தொன்மையான தமிழர் பண்பாடும் கிராமிய பேச்சுவழக்கும் எங்கட வாழ்வியல்ல வழக்கொழிந்து செல்கிற அல்லது திட்டமிட்டு அழிக்கப்படுகிற இந்தக் காலத்தில , அந்தக் காலத்து அருமை பெருமைகளை , சம்பிரதாயங்களை அதற்கான காரணங்களை எதிர்கால தலைமுறையினரும் அறிஞ்சு கொள்ளுற விதமாக 'சீத்துவக்கேடு துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை' என்று ஆவணமாக்கி , அப்புவின்ரை ஆச்சியின்ரை வாய்மொழியாக்கி , எங்களுக்கெல்லாம் வள்ளிசாகக் கதை சொல்ல வந்திருக்கிறார் ஒரு காரைநகர் இளந்தாரி.
இவர் கிராமத்துக் காட்சிகளை விவரிக்கிற அழகில அந்தக் கிராமமும் எளிமையான மனிசரும் , ஆடுமாடு நாய் பூனையளும் , அப்புவும் ஆச்சியும் , எழுதியவரும் அவர் வேலிப் பொட்டுக்கால சில்மிசம் பண்ணுற பக்கத்து வீட்டு பதின்மத்துக் காதலி மலரும் கண்ணுக்கு முன்னால கலைப்படம் மாதிரி வந்து வந்து போகினம். அப்பிடி ஒரு சரளமான இயல்பான எழுத்து. இந்த எழுத்தில மலர் மாதிரி கொஞ்சம் மயங்கிப் போகாத ஆக்கள் இருக்கேலாது.
வடக்கின்ரை பிரதேச வழக்கிலையே முழுப்புத்தகத்தையும் எழுதி, அந்த மொழிவழக்குக்கு ஆவணப் பெறுமதி சேர்த்த உவருக்கு , உண்ணாண நாங்கள் எல்லாரும் ஒருக்கா நன்றி சொல்லத்தான் வேணும்.
கனபேர் உவரின் முகமறிஞ்சது முகப் புத்தகத்திலதான். (Kandiah Pathmananthan ) எந்த நேரமும் பகிடி விடுகிற படங்காட்டுற இவர் ஆர் எண்டு தேடிப்பாத்தா, இவர் ஒண்டும் லேசுப்பட்ட ஆளில்லை. இவருக்குள்ள பல முகங்கள் விஸ்வரூபங்கள் வித்துவரூபங்கள் இருக்குதெண்டு விளங்கும்.
காலம பேஸ்புக்கை திறந்தால் இவர்ரை பூனைதான் முமுவியளமாக வந்து நிக்கும். இவருக்கு 3 மகள்மாரும் ஒரு மகனும் இருக்கினம். ஆனா ஊருக்கு தெரியாமல் இரண்டு பெடியும் ஒரு பெட்டையும் வைச்சிருக்கிறாராம். அவையும் வீட்டிலதான் இருக்கினமாம்.
வில்லங்கமா யோசிக்காதேங்கோ.
இரண்டு நாயும் ஒரு பூனையும். இதென்ன தேவையில்லாதது எல்லாம் இங்கை வந்து சொல்லுறதோ எண்டு நினைக்காதேங்கோ.
தேவை இருக்கு.
- நூலாசிரியர் காரைக்கவி. கந்தையா பத்மானந்தன் -
சீத்துவக் கேடு புத்தகத்தில எட்டு அத்தியாயங்கள்ல, மனிசருக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்து , நாலு அத்தியாயங்களை வீட்டு விலங்குகளுக்கெண்டு ஒதுக்கி இருக்கிறார். அந்தக்கால மனிசர் அதுகளோட உப்பிடித்தான் ஒண்டுமொண்டா சீவிச்சவை எண்டது உங்களுக்கும் தெரிஞ்ச விசயம் தானே.
