'இலக்கியமும் வைத்தியமும் மட்டுமே ஒரு மனிதனைப் பற்றி அறிவதற்கான இரு நேரடி வழிகள். ஆகையால் மருத்துவத்தை இலக்கியத்தோடு இணைத்துப் புனைய முயற்சித்திருக்கிறேன். போர்க்காலத்தில் எமது வைத்தியர்களினதும் சுகாதாரப் பணியாளர்களினதும் அர்ப்பணிப்பான சேவைகளைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் வியந்து மகிழ்ந்ததுண்டு. தற்போது போர்மேகம் விலகிய சூழலில் 'நீரேந்துப் பகுதியில் பொழிய வேண்டிய மழை உப்பளத்தில் இரைத்துப் பொழிவது போல' எம்மண்ணின் மைந்தர்கள் பலர் குடிபெயர்ந்து அந்நிய மண்ணில் வைத்தியம் பார்த்துச் சீரும் சிறப்போடு வாழ்ந்து வரும் ஒரு சூழலில், கல்லையும் மண்ணையும் பற்றிக் கற்றவன் நான் இரத்தமும் சதையும் பற்றி எழுத வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளேன். முடங்கிக் கிடந்த வைத்தியசாலை ஒன்று புத்தாக்கம் பெற்று இயங்கிய கதை இது. A 9 நெடுஞ்சாலையோரம் ஏற்றம் பெற்றிருக்கும் பச்சிசிலைப்பள்ளி ஆதுரசாலைக்குள் ஆரவாரமின்றி அழைத்துப் போகிறேன் வாருங்கள்'. -தோழமையுடன் சிவ. ஆரூரன் -
நாவல் பற்றிய படைப்பாசிரியரின் ஆரம்ப உரையின் சில பகுதிகளே கதைச்சுருக்கமும் ஆகும். அவரது அழைப்பை ஏற்று நானும் சென்றேன். குறுந்தூர ஓட்ட வீராங்கனை போல சென்ற கையோடு திரும்பியும் விட்டேன். காரணம் உண்டு. மிக ஆறுதலான வாசிப்பையே செய்யும் நான் அதிவிரைவில் வாசித்த படைப்பு இது. விரைவு வாசிப்பானது ஆர்வ மிகுதியின் விளைவாகும் . காரணங்கள் சில. கருவுக்கும் கதைக்களத்துக்கும் பொருத்தமான ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான எழுத்துநடை , புனைவில்லா உண்மைகளின் தரிசனம் தந்த பெருவியப்பும் உருக்கமும். மருத்துவத்துறை சார்ந்த ஒருவராக எனது ஒத்துணர்வு .அனுபவரீதியான மன ஈர்ப்பு. உளத்தாக்கங்கள். சிறிதே குற்ற உணர்வு.
இந்நாவல் வாசிப்பானது அனைவருக்கும் இதே உணர்வுகளைத் தராமலும் இருக்கலாம். ஆனால் தாயகத்தின் மீதான நேசமும், இலவசக் கல்வி பெற்றதற்கான நன்றி உணர்வும், தொழில்ரீதியான கடமை உணர்வும், மனிதநேயம் பெற்ற அல்லது பெற நினைக்கும் அனைத்து துறையினராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. நேர்மையான மருத்துவ சேவை என்பது தியாக உணர்வினையும் சம அளவில் தன்னகத்தே பொதிந்து கொண்டதாகும் என்பதை எழுத்தின் பாதைவழி அழுத்தமாகக் கூறிக் கொண்டே செல்லும் நாவல். ஆதுரசாலை எனும் இந்நாவல் ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக மார்கழி 2021 இல் முதற்பதிப்பினையும் மார்கழி 2023 இல் இரண்டாம் பதிப்பினையும் கண்டுள்ளது .
உருக்கம்....
உண்மை நிகழ்வின் தழுவலாக அமைந்த இந்நாவல் 2021 ம் வெளிவந்த நாவல்களில் தேசிய சாகித்ய விருது பெற்ற படைப்பு என்ற பெருமை கொண்டது. அன்று ( 2022) பொலிஸ் காவலுடன் ஜனாதிபதியின் கையால் சாகித்ய விருதினைப் பெற்ற அரசியல் கைதியாகிய ஆரூரன், 2008 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர். 15 நீண்ட ஆண்டுகளின் பின் தற்போது அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்ட சுதந்திர மனிதர். ஆனால் சிறைப்பறவையாக விருது பெறும் அந்தக் காட்சி என்றும் நினைவழியா வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.
