எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி அவர்கள், தாயகத்தில் இருந்து மேற்குலகின் பல பாகங்களுக்கும் புலம்பெயர்ந்த பலரது வாழ்வியல் மற்றும் மனப்போராட்டங்கள் பற்றி பல வித்தியாசமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். அக உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தும் கதைசொல்லலில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் இவர். அத்துடன் கருவுக்கும் களத்திற்கும் பொருத்தமான அழகியல் உணர்வுடன் கூடிய வித்தியாசமான தலைப்புகளைத் தெரிவு செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார். வாசகரைக் கதைக்குள் கவரும் முதல் ஈர்ப்பாக அதன் தலைப்பே அமைவதால் ஒரு சிறந்த உத்தியாகவும் இதைப் படைப்பாளர் கையாள்கிறார் .
இவரது 'ஒன்றே வேறே' என்னும் சிறுகதைத் தொகுப்பு கடந்த ஆண்டு இலங்கை அரசின் சாகித்ய விருதினையும் பெற்றுக் கொண்டது. அந்தத் தலைப்பும் பல ஊகங்களைத் தரக் கூடிய தலைப்பு ஆகும். இங்கும் இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலைக்கு பொருத்தமான தலைப்பினை எடுத்திருக்கிறார். அதே சமயம் 'அடர் இருள் என் செயும்' ? இதுவும் கடந்து போகும் என கதையின் ஆரம்பத்திலேயே மனோதிடம் கொண்ட ஒரு நேரம்ச சிந்தனைக்குள் வாசகரை இழுத்துக் கொள்கிறார்.
இவர் எடுத்துக் கொண்ட மூலக்கரு மிகவும் புதியதல்ல.ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர். எனினும் எழுதப்படும் முறையாலும் வெளிக்காட்டப்படும் உணர்வுகளாலும் கதையின் கரு புதிய பரிமாணங்களை எடுக்கிறது. அந்த விதத்தில் ஸ்ரீரஞ்சனியின் கதைகள் வித்தியாசமானவை. புலம் பெயரும் பெற்றோருக்கு விழிப்புணர்வு தரும் கதையாகவும் அமைகிறது.
'அடர் இருள் என் செயும்' என்னும் இந்தக் கதை புலம் பெயர்ந்த தேசமொன்றில் , குடும்பத் தலைவரை இழந்து தனித்து வாழும் ஒரு தாய்க்கும், அவரது பதின்மவயது மகளுக்குமான மனப் போராட்டத்தினையும் வாழ்வியல் போராட்டங்களையும் கூறுகிறது.
யுத்தநிலைமைகள் காரணமாக அல்லது தொழில் திறமை அடிப்படையில், தாயகத்தில் இருந்து மேற்குலக நாடொன்றுக்கு புலம்பெயர்ந்த பெற்றோருக்கும், அங்கு பிறந்த அல்லது சிறுவயதில் இருந்து வளர்ந்த பதின்ம வயதினருக்கும் இடையிலான புரிந்துணர்வு சில வேளைகளில் மிகவும் சிக்கலானது .
பதின்மம் என்பது உணர்வுகள் உச்சம் பெற்றிருக்கும் சிக்கலான பருவம் என்பது இப்போராட்ங்களுக்கு ஒரு முக்கிய காரணம். எனினும் இக்கதையில் மிக முதன்மைக் காரணம் ஒன்றுண்டு. தாயகத்துக்கும் மேற்குலகிற்குமான கலாசார பண்பாட்டு இடைவெளி. மற்றது பொதுவாக எங்கும் காணப்படும் தலைமுறை இடைவெளி.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர், புலம் பெயருதலுக்கான காரணம் எதுவாக இருந்தாலும் அவர்களது மனவேர்கள் இன்னும் தாயகத்தில் தான் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. தமது பண்பாடு கலாசாரத்திலிருந்து பிறழ்வதற்கு மனம் ஒப்புவதில்லை.
தமது குழந்தைகள் வளர்ந்த பின்னும் பெற்றோர் அதே தாயக மனநிலையில் வாழ்வதால் பிரச்சனைகள் உருவாகின்றன.
அதே சமயம் மேற்குலகில் வளர்ந்த பிள்ளைகள் முற்றுமுழுதாக அங்குள்ள கலாசாரத்திற்குப் பழக்கப்பட்டவர்கள். தமக்கான சுதந்திரம் எல்லைகள் பற்றி அதிக விரிவான சிந்தனைகளைக் கொண்டவர்கள். தாயகத்தில் தமது பெற்றோர் பட்ட கஷ்டங்களை சிலர் உணர்வதில்லை. புதிய தாயகத்தில் தம்மை வளர்ப்பதற்காக பெற்றோர் படும் சிரமங்களையும் சிலர் உணர்வதில்லை. இந்தச் சிறுமி அவ்வாறானவள்.
- எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி -
சிறுகதையின் சாராம்சம் சுருக்கமாக...
யுத்த காலத்தில் குடும்பத்துக்கு ஒருவர் கட்டாயம் இயக்கத்தில் இணைய வேண்டும் என்ற அடிப்படையில் கணவனைப் போரில் பலி கொடுத்த இளம்பெண் வினோ , தனது சிறு பெண் குழந்தையான சர்மியுடன் மேற்குலகிற்குப் புலம்பெயர்கிறாள். பாக்டரியில் ஓய்வில்லாது சிறு வேலை செய்து , மிகுந்த சிரமத்துடன் மகளை வளர்க்கிறாள். யுத்த சூழ்நிலை காரணமாக தன்னால் தொடர முடியாது போன கல்வியில் மக்களாவது மேனிலை அடைய வேண்டும் என்பது ஒன்றே அவளது பெருவிருப்பு.
பதின்ம வயதடைந்த மகள் படிப்பில் கவனமில்லை. பொறுப்புடன் இல்லை. தனது அழகினை மேம்படுத்தும் மேக்கப்பிலும், அதிக கைபேசி பாவனை மற்றும் ஆண் நண்பரின் சகவாசமென வீண்பொழுது போக்குகிறாள். பாடசாலையில் அனைத்து ஆசிரியர்களும் அவள் எல்லோருக்கும் இனியவள்தான் என்றாலும் படிப்பில் சிரத்தை இல்லை எனக் குறை கூறுகிறார்கள்.
ஒழுங்காய் படிச்சால் தானே யுனிவசிட்டிக்கு போகலாம். படிக்காட்டி என்னை மாதிரி பக்டறி வேலையில மாய வேண்டியதுதான் என அக்கறையுடன் சொல்லும் தாய்க்கு, மகள் முகத்தில் அறைந்தால் போல ஒரு பதில் கூறுகிறாள் .
'அம்மா உங்களுக்கு புத்திக் கூர்மை இருந்தால் தானே என்னிடம் எதிர்பார்க்கலாம்' என.
இந்த வசனங்களே பொறுப்பற்ற அந்த மகளின் மனநிலையை விளக்க போதுமானவை. ஒரு தாயின் நிலையில் இருந்து இதனை மனதில் உள்வாங்கிப் பார்த்தல் மிகவும் வலி தருவது.
வினோ கோபத்திலும் ஆற்றாமையாலும் தான் மகளைக் கடுமையாகப் பேசுகிறாள். அடிப்பதற்கு கை ஓங்குகிறாள். தனது சொல் கேட்டு ஒழுங்காகப் இருக்காவிட்டால், படிக்காவிட்டால் இந்த வீட்டில் இருக்க முடியாது எனக் கூறுகிறாள்.
ஓங்கிய கைகளை நிறுத்தி எங்கை அடியுங்கோ பாப்பம் என மகள் சவால் விடுகிறாள்.
இதற்கிடையில் மன அமைதி இன்மையால் ஒரு விபத்தில் சிக்கி தாயாகிய வினோ கைவிரல்கள் இரண்டினை இழக்கிறாள்.
ஆனால் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாத மகள் தாய் தன்னை மிரட்டுவதாக கருதுகிறாள். சிறுவர் உதவிச் சபையில் முறைப்பாடு செய்து வீட்டில் இருந்து வெளியேறுகிறாள். தாய் காயம் பட்டிருப்பது பற்றி மனவேதனை அவளுக்கு இருக்கிறது. எனினும் அதையும் பொருட்படுத்தாது வெளியேறுகிறாள்.
உண்மையில் மகள் திருந்துவாள் என்னும் நோக்கத்தில் தான் தாய் மகளிடம் அப்படிக் கூறுகிறாள் . ஆற்றாமை மிகுந்த மனது . மகள் வழிதவறி விடுவாளோ என்ற பயம். பதின்ம வயதில் அதுவும் பெண்குழந்தைகள் தாய்தந்தையரைப் பிரிந்து தனியாகச் செல்ல மாட்டார்கள் என்னும் தாயக மனநிலையும் இதற்குக் காரணம். வினோவின் நிலை பரிதாபமானது.
ஆனால் மகளது பக்கமிருந்து நிலைமைகள் தாயால் உணரப்படவில்லை என்றோர் குறைகூற இடமிருப்பினும், அது எழுத்தாளரின் சுதந்திரம் என்ற ரீதியில் நியாயப்படுத்தப் படலாம். மகள் சென்றதும் வினோவின் மனநிலை அடர் இருள் சூழ்ந்ததாகிறது. எனினும் இத்தனையும் மேவி வாழ்ந்தேன். இனி என்ன என திடம்கொண்டு இயலாத விரல்களுடன் நேநீர் தயாரிக்கிறாள்.