மற்றது , இவர் முகப்புத்தகத்தில எழுதிற பதிவுகளைப் பாத்தா , கடவுளே வீடுகளில ஆம்பிளையளைக்கு இப்படியும் ஒரு கொடுமையோ என்ற இரத்தக் கண்ணீர் வரும். இவ்வளவு வீட்டு வேலை செய்து போட்டு இதெல்லாம் எழுத எங்கை இவருக்கு நேரம் இருக்கெண்டு யோசினை வரும்.
நீங்களும் வாசிச்சிருப்பீங்கள். இவர் விடியப்பறம் எழும்பி வீடுவாசல் கூட்டி தேங்காய் திருவி சமைச்சு , சட்டி பானை கழுவி, பேந்து பூனை நாயோடை செல்லம் கொஞ்சி அதுகளுக்குப் படிப்பிச்சு , பேஸ்புக்கில நாலஞ்சு படமும் பதிவு போட்டு அதோடை முடியுமோ எண்டால், இல்லையே.
வல்லபம் கெட்டதுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த இந்த வீட்டுக்கார அம்மாவுக்கு , தலைசீவி சீலை உடுக்க உதவி ஒத்தாசை செஞ்சு,
என்ரை கடவுளே, வாரிவளவுப் பிள்ளையாரே!
உப்பிடி எழுத்திப் போட்டினம் எண்டு ஐயாவும் வீட்டம்மாவும் குறை நினைக்கப்படாது. உங்கட பதிவுகளைப் பாத்து பாத்து இதெல்லாம் வாய்ப்பாடமா போயிட்டுது. அதால இப்ப எழுதிறதிலையும் உங்கட சொல்லுகள் வசனங்கள் எல்லாம் வந்து வந்து போகும். முகப்புத்தகத்தில ஆர்ரையும் பதிவை கொப்பி பண்ணி போடுற ஆக்கள் மாதிரி எண்டு வைச்சுக் கொள்ளுங்கோவன்.
காரைக்கவியாரின் ஒரு முகப்புத்தகப் பதிவு இப்பிடிச் சொல்லுது.
//சீத்துவக் கேடு புத்தகம் வெளியிடுறதைப் பத்தி நான் யோசிச்சு கொண்டு இருக்க , அங்கை வந்த வீட்டம்மா , எப்ப பாத்தாலும் யோசிச்சுக் கொண்டு இருந்தால் சரியே. அடுப்படியில எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கெண்டா. நான் ஒண்டும் இல்லையப்பா எல்லாரும் என்ரை புத்தகத்தை நல்லம் நல்லம் எண்டுகினம். அதுதான் ஒரு நூறு புத்தகம் அடிப்பமோ எண்டு பாக்கிறன் எண்டன்//
அதுக்கு வீட்டம்மா சொல்லுறா....
//அடியடா புறப்படலையிலை எண்டானாம். அடிச்சுக் கொண்ணந்து வைக்கிற புத்தகங்களுக்கு எலிக்கு கறையானுக்கு ஆராம் காவல் இருக்கிறது. புத்தகம் அடிக்கிறதா இருந்தால் கோத்தையைக் கூட்டியந்து காவல் வைக்க வேணும். அவ்வளவுதான் சொல்லிப்போட்டன் எண்டிறா//
பிறகு கோத்தை என்ன சொல்லுறா...
//செம்மறி உதை எழுதிற நேரம் எதையாவது படிச்சு பட்டம் வாங்கி இருக்கலாமே எண்டு.//
இதையெல்லாம் வாசிக்கிறவை திகைத்து மலாரடிச்சு போவினம்.
ஆனா இது உண்மையில்ல.
புத்தகத்தில என்னுரையை வாசிச்சால் தெரியும்.
இவர்ரை குடும்பம் அனுசரணையுடன் இருக்கிறதால தான் பத்தரால இவ்வளவு இலக்கியத்தில மினக்கட முடியுதெண்டு. முதல்ல எழுதினதெல்லாம் பகிடிக்குதான் பாருங்கோ.
உண்மையில, எங்கட ஊரில நாங்கள் முந்தி எப்பிடிச் சீத்துவமா சீவிச்சனாங்கள் எண்டு உருப்படியா ஏதாவது எழுதலாம்தானே எண்டு இந்த வீட்டம்மாதான் உசாரேத்தி விட்டவா. அவாதான் வலு அமத்தறையா இருந்து எழுதினதில திருத்த வேலையளும் செய்திருக்கிறா.