உலக ஆளுமைகளில் பலர் சிறைவாசத்தின் போதே தம்மை படைப்பாளிகளாகவும் அறிஞர்களாகவும் புடம் போட்டுக் கொண்டவர்கள். சிறையில் கிடைக்கும் அனுபவங்களும் வாசிப்பின் பரப்பளவு , சுயசிந்தனையின் வெளிப்பாடாக கிடைக்கும் விரிந்த மன இயல்புகளும் இதற்குக் காரணமாகின்றன. ஆரூரனும் விருதுக்குரிய பல படைப்புகளை சிறைக்கம்பிகளின் பின்னால் இருந்தே படைத்தவர். பரந்த சிந்தனையாளர். சமூக அறிவியலாளன். மானுடநேயம் மிக்கவர்
வியப்பும் வினாக்களும்....
படைப்பாசிரியர் ஒரு பொறியியல் பட்டதாரி. மருத்துவத்துறை பற்றிய மிகத்துல்லியமான விடயங்களை இத்தனை நேர்த்தியாக எவ்வாறு எழுதமுடிந்தது ? வெளியுலகில் நடமாட சுதந்திரமில்லாத நிலையில் 2008 ம் ஆண்டில் இருந்து சிறைக்கம்பிகளின் பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இத்தனை நேரம்ச சிந்தனைகளுடன், சமூகநலன் விரும்பும் நாவல் ஒன்றினை எழுதும் மன ஓர்மம் எவ்வாறு கிடைத்தது?
2015 ஆரம்பம் முதல் 2019 இறுதி வரையிலான பளை பிரதேச வைத்தியசாலையின் துரித முன்னேற்றங்களை அதன் நடைமுறைகளை எவ்வாறு தன் மனக்கண்ணில் காட்சிப்படுத்தினார்? அவருக்கு இத்தரிசனங்களை அளித்து உதவியோருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
15 வருட சிறைவாழ்வானது அவரது பெறுமதி மிக்க இளமைக்காலத்தினைப் பலி கொண்டது. பேரினவாதம் தந்த நியாயமற்ற கொடூரமான தண்டனையாக இருப்பினும், இந்நாவலின் கதையோட்டத்தில் எங்குமே அந்தக் காழ்ப்புணர்வின் சிறு துளியோ வலியோ தென்படவில்லை. மாறாக , இனநல்லுறவின் அபூர்வ வாசனைகளே மெலிதாக ஆங்காங்கே தென்பட்டன என்பதும் உருக்கம்.
- நாவலாசிரியர் ஆதூரன் -
ஈர்ப்பு..
நாவலின் வாசிப்பின் போது தொழில் ரீதியாக உணர்ந்த ஒத்த தருணங்கள் பலபல.
மருத்துவ சேவையில் பதிவு பெற்ற வைத்தியராக முப்பத்துமூன்றுவருடகால சேவை. 1977 இனக்கலவரத்தின் பின்னான காலகட்டத்தில் கண்டி மாவட்டத்தில் தனிச்சிங்களப் பிரதேசம் ஒன்றில் மிகுந்த மனப்பயத்துடன் தனித்த வாழ்வு, அதன்பின் புத்தளம் மாவட்டத்தில் அன்றைய தொலைதூரக் (Remote area) கிராமமும் இன்றைய உல்லாசப் பயணத்துறை சிறுநகரமுமான பிரதேசமொன்றில் மிகுதிக் காலத்தை விருப்புடனும் கழித்து, 2009 இறுதியில் ஐம்பத்தைந்து வயதில் 'இனிப்போதும்' அறுபது வயதுவரை தேவையில்லை என்ற நிறைவு உணர்வுடன் நான் ஓய்வு பெற்றவரை கண்ட அனுபவங்கள். அதில் மிக முக்கியமானது 1983 இனக்கலவர காலத்தில் முதல் குழந்தையை சுமந்திருந்த போது , இறுதி நேரம் வரை பதில் கடமைக்கு ஆளில்லாத நிலையில் பெரும் வேலைச்சுமையுடன் மனம் வருந்தி நின்றது.
