் இருப்பார்கள்” என முடித்தான்.
அவுஸ்திரேலியா, ஆங்கிலேய அரசால் பிரித்தானியாவில் குற்றவாளிகளாக கருதப்பட்டவரகளை நாடு கடத்தும் இடமாக இருந்தது. மேலும் தற்பொழுது வசிக்கும் அவுஸ்திரேலியரில் 1% குற்றப்பரம்பரையிலிருந்து வந்தவர்கள் . அத்துடன் எல்லா மாநிலங்களிலும் குற்றவாளிகளுக்காக பாதுகாப்பான சிறைசாலைகள் அக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. காலனி காலத்தில் கட்டப்பட்ட பதினொரு சிறைச்சாலைகள் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது.
மற்றைய நாடுகளில் கோட்டைகள் போன்ற வரலாற்று சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அவுஸ்திரேலியாவில் சிறைச்சாலைகள்! அதுவும் பதினொன்று.
மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள ஃபிரிமான்டில் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையே அவுஸ்திரேலியாவில் பெரியது. 1849 இன் ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட குற்றவாளிகளால் இது கட்டப்பட்டது. அப்படிக் கட்டியவர்களின் தலைமுறையில் வந்தவவர்கள், தற்போதைய மேற்கு அவுஸ்திரேலியாவாசிகள். அவர்களே மண்ணின் மைந்தர்கள் என்பது அவர்களுக்குப் பெருமையான விடயம். பிற்காலத்தில் முக்கியமான குற்றவாளிகள் இங்கு சிறை வைக்கப்பட்டார்கள்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த் நகரத்தின் அருகே கடற்கரையோரத்தில் உள்ள ஃபிரிமான்டில் (Freemantle) சிறிய நகரத்தில் இந்தச் சிறைச்சாலை உள்ளது.பிரித்தானிய காலனி காலத்தில் ஆயிரம் பேரைச் சிறையிலடைக்க கட்டியபோதும், ஆயிரத்து எண்ணூறு கைதிகள் ஒரு காலத்திலிருந்தார்கள். தற்போது கைதிகள் எவருமில்லை. பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது.
வெளியே பார்க்கும்போது நான்கு தள வரிசைகள் கொண்ட பிரமாண்டமான உறுதியான கட்டிடம். இங்கே பல விதமான குற்றங்கள் செய்தவர்களையும் பிரித்து அடைப்பதற்கும், அதை விடப் பெண்கள் பிரிவு, தூக்குத் தண்டனை கொடுக்கும் இடம் போன்றனவும் இருந்தன. நாற்பது பேர்களின் உயிர்களைக் குடித்த கொலைக் களத்தையும் பார்த்தேன். அதில் தூக்கிலிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட ஒருவர் ( Martha Rendell) நாற்பத்தைந்து வயதான பெண் ஒருவராகும்.
அவரைப் பின்னால் பார்ப்போம்.
உள்ளே சென்றபோது நாய்க் கூடுகள் போல் சிறிய அறைகள் வரிசையாக அமைந்திருந்தன. அதைவிட ஆரம்பத்தில் குசினிப் பகுதி முக்கியமானது. அதைத் தொடர்ந்து கைதிகளது சிறிய அறைகள் இருந்தன. அவற்றுள் படுக்கையும் மல வாளியும் இருந்தது. ஒவ்வொருவரும் காலையில் வெறுமையாக்கியபின் மலவாளியை சுத்தப்படுத்துவதற்கு ஒருவரிடம் கொடுக்க வேண்டும். அக்காலத்தில் அவருக்கு வாரம் 10 டாலர்கள் வேதனம் கொடுக்கப்படும்.
குசினிப் பகுதியில் 23 கைதிகள் வேலை செய்வார்கள். அங்கு வேலை செய்யும் கைதிகள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்குச் சிறிய வேதனம் உண்டு. அங்கு குளியலறை உள்ளது. ஒவ்வொரு நாளும் குளிக்குமுடியும். தொலைகாட்சி செஸ்போட் எனப் பல வசதிகள் உள்ளது. ஆனால் மற்றவர்கள் கிழமையில் மூன்று நாட்கள் மட்டுமே குளிக்க முடியும். அதுவும. நான்கு நிமிடங்கள் மட்டுமே குளிக்கலாம். சிறைக்கைதிகள் பாதுகாக்கப்பட்ட வெளியில் பெரும்பாலான நேரத்தைக் கரைப்பார்கள். கோடையில் பேர்த் நகரத்தில் வெப்பம் 50 டிகிரி சென்ரி கிரேட்டை அடையும். எந்த மின்சார ஃபானோ ஏர்கண்டிசனோ சிறைச்சாலைக்குள் இல்லை .