இவர்ரை அம்மா , 96 வயது சிமாட் லேடி அதை வலுவா ஆதரிச்சிருக்கிறா. பிள்ளைகள் உதவியிருக்கினம். முன்னுரை நயவுரை பின்னுரை தந்த ஆளுமைகள் பேராசிரியர்கள் மகேஸ்வரன் அவர்கள், சிவலிங்கராஜா அவர்கள் ,ஞானம் ஆசிரியர் வைத்தியர் ஞானசேகரன் அவர்கள் உற்சாகம் தந்திருக்கினம் .
எல்லாம் சேர்ந்து இவரை அமானிக் கள்ளுக் குடிச்ச மாதிரி போதேயேற்றிப் போட்டுது. எழுதித் தள்ளி விட்டார். இப்ப நாங்கள் கிடந்து கஷ்டப்படுறம்.
சரி இனி சீரியசான கதைக்கு வருவம்.
சீத்துவக் கேடு என்னும் இந்த நூலின் சமர்ப்பணமே வித்தியாசமானது. அன்பும் நன்றியும் நிறைஞ்சிருக்கு. ஆசிரியர் சொல்லுறார்,
//நாங்கள் நல்லா இருப்பம் எண்டு நம்பிச் செத்துத் துலைஞ்சு போன எங்கடையள் எல்லாத்துக்கும் //
சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் இது எண்டு.
'செத்துத் துலைஞ்சு போன' என்ற வார்த்தை எவ்வளவு ஆழமானது. வலி தருவது. தொலைஞ்சு போன முன்னோர்கள் மற்றும் அனைவரது தியாகங்களுக்கும் இதய அஞ்சலிகள்.
பழமையை நினைக்க வைக்கிற அட்டகாசமான அட்டைப்படம். எங்கட வரலாறு, வாழ்க்கை பற்றி நல்ல திறமான விசயங்களோட , பச்சை பச்சையாயும் சிலது இருக்கு. சில இடங்கள்ள கடுஞ் சிவப்பாயும் இருக்குது.
ஒரு திறமை வாய்ந்த கதாப்பிரசங்கி கதை சொல்லுற போது , சனம் ஆவெண்டு திறந்த வாய்மூடாம கேக்கிற மாதிரி பல விசயங்கள் இந்தப் புத்தகத்தில இருக்குது . காரைநகர் எண்டு இப்ப வழங்கப்படுற காரைதீவின்ரை வரலாறு சம்பிரதாயங்கள் பண்பாடு பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்த அறியாத பல சங்கதிகள் இருக்குது.
ஆனா பிறந்து வளந்த ஊரை மையப்படுத்தி எழுதினாலும், இது பொதுவான ஈழத்து தமிழ்க் கிராமங்கள் எல்லாத்துக்கும் பொருந்தும் . இதை வாசிக்கிற ஆருக்கும் சீத்துவக்கேடு என்கிற இந்தப் புத்தகம் , துலைஞ்சு போன எங்கட வடிவான வாழ்க்கை முறை எண்டது நினைவு வரும்.
//மெய்ஞ்ஞானம் தத்துவம் மருத்துவம் பொறியியல் வரலாறு உளவியல் அளவியல் மெய்யியல் பெண்ணுரிமை சிறுவர் உரிமை விலங்கு உரிமை//
எண்டு இண்டைக்கு சொல்லப்படுற வாழ்வியல் உரிமைகள் , மனித உரிமைக் கோட்பாடுகள் எல்லாத்துக்குமான விசயங்களை சங்ககால மற்றும் இடைக்கால இலக்கியங்கள் அண்டைக்கே எடுத்துக் கூறியிருக்கு எண்டதை, நூற்றுக்கணக்கான செய்யுள் ஆதாரங்களோட விளக்கி இருக்கிறார்.