இதை ஒத்த பலபல சம்பவங்கள் இந்நாவலின் நாயகன் வைத்தியர் குணசீலனின் அனுபவங்கள். ஆனால் கதைநாயகன் போல சேவைமனப்பான்மை மட்டுமே எமது நீடித்த இருப்புக்குக் காரணமல்ல என்பதோடு வேறும் சில குற்ற உணர்வுகளும் உண்டு. அதேசமயம் இயன்றளவு நேர்மையான சேவையினை நோயாளர் நிமித்தம் செய்ததாக திருப்தியும் உண்டு. சில மருத்துவர்களை நோயாளர் கைராசிக் காரர்கள் என்றும் கதைத்தாலே வருத்தம் மாறிவிடும் என்றும் பாசத்துடன் கூறுவார்கள். வைத்தியருக்குரிய ஏனைய பல திறமைகளைத் தாண்டி நோயாளரை அவ்வாறு கூறவைப்பது எதுவென்றால் ...
ஒரு நல்ல மருத்துவர் நோயை ஆவணப்படுத்துவதை விட , நன்கு செவிமடுப்பவராகவும் நோயாளர் மேல் தாம் பரிவு கொண்டிருப்பதை உணர வைப்பவராகவும், அதனைத் தமது உடல்மொழி மூலம் நோயாளருக்கு தெரிவிக்கும் திறமையினை கொண்டிருப்பவராகவும் இருப்பதுதான். இவ்வாறானவர்கள் இயல்பிலேயே இரக்கம் ஆர்வம் அறிவு விடாமுயற்சியினைத் தம்மகத்தே கொண்டிருப்பர். அதே சமயம் ஒரு நிர்வாகியாக சிறந்த தலைமைத்துவப் பண்புகள் கொண்ட அணிவீரராகவும் நேர்மை புரிந்துணர்வு விடாமுயற்சி என்பவற்றைக் கொண்டவராகவும் இருப்பர்.
வைத்தியசேவைக்குரிய பண்பியல் நெறிமுறைகளினதும் நிர்வாக ஆளுமைக்கூறுகளினதும் மொத்த வடிவமாக ஒரு வைத்தியரை இன்று காண்தல் அரிது. எனினும் இந்நாவலில் குணசீலன் என்னும் உயிர்ப்புள்ள உத்தம கதாபாத்திரம் கற்றுத்தரும் விடயங்கள் அநேகம். இப்பண்புகளில் சில கூறுகளாவது சிலரது மனமாற்றத்துக்குக் காரணமானால் அதுவே நாவலுக்கான மற்றுமோர் பெரும் விருது.
"ஏதேனும் அற்புதம் நிகழும் என
பல ஆண்டுகள் காத்திருந்தேன்.
ஆனால் ஒன்றும் நிகழவில்லை
நானாக நிகழ்த்தும் வரை.! "
- சார்லஸ் புயூகோவ்ஸ்கி -
அறிஞரின் இக்கூற்றுக்குரிய நல்லிலக்கணமாக, பின்தங்கிய நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பளை பிரதேச வைத்தியசாலையை, நோயாளர் நலனை முன்னிறுத்தி தனியொருவருவராகத் தரம் உயர்த்திய பெருமை கதையின் நாயகன் வைத்தியர் குணசீலனுக்கு உரியது. இதற்கு உறுதுணையாக இருந்தவர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரான ( RDHS ) வைத்தியர் கார்த்திகேயன், சில பணியாளர்கள் மற்றும் பிரதேச நலன்விரும்பிகள்.
குணசீலன் நினைத்திருந்தால் வசதிகள் அதிகம் கொண்ட பிரதேசத்தில் இடமாற்றம் பெற்றிருக்கலாம். புலம் பெயர்ந்திருக்கலாம். ஆனால் மக்களின் வரிப்பணத்தில் தான் இலவசமாகப் பெற்ற கல்வி தாய்நாட்டுக்கே பயன்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவன். நாவலில் ஒரு சிறு உரையாடல்
"ஸ்ரீலங்காவில் வைத்தியத்துறை சிஸ்ரம் சரியா வேலை செய்யிறேல்லை. டொக்ரஸ்க்கு சரியான சம்பளம் கிடைக்கிறேல்லை. வாழ்க்கைத்தரம் குறைவு. பாதுகாப்பில்லை. படிச்சவன் விதண்டாவாதம் கதைப்பான். படிக்காதவன் தூசணத்தால ஏசுவான்...." (P 196)
இவ்வாறு கூறும் புலம்பெயர்ந்த வைத்தியருக்கு குணசீலன் கூறும் பதில் இது.