'கண்ணீர் அவளின் கன்னங்களை நனைத்து ஓட ,அவளுக்கு விக்கல் எடுத்தது' என்ற வசனத்துடன் கதை முடிவுறுகிறது.
கண்ணீரோடு நின்றிருக்கலாம். விக்கல் ஏன் வந்தது?
தலைப்பினால் மட்டுமன்றி சிறுகதையொன்று அதன் இறுதி வசனத்தினால் மீள்உயிர்ப்பு பெறும் மாயத்தினையும் இவ்விடத்தில் நான் உணர்ந்தேன்.
விக்கல் எடுத்தது என்ற சொல் இங்கு மிக முக்கியமானது. எமது கிராமிய நம்பிக்கைகளின் படி விக்கல் வந்தால் நமக்கு அன்பானவர்கள் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்று கூறுவதுண்டு. அது உண்மையாக இருக்க வேண்டும் என இந்தச் சந்தர்ப்பத்தில் நினைக்கத் தோன்றுகிறது.
நினைப்பது வினோவின் மகளாக இருக்க வேண்டும். மீண்டும் தாயும் மகளும் புரிந்துணர்வுடன் ஒன்றாக வேண்டும் என்ற உணர்வு வாசகருக்கு நிச்சயம் வரும்.
அதை ஆசிரியரும் அவ்வாறே நினைத்து எழுதினாரா என்பது தெரியவில்லை. படைத்தவரின் பணி அத்துடன் முடிவடைகிறது. மிகுதி அனைத்தும் வாசகருக்கு அக்கதை ஏற்படுத்தும் உணர்வுப்புலம் சார்ந்தது.
இந்தக் கதையில் ஆசிரியர் சில வாழ்வியல் கோலங்களை விரித்துக் காட்டி இருக்கிறார்.
தசாப்த காலங்களாக தொடர்ந்த இனப்பிரச்சனையும் இறுதி யுத்தமும் தமிழர்களது வாழ்வின் பல எல்லைகளையும் கோலங்களையும் இனப்பரம்பலையும் மாற்றி உள்ளது. கலாசார ரீதியாக அது பல நன்மைகளையும் பல தீமைகளையும் சேர்த்தே தந்துள்ளது. அதில் ஒன்று புலம்பெயர்வினால் உருவாகும் கலாசார பிறழ்வுகளும் இந்தக் கதை கூறும் மனமுரண்பாடுகளும்.
யுத்தம் ஒரு தலைமுறையினரின் கல்விநிலையை சூறையாடியதைக் காட்டுகிறார். கல்வி கற்கும் ஆசை இருந்தும் யுத்தம் இடம்பெயர்வு புலம்பெயர்வு போன்ற காரணங்களினால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்கள் அனேகம்.
யுத்தநிலைமைகளினால் கட்டாயத்துக்கு உள்ளாகி புலம்பெயர்ந்தோர் வருமானத்திற்காக ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து தம் இளமையை நிம்மதியை அழகைத் தொலைத்த கதையைக் கூறுகிறது. வினோவால் புதிய தேசத்திலும் தனது கல்வியைத் தொடரக் கூடிய வாய்ப்பு அமையவில்லை. எல்லாப் பொறுப்புகளும் முடிந்து நிமிரும் போது வாழ்வில் அனுபவிக்க வேண்டிய பலதையும் அவர்கள் இழந்திருப்பார்கள்.
இந்தத் துன்பங்களை அறிந்திராத சில இளம் தலைமுறையினரின் எடுத்தெறிந்த பேச்சுக்கும் போக்குக்கும் வினோவின் மகள் நல்ல உதாரணம். ஆனால் அனைத்துக் குழந்தைகளும் அவ்வாறு அல்ல.
அதுபோல, எவ்வாறான இடர் சூழ்ந்தாலும் தன்னம்பிக்கை மிகுந்த மனோதிடத்தினால் காலப்போக்கில் எதையும் வென்று விடக்கூடிய பெண்ணிற்கு தாய் வினோ உதாரணமானவள்.
இக்கதையினை வாசித்த போது மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமே எப்போதும் சிறந்தது என்னும் உணர்வு தோன்றும். புலம் பெயரும் பெற்றோரும் நாட்டிற்கேற்ப சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் மனநிலைகளைத் தகவமைத்துக் கொள்ளுதலே சிறந்தது .
இக்கதையினை எழுதிய ஸ்ரீரஞ்சனி அவர்களுக்கும், கதை வெளிவந்த சிறுகதை மஞ்சரி மற்றும் பதிவுகள் இணைய இதழ் ஆகியவற்றின் இலக்கிய சேவைகளுக்கும் நல்வாழ்த்துகள் .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.