அதை , இப்பத்தைய நேற்றைய வாழ்வோட ஒப்பிட்டுப் பாத்திருக்கிறார். உண்மையில சங்க காலத்தில ஆரம்பிச்சு விகாரமடைந்த தமிழர் வாழ்வுதான் இப்ப இருக்கிறதாம் .
இப்பிடியாக சங்ககாலத்தில் தொடங்கி , காரைக்கவியாரின் சின்னவயசு நினைவுகளோட இண்டைய காலத்தில முடியிற பலபல கதையள் இருக்கு.
படைப்பாளர் நல்ல தலைக்கனம் உடையவர் எண்டு முன்னமே உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும். புத்தகத்தை பாத்ததும் ஆதளிமாதளிப்பட்டுப் போவியள். புத்தகமும் அவ்வளவு கனதி. பக்கங்களால மட்டுமில்லாமல் நல்ல இலக்கியக் கனதியும் இருக்கிற நூல் இது.
இந்தப் புத்தகத்தில எட்டு அத்தியாயங்கள்.
எங்கட ஊரடி ,எங்கட தலைவாசலடி ,எங்கட அடுப்படி , எங்கட கிணத்தடி எங்கட மாட்டடி எங்கட ஆட்டடி எங்கட கோழிக் கூட்டடி எங்கட நாயடி என எட்டு இயல்கள். எங்கட நாயடியில் அழகான குடும்பப் படமும் இருக்குது. வரலாற்றில இவரோடை , இவரிண்ட இரண்டு நாயும் பூனையும் இடம்பெறப் போகுதுகள். அதிஸ்டம் பண்ணினதுகள்.
இண்டைக்கு காரைநகர் எண்டு சொல்லுற காரைதீவு ஊர் பற்றிய வரலாறும் அந்த ஊரின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட எல்லா பாரம்பரிய பழக்கவழக்கங்களும் விலாவாரியாக பிரதேச வழக்கில எழுதி இருக்கிறார் .
சுட்டுச் சொல்லுகளான உவன் உவள் உவை என்கிறதை, உவட்டை எண்டும் உவட்டையள் எண்டும் பாவிக்கிற வழக்கம் காரைநகரில இருக்குதாம். ஊரில நினைவு கூர வேண்டிய மூதாதையர் வாத்திமார் பெயரையும் புத்தகத்தில உவட்டையள் சொன்னது எண்டு சொல்லி, அவைக்கும் ஆவணப் பெறுமதியை கொடுத்திருக்கிறார்.
நன்றியுள்ள மனிசன்.
மொத்தத்தில சீத்துவக்கேடு வலு சீத்துவமாக இருக்கு.
இந்த எழுத்தில இருக்கிற அழகியல் ரசனை எப்பிடி இருக்கும் எண்டு அவரிண்டை வசனத்திலயே சொல்லுறன்.
குலுக்கி விட்டுட்டு மூடியைத் திறந்த சோடா போத்தல் மாதிரி பொங்கி பிரவாகிச்சு வந்து கொண்டே இருக்கும். அதுக்குள்ள மலரின்ரை நினைவுகளும் பழச் சோடா மாதிரி வந்து மணம் வீசும்.
காரைநகர் வாரிவளவுப் பிள்ளையார் கோவில் தேர்முட்டியடியில நிண்டு கதைபேசி சோமபானம் குடிச்ச மாதிரி ஒரு கிக் வரும்.
மற்றது...,
விசயங்கள் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது மாதிரி ஒண்டில தொடங்கி இன்னொண்டு அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். .
இதில மிக விசேசமா சொல்ல வேண்டியது என்னெண்டா , வலு சீரியசான விசயத்தையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்லுற இவர்ரை நகைச்சுவை உணர்வு பற்றி. சிரிப்பு மனிசரின் மனநிலைய மேம்படுத்துற ஒரு அருமருந்து எண்று எல்லாருக்கும் தெரியும்.
மற்றது ஒரு விசயத்தை இன்னொண்டோட சேர்க்கிறதுக்கு உத்தியாகப் இவர் பாவிக்கிற உவமை ஒப்பீடுகளின் அழகுகள் பற்றி. அவை சிரிக்கிறதோட சிந்திக்கவும் வைக்கிது.