"கிளிநொச்சி மாவட்டக் கோட்டாவில மெடிக்கல் ஃபக்கல்றி வந்திட்டு ....என்ன கதை இது. கல்வி திண்ணைவேலியில் சேவை மெல்போனிலா? பொன்னையா கட்டின வரிப்பணத்தில படிச்சிட்டு அண்டர்சனுக்கு சம்பளத்துக்கு வைத்தியம் பாக்கப் போயிட்டு நல்லா கதைக்கிறீங்கள் "
பிட்டுக்கு மண்சுமந்த பெருமான் பெற்ற பிரம்படி போல ஒரு கூற்று இது.
மருத்துவ சேவையில் சட்டப்படியும் நியாயப்படியும் தவறு அல்லாத சில விடயங்கள் மனச்சாட்சிப்படி தவறு ஆகின்றன. அந்த மனச்சாட்சியே குணசீலன் போன்ற வைத்தியர்களின் தன்னலமற்ற சேவையின் கடப்பாடு ஆகின்றன.
2015 பெப்ரவரி மாதத்தில் ஒருநாள்.... காலை வேளை. பளை ஆதுரசாலையின் தோற்றத்தை மனப்படிமத்தில் காணுங்கள்.
பராமரிப்பின்றி பாழடைந்து கொண்டிருக்கும் இரண்டு மாடி சிறு கட்டடம். சுற்றிவர பற்றைகள். பழைய கூடாரம் ஒன்றில் இயங்கும் அசுத்தம் சூழ்ந்த குசினி. நீரின்றி வாடும் பூஞ்செடிகள். இறைக்கப்படாது கைவிடப்பட்ட பெரிய வெட்டுக் கிணறு. பழைய பொருட்களையும் பொதி செய்த நிலையிலேயே உபகரணங்களையும் கொண்டதுமாக இயங்காத நிலையில் அவசர சேவைப்பிரிவு .
வரவுப் பதிவேட்டில் கடமை நேரம் தவறாத ஊழியர் வருகை . அதாவது பிந்தி வந்தாலும் நேரத்தை மாற்றி எழுதும் 'நேர்மைமிகு' பணியாளர். வரும் நோயாளரையும் குழந்தை பிரசவிக்க வரும் தாய்மாரையும் முதலுதவிகள் ஏதும் செய்யாமல் கிளிநொச்சி அல்லது சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் 'இலவச போக்குவரத்து சேவை' யாக இயங்கும் ஆம்புலன்ஸ் வண்டி. இரட்டை வருமானம் கிடைக்கும் போயா ஞாயிறு முதலான விடுமுறை நாட்களில் மட்டும் லீவு போடாமல் சமுகம் அளிக்கும் பணியாளர். தாதியர் பற்றாக்குறை. வேறு யாரையாவது மருந்துகளை வழங்க விட்டு எந்நேரமும் போனை நோண்டிக் கொண்டிருக்கும் மருந்து வழங்குனர். கவனிக்கப்படாமல் முடிவுத் தேதியை அடையும் மருந்துகள்.
இவ்வாறாக இருந்த மருத்துவமனை 15.12.2019 இல் தனக்குரிய சகல வளங்களிலும் சேவைகளிலும் பெருநிறைவு பெற்று செழித்தோங்குகிறது. அயல்கிராமங்களில் இருந்தும் நோயாளர்கள் இங்கு வருகின்றனர். அனாவசிய அம்புலன்ஸ் ஓட்டமும் இல்லை.
இப் பெருமை 'நித்திரையிலும் 'ஒரு கண் விழித்திருக்கும்' கர்மவீரனாகிய குணசீலனுக்கு உரியது. இது அவனது கடமை நேரத்திற்கு மேலதிகமாக தனது சொந்த நேரத்தையும் செலவிட்டுக் கண்ட முன்னேற்றம். வைத்தியசாலைக் கட்டமைப்பை மட்டுமல்ல அங்கு பணிபுரிவோரின் பொது மருத்துவ அறிவினையும் வளர்த்தெடுக்கின்றான். எனினும் இதற்குள்ளும் குற்றங்கள் குறைகள் கண்டு சதிமுயற்சிகள் செய்து அவனை வீழ்த்த நினைக்கும் ஒரு கூட்டமும் இருந்தது.
'முதலில் அதிகாரத்தைக் காட்டக்கூடாது. விட்டுப் பிடிக்க வேண்டும். ஏனோதானோ என்றிருந்தால் தான் உண்மையான நடத்தையை அவதானிக்கலாம்'. இது குணசீலனின் சாணக்கியம்.