அப்போது ஆயிரம் ஆண்களன் உடல் நாற்றம், மல, சல வாடை எனது மனத்தில் வந்தபோது வயிற்றுள் ஏதோ உயிர்க்குடலை கவ்விக்கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்விலிருந்து என்னை ஆசுவாசப்படுத்த நான் பார்த்த ஒரு கைதியின் அறையின் சுவரில் வரையப்பட்டிருந்த அழகான ஓவியம் உதவியது. அங்கு யாரோ ஒரு வின்சன்ட் வான்கோ இருந்திருக்க வேண்டும் என்ற வியப்பு ஏற்பட்டது.
நான்கு அடுக்குகள் கொண்ட மேல்மாடி கட்டிடத்தின் மேல் மூன்று அடுக்குகளிலுமிருந்து உள்பகுதியில் இரும்பு வலை போடப்பட்டிருந்தது. குற்றவாளி ஒருவர் மேலிருந்த குதித்து இறந்ததின் விளைவாக அந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல தடவை இந்தச் சிறையில் கைதிகளால் கிளர்ச்சிகள் நடந்தது. நடக்காமலிருந்தால்தான் ஆச்சரியம். நான் சில வருடங்களுக்கு முன் தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவை வைத்திருந்த ரொபின் ஐலன்ட் ஜெயிலைப் பார்த்தேன் அதை விட இது கொடுமையானது போன்ற தோற்றத்தைத் தந்தது. அது தோற்ற மயக்கமாகவும் இருக்கலாம்.
தற்காலத்தில் ஒரு கைதியை அவுஸ்திரேலியாவில் பராமரிக்க 405 அவுஸ்திரேலிய டாலர்களும், வருடத்திற்கு மொத்தமாக 6 பில்லியன் டாலர் பணமும் செலவாகிறது. மிகவும் செலவான விடயமாகத் தெரிகிறது. வைத்தியசாலையில் உள்ள நோயாளி விட இவர்களுக்கான செலவு அதிகமோ?
மொத்தச் சனத்தொகையில் 2.5%வீதமானவர்கள் எப்பொழுதும் அவுஸ்திரேலியாவில் ஜெயிலில் இருப்பார்கள். ஆனால் உலகத்தில் அமரிக்காவே இந்த விடயத்தாலும் நமக்கெல்லாம் முன்மாதிரியான நாடாகும்.
பிரித்தானியர்கள் எதைச் செய்தாலும் அதற்குச் சில முறைகளை வகுத்திருப்பார்கள். அதை அவுஸ்திரேலியர்களும் பிற்காலத்தில் சரியாகப் பின்பற்றினார்கள்.
இறுதியாக நாம் சென்ற இடம் கொலைக்களம். அங்கு இன்னமும் தூக்குக் கயிறு தொங்குகிறது. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு உணவுடன் பிரண்டி என்ற மது கொடுப்பார்கள். அதிகாலை 5 மணிக்கு தூக்கிலிடப்படுபவரைத் தவிர 12 மனிதர்கள் மட்டும் அந்த தூக்கும் அறையில் அனுமதிக்கப்படுவார்கள். ( 13 இலக்கம் இங்கு முக்கியம்). தூக்கில் தொங்கி கொலை செய்யப்படும் மனிதனின் காலடியின் கீழே 13 அடிகள் பள்ளமுள்ளது. இறந்தபின் அவனது உடல் கால் பகுதியாலே வெளியே கொண்டு வரப்பட்டு உறவினர்களுக்கு அளிக்கப்படும். அப்படி எவரும் இல்லாதபோது எந்த அடையாளமும் இல்லாத சவக்குழியில் புதைக்கப்படுவார்கள். இப்படியெல்லாம் சகல மரியாதைகள் பெற்ற கடைசி மனிதன், பல தொடர் கொலைகள் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த எரிக் குக் ( Eric Edgar Cooke) 1964ல் தூக்கிலிடப்பட்டான்.