முதல்ல , சிந்தனையை தூண்டுற ஒரு ஒப்பீடு.
காரைநகரில இருக்கிற போர்த்துகேயர் ஒல்லாந்தர் கால கோட்டை பற்றி சொல்லுற போது ,
சங்ககாலத்திலயே சேரசோழ பாண்டிய மன்னர்கள் பெரிய பெரிய கோட்டைகள் கட்டினவை . அங்கை பாதுகாப்பு பொறிமுறை, மற்ற ஆயுதங்கள், போர் முறைமைகள் எப்பிடி பலமானதா இருந்தது எண்டு அப்பு சொல்லுவார்.
ஆச்சி உதைக் கேட்டுப் போட்டு, 'கோதாரி விழுவார் உவங்கள் சேரசோழபாண்டியர் உவ்வளவு அள்ளுகொள்ளையா உந்த அம்புகளை வைச்சிருந்து ,
நான் பெரிசோ நீ பெரிசோ எண்டு தங்களுக்குத் தாங்களே அடிபட்டது தானே மிச்சம். பிரளுவார் சனத்தை அழிச்சதை விட வேறென்னத்தைக் கண்டவங்கள். உதைத்தானே பேந்து எங்கட இயக்கங்களில இருந்த விறுமதடியன்களும் செய்தவங்கள்' எண்டு சொல்லுவா.
பாருங்கோ இந்த வசனத்தில இருக்கிற வரலாற்றுத் தகவல்கள். ஒப்பீடுகள். கிண்டல் மிகுந்த யதார்த்தம். அருமையான வாழ்த்துரைகள்.
நீங்கள் நினைப்பீங்கள், இப்ப மட்டும் எங்கட அரசியல்வாதிகள் என்ன குறைவோ எண்டு. உண்மைதான் .
அடுத்ததா, நகைச்சுவையான ஒப்பீட்டுக்கு ஒரு உதாரணம் சொன்னால்.....
காரைநகரில டபுள் டெக்கர் ஓடின கதையை சொல்லுவார். அதோடே ஒப்பு நோக்கி இரண்டு பெண்டாட்டிக் காரரின்ரை கதை இவருக்கு ஞாபகம் வரும். பிறகு அந்தக் காலத்தில பேமஸ் ஆக இருந்த சின்னமேளம் பற்றின கதை வரும். அவையில சிலபேர் சக்களத்தியா வந்து குடும்பத்தில பிரச்சனையளும் இருந்ததாம்.
அதோடை பாரம்பரிய பழக்கவழக்கங்களில இருக்கிற அறிவியல் காரணங்களையும் இதே மாதிரி முஸ்பாத்தியா சொல்லுவார்.அதில ஒண்டு இது.
போனகிழமை ஊரில சிடிபி பஸ்ஸில தனிய இருந்து ஒரு படம் போட்டிருந்தார். அங்கை தனிய பஸ் பிடிச்சு போறது ஆட்டோவை விட மலிவாம் எண்டு. காரைநகரில அப்ப போக்குவரத்து பிரச்சனை ஒண்டும் இல்லை போல எண்டுதான் ஆரும் நினைப்பினம்.
ஆனா, சீத்துவக் கேடு புத்தகத்தில தாம்பத்தியத்தில ஒரு முக்கியமான போக்குவரத்து பிரச்சனையைப் பற்றி விலாவாரியாக அலசியிருக்கிறார்.
அட்டணக்கால் போடுற பொம்பிளையள் எப்ப போடக்கூடாது, எப்ப போடோணும் எண்டு. போடக் கூடாத நேரத்தில போட்டா போக்குவரத்து பிரச்சனைகள் வருமாம். அதுமாதிரி, போட வேண்டிய நேரத்தில போடாட்டியும் வருமாம்.
ஐயா சொன்னால் சரியாத்தான் இருக்கும் . குறிப்பா பெண்புரசுகள் அதை வாசிச்சு குடும்ப வாழ்க்கையில பயனடையுங்கோ . ஆம்பிளையள் வேலி தாண்டாம பாத்துக் கொள்ளுங்கோ .
தன்னுடைய ஊரான காரைதீவு பற்றி சரியான பெருமிதம் கொண்ட ஊர்வாசி இவர்.
ஆதிச்ச நல்லூரில கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியை ஒத்தவை இங்கையும் கண்டுபிடிக்கப்பட்டதால , பெருங்கற்காலத்தில இருந்து (கி.மு 10 - கி.மு 1 வரை) தமிழ்பேசும் சமூகமாகிய நாகர் குடியிருப்புகள் இங்கை இருந்திருக்க வாய்ப்புண்டு எண்டு சொல்லுறார்.
மற்றது பண்டைய துறைமுகம், அயல் நாட்டு வியாபாரங்கள், போர்த்துகேயர் கோட்டை பற்றிய விரிவான தகவல்கள் தந்திருக்கிறார் .
ஈழத்து சிதம்பரம் எண்டு அழைக்கப்படுற காரைதீவு சிவன் கோயில் இங்கை இருக்கு. இங்கை உள்ள சைவமகாசபையில மகாத்மாகாந்தி இந்திராகாந்தி சுவாமி விபுலானந்தர் இப்படியான பல பெரும் தலைவர்கள் உரையாற்றிய வரலாறும் கொண்டதாம்.
சப்த தீவுகளில ஒன்றான காரைதீவு இயற்கை வளங்கள் நிறைஞ்சது. பழமையான நூலகம் இருக்கு . இது யாழ் நூலகத்திற்கும் முன்னோடியாக அமைந்ததாம்.
கல்விமான்களால் நிறைந்தது; ஒற்றுமை கடும் உழைப்பு விருந்தோம்பலுக்குப் பெயர் போனது என்ற தகவல்களும் இருக்கு .
இதெல்லாம் சொன்னவர் என அப்புவின்ரை தலையில பழியை போட்டுட்டார். மறுத்தான் விடுறவை அப்புவிட்டை தான் போகோணும்.
சுருட்டு சுத்துற தொழில் அங்கை முக்கியமாக இருந்ததையும், உலக விசயங்கள் பரிமாறப்படுற இடமாக சுருட்டுக் கொட்டில்கள் இருந்ததையும், இங்கத்தைய சுருட்டு இலங்கை முழுக்க விற்பனை செய்யப்பட்ட தகவல்களையும் எழுதி இருக்கிறார்.
'தீவார் திடுக்கிடுவார் திண்ணைக்கு மண்ணெடுப்பார்' ...
மற்றும் ....
'காக்கா பறக்காத இடமில்லை காரைதீவான் போகாத இடமுமில்லை' எண்டு சொல்லுறதுக்கும் , ஏற்றுக் கொள்ளுற மாதிரி நல்ல காரணங்கள் சொல்லி இருக்கிறார். அதாவது உலகத்தில எங்கை இருந்தாலும், காகம் மாதிரி குணம் நிறம் மாறாத தன்மை, விடிய வெள்ளன எழும்பிற சுறுசுறுப்பு , ஒற்றுமை எல்லா இடமும் பரந்திருக்கிற தன்மை , செய்யிற வேலையில கவனம் , சேர்ந்து 'கரையிற' பண்பு இப்பிடி பல.
அவட்டையள் சொல்லுறதை நம்பத்தானே வேணும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே .
குஞ்சு எண்டதும் , காரைக்கவியார் மாதிரி இன்னொரு ஞாபகம் குறுக்கால வரும். முட்டைக் கோப்பியும் ஆட்டிறச்சியும் நெஞ்சுக்கு மட்டுமில்ல வேற சிலதுக்கும் நல்லதாம் எண்டு சொல்லுறார். அதோட முருக்கங்காயும் நல்லதாம் எண்டு செய்யுள் ஆதாரமும் தந்திருக்கிறார். தேவைப்பட்டவை கவனத்தில் கொள்ளுங்கோ.