அவுஸ்திரேலியாவில் எடுக்கப்படும் தங்கத்தை உருக்கும் இடம் பேர்த்தில் உள்ளது. அங்கிருந்து 1984 ம் வருடம் 63 கிலோ தங்கத்தை போலி காசோலையைக் கொடுத்து திருடிய (Mickelberg Brothers) மூன்று சகோதரர்கள் இங்கிருந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் பொலிசார் பொய்யாக இந்த வழக்கில் மாட்டியதாக கருதி நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டார்கள். அதேபோல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த காலத்தில் ஒரு பெரிய பணக்காரராகவும் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளருமான அலன் பொண்ட் (Alan Bond) பண மோசடிகளின் விளைவாக இந்தச் சிறையிலிருந்தார்.
இப்படியானவர்கள் வெவ்வேறு காலத்தில் இங்கு வாழ்ந்தாலும் மார்தா ரண்டல் (Matha Randall 1909) என்ற பெண்ணின் பெயரே முக்கியமாக பேசப்படுகிறது.
மார்தா தனது கணவருக்கு பிறந்த (Step children) மூன்று பிள்ளைகளைக் கொலை செய்தார் எனக் கைது செய்யப்பட்டு இருபது நாட்களில் தூக்கிலிட்டார்கள். தற்பொழுது அந்த மாதாவே இந்த ஃபிரிமான்டில் சிறையில் ஆவியாக உலாவுவதாக சொல்கிறார்கள் .
மார்தாமேல் வைக்கப்பட்ட குற்றம் அக்காலத்தில் மூன்று பிள்ளைகளுக்கு கைரோகுலோரைட் அசிட்டை (Hydrochloric acid) உணவில் கொடுத்து, அதில் ஏற்பட்ட தொண்மைப் புண்ணை டிப்தீரியா என்று வைத்தியர்களிடம் சொன்னதாக கூறப்பட்டது.
மார்தா நிரபராதி என அவரது கணவர் அதாவது அந்தப் பிள்ளைகளின் தந்தை நம்புகிறார். அவர்களது தேவாலய மதகுரு மார்தா அப்படி செய்மாட்டார் என நம்புகிறார். போஸ்மோட்டத்தில் கைரோகுரோரிக் (Hydrochloric acid) அசிட்டுக்கான எந்த அடையாளமும் இல்லை. தூக்கிலிடும்போது மார்தா சொன்ன இறுதி வார்த்தை ‘நான் நிராபராதி ‘ என்பதேயாகும்.
தனது இளைய மூன்று சகோதரங்கள் வரிசையாக இறந்தபோது போது 15 வயதான மூத்த மகன், சிறிய தாய் அவர்களைக் கொலை செய்ததாக பொலிசாருக்கு சொல்லியதாலும், மாதாவுக்கு எதிராக அயலவர்கள் மற்றும் பத்திரிகைகள் பிரசாரம் செய்ததாலும் மார்தாவுக்காக வாதாட எவரும் வரவில்லை. போலிசினதும் மற்றும் அயலவர்களினதும் சாட்சியத்தின்படி கைது செய்யப்பட்ட மார்தா 20 நாட்களில் தூக்கிலிப்பட்டார்.
மாதா இறந்தபின் அதே சவக்குழியில் சீரியல் கொலைக்காரரான எரிக் எட்கார் குக் புதைக்கப்பட்டுள்ளார்.
நிரபராதியாக இறந்த மார்தா, சீரியல் கொலைகாரான பிணத்தின் கீழ் இருக்கும் விருப்பமின்றி ஃபிரிமாண்டில் சிறையில் இன்னமும் ஆவியாக அலைவதாக கதை உள்ளது.
இப்படி புகழ்பெற்ற அந்த சிறை, 1991 உள்ளே கைதிகளின் போராட்டத்தால் எரிந்தது. அப்போது கைதிகள் எவரும் தப்ப முயலவில்லை. ஆனால் தீப்பற்றி எரிந்தபோது தொலைக்காட்சிகள் அந்தக் காட்சியை தொடர்ந்து ஒளி பரப்பின. சிறையை எரித்த கைதிகள் தங்களுக்கு சிக்கின் பேர்கரும் புகையிலையும் மட்டுமே கேட்டார்கள்.
இந்த தீயினால் சிறையின் பல குறைபாடுகள் வெளியே வந்ததால் சிறை மூடப்பட்டு தற்பொழுது ஒரு காட்சியகமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறையைப் பார்த்தபின் வெளியே வந்தபோது அவுஸ்திரேலியாவின் ஏதோ ஒரு முக்கிய காலத்தை நான் தரிசனம் கிடைத்த உணர்வு எனக்கு வந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.