இண்டைக்கு தூசணம் மாதிரி நாங்கள் சொல்ல தயங்கிற 'புக்கை' எண்ட சொல்லு , பழந்தமிழ் இலக்கியங்களில சொல்லப்படுற 'புட்கை' என்கிற சொல்லுத்தான் என்கிற பிரயோசனமான தகவலும் இருக்கிறது . கைலாகு கொடுத்து வரவேற்கிறது இங்கிலீசு காரரிட்டை இருந்து நாங்க பழகேல்லை. அந்தக்கால அரசர்களும் கைகொடுத்து வரவேற்கிறவையாம் எண்டும் சொல்லுறார்.
எங்கட தலைவாசலடி என்ற இயலில் , அந்தத் தலைவாசல்களும் திண்ணைகளும் வட்டமாகப் பெண்கள் கூடியிருந்து கதைக்கும் பள்ளையடிகளும் வாரிவளவு தேர்முட்டியடிகளும் மதில்களும் குந்துகளும் , அன்றைய வாழ்க்கையில உறவுகள் வளர்க்கும் இடமாகவும் ஊர்புதினம் துளாவும் இடமாகவும் இருந்ததாம். சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் கூட , மன ஆற்றுகை தருகிற இன்றைய கவுன்சிலிங் சென்டர்களை ஒத்ததாகவும் இருந்த கதை கூறி ஏங்க வைக்கிறார்.
இதை வாசிக்கேக்கை சத்தியஜித் ரே மிருணாள்சென் , எங்கட பாலு மகேந்திரா லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் படங்கள் பாத்த மாதிரி அப்பிடி ஒரு அழகியலோடை இருக்குது.
சங்கடப் படலை என்கிற அமைப்பு வீட்டுக்கு பாதுகாப்போடை அந்தக்கால சாதிப் பாகுபாட்டை பாதுகாக்கிற இடமாகவும் விளங்கினதாம்.
எங்கட அடுப்படிளும் கிணத்தடியளும் ஒரு அற்புதமான உடற்பயிற்சி நிலையமாக இருந்ததாம். குந்தி மூட்டும் அடுப்பு, ஆட்டுக்கல் , திரிகை, மத்து, உரல், அள்ளும் கிணறு என வீட்டுக்குள்ள ஒரு ஜிம் இருந்ததாம்.
அதால சீவிய காலத்துக்கும் ஆச்சி உட்சட்டை போடாமல் கட்டுக் கோப்பா உடம்பை மெயின்டெயின் பண்ணினவாம். அப்புவும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி வேலி தாண்டாமல் இருந்தவராம்.
அந்தக் காலத்திலே வீடு ஒரு ஜிம் மாதிரி. இப்ப வீட்டுக்கு வீடு ஜிம் போகினம் எண்டு இந்தக்கால பெண்டுகளைப் போட்டுத் தாக்கிறார்.
இந்த சைனாக்காறர் ஊரில் கண்டது நிண்டது எல்லாம் தின்னுறாங்கள் எண்டு நாங்கள் பகிடியா கதைக்கிறம்.
ஆனா சங்ககாலத்தில் எங்கட ஆக்களும் பூச்சி தவளை உடும்பு ஈசல் எலி ஆமைமுட்டை எல்லாத்தையும் ஒரு கை பாத்திருக்கினம்.
'கோதாரி விழுவார் யானையைக் கூட விடேல்லாயாம்' எண்டு ஆச்சி சொல்லுறா. அதோடை இந்தக்காலத்தில இங்கிலிசுப் பேரில் உலாவிற ஸ் ரீக், பாபிகியூ, கேபாப், பிரியாணி இதெல்லாமே அப்பவும் வேற பேரோட இருந்திருக்கு என்று சங்ககாலப் பாடல்களை ஆதாரம் வைச்சு விளக்கி இருக்கிறார்.
எங்கட மாட்டடி தான் எல்லாரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். இந்த இயல் முழுக்க நகைச்சுவைக்கு ஈடாக ஓடிக் கொண்டிருக்கிற இன்னொரு விசயம் விலங்குகளில இருக்கிற ஜீவகாருண்யம். விலங்குகள் மனிதர்களுடனே ஒண்டுமொண்டாக தமது வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட அற்புதமான காலகட்டம் அது.
மற்றது உவமையாக இவர் சொல்லுற விடயங்கள் .
பால் குடிச்சு வாய்விளிம்பில் நுரையோடு நிற்கும் கண்டுக்குட்டிக்கு , குழந்தைப் பிள்ளயளுக்கு சொந்தமான அத்தனை அழகும் இருக்கெண்ணுறார். புதிசா லாடன் அடிச்ச மாடுகளின்ரை நடையை புதிசா குதி உயர்ந்த செருப்பு போட்ட பொம்பிளையள் மாதிரியாம். அமரிலை நிக்கிற லட்சுமிக்கு கண்ணில ஜுவாலை எரியுமாம் . மாட்டுக்கு மாடு விடக் கூட்டிக் கொண்டு போனா , இந்த நாம்பன் வந்து பஸ்ஸில பாய்ஞ்சு ஏறுகிற இளந்தாரிப் பெடியள் மாதிரி ஏறும் என்கிறார்.
லட்சுமியின் இளங்கன்று வெள்ளையன், கொஞ்சம் வளர்ந்த பிறகு 'எலெக்ஷன் ரிசல்ட் பாத்துக் கொண்டு ஓடித்திரியிற வேட்பாளர்' மாதிரி ஓடித்திரிவானாம். பாத்துக் கொண்டிருக்கிற தாய்க்காரி லட்சுமி என்ன செய்வாள் ? 'கட்டுக்காசு இழந்த வேட்பாளர்' மாதிரி அசை போட்டுக் கொண்டு படுத்திருப்பாளாம்.
அடுத்த எலக்சனிலை எங்கடயள் எத்தினைபேர் உப்பிடி அசைபோடப் போகினமோ தெரியேல்லை.
அதோட ...
கன்று வளரும் போது நாணயம் குற்றல் , வண்டில் நடை பழக்கல், நுகத்தில கட்டல் மற்றும் மாட்டு வண்டில் சவாரி எண்டு பலதரப்பட்ட விசயம் சொல்லுறார்.
வண்டிலை கட்டுற நாம்பனுகளுக்கு நலமடிக்கிறதை வலு ஆதங்கத்தோட இவர் சொல்ல , ஆச்சி காத்திரமான கருத்தொண்டு சொல்லுறா.
'பெட்டையளோடை சேட்டை விடுற காவாலியளுக்கும் உப்பிடித்தான் நலமடிக்க வேணும்' எண்டு.
ஏறுதழுவல் திருமணத்திற்கான வீரவிளையாட்டாக இருந்ததையும் , ஆநிரை அந்தக் கால மன்னர்களின் செல்வங்களுள் ஒன்றாக இருந்ததாலை , ஆநிரை கவர்தல் யுத்த முறைகளில ஒன்றாக இருந்ததாம் எண்டு சொல்லுறார்.
மனிசரைப் போல மாட்டுக்கும் சாமுத்திரிகா இலட்சணங்கள் உண்டாம். சைவசமயத்தில தெய்வங்களுக்கு , மிருகங்களை வாகனம் ஆக்கினதுக்கும், அதுகளில அன்பு செலுத்தி அரவணைக்க வேணும் என்கிற காருண்யமே காரணமாம்.
இப்படியாக காரைநகர் பற்றிய பெறுமதியான வரலாற்றினை எழுதி , தான் பிறந்து வளர்ந்த தாய்நிலத்துக்கான நன்றிக்கடனை நிறைவேற்றிய காரைக்கவியார் , இண்டைக்கும் அடிக்கடி ஊர்மண்ணை மிதிச்சு, அந்த மண்ணின் வாசனையை கவிதை போல மனசில சுமந்து கொண்டு வாறவர் எண்டதை உண்ணாண நாங்கள் மனசார பாராட்ட வேணும்.
அவர் எப்பவும் இதே சிரிப்போட , இதே வீட்டம்மாவோட சந்தோசமா சுகமா வாழவும் , சுந்தரத் தமிழில நல்இலக்கியங்கள் படைக்கவும் வாரிவளவு பிள்ளையார் எப்பவும் அருள் புரிய வேணும். நலம் சூழ்க!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.