ஒரு வைத்தியனுக்குரிய கடமை, நிர்வாகத் திறமைகளின் சான்றாக சில எளிய உதாரணங்கள்.
வைத்தியசாலை துப்பரவுப் பணியாளரான ( HSA) கனகா என்ற பெண், வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள இடத்தை துப்பரவு செய்ய கூச்சப்படுகிறார் .
"இது எனது சொந்த ஊர். நாங்கள் சாதி கூடிய ஆக்கள். நான் மணியோடை ஒத்துமாறிச் செய்யட்டோ ? அவையின்ர ஆக்கள் அதை பெரிசா எடுக்க மாட்டினம்".
என்று கூறுகிறார். சொந்த ஊர் என்ற சங்கடத்தைப் சரிவரப் புரிந்து கொள்ளும் வைத்தியர் . "மணி என்னும் பெண்ஊழியருக்கு இதைச் செய்வதில் பிரச்சனை இல்லை" என்று கூறியதை ஏற்கவில்லை. இந்த ஏற்பாட்டை மறுக்கிறான். யாவரும் சம கெளரவம் கொண்டவர்களே என்பது அவனின் எண்ணம்.
'பிரச்சனை உள்ளவர்களே தீர்வைத் தீவிரமாகத் தேடுவார்கள்' என்பது குணசீலனின் சமயோசிதம். தீர்வு எட்டப்படுகிறது. கனகா ஊரவர் யாரும் காணாத அதிகாலையில் ஐந்து மணிக்கு வந்து தன் பணியினைச் செய்கிறார்.
மற்றுமொன்று....
'மேலதிக கொடுப்பனவு கிடைக்கும்' என்று எல்லோரும் பணி செய்ய வரும் ஞாயிறு போயா விடுமுறை நாட்களில் சிரமதானம் கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப் படுகின்றன.
15.12. 2019 இல் உரியகாலத்தில் இடமாற்றம் பெற்று மற்றுமோர் கிராமிய மருத்துவ மனையைப் பொறுப்பெடுக்கச் செல்லும் குணசீலன், தான் பாசமுடன் வளர்த்தெடுத்த செல்ல மகளைக் கன்னிகாதானம் செய்யும் தந்தையைப் போல, பளை வைத்தியசாலையை பொறுப்பெடுக்க வரும் புதிய வைத்தியரிடம் சீரோடும் சிறப்போடும் கையளிக்கிறான். 'சட்டத்திற்காக வேலை செய்யாதீர்கள். மக்களுக்காகப் பணிசெய்யுங்கள்' என்னும் வேண்டுதலுடன் விடைபெறுகிறான்.
ஆரூரனின் நாவலை வாசித்து முடித்த போது ஒரு ஆதங்கம் மனதில் வந்தது. என்னதான் E.Code மற்றும் மருத்துவ நெறிமுறைகளை அறிந்திருந்தாலும் கூட , முன்மாதிரியான மருத்துவன் குணசீலனின் உயிர்ப்புள்ள வாழ்க்கை நெறிமுறைகள் மனதில் மிகப் பலமான தாக்கத்தினை ஏற்படுத்தின. கடமை நேரத்தில் மதசின்னங்களோ மோதிரமோ வெளித் தெரியும்படி அணியக் கூடாது என்ற குணசீலனின் கட்டளைகளை வாசித்தபோது நீண்டகாலமாக மணிக்கட்டில் அணிந்திருக்கும் கோயில் காப்பு நூலினை சங்கடத்துடன் பார்த்துக் கொண்டேன்.
கல்லோடும் மண்ணோடும் இரும்போடும் வாழக்கூடிய எஞ்சினியரான எழுத்தாளர், உண்மையும் யதார்த்தமும் கொண்டு எழுதிய இந்நாவல்
'அட...வேளைக்கே இதை வாசித்திருந்தால் இன்னும் கொஞ்சம் இன்முகம் கொண்டு நோயாளரைக் கவனித்திருக்கலாமோ, ஏனைய கடமைகளில் இன்னும் கொஞ்சம் நியாயமாக நடந்திருக்கலாமோ' எனும் உணர்வினைத் தந்தது உண்மை. எனினும் கடமையில் இயன்றளவு நேர்மையாகவே நடந்தோம் என்ற திருப்தியும் மனநிறைவும் உண்டு.
புதியவர்கள் வாசியுங்கள். இயன்றதைச் செய்யுங்கள்.
குணசீலன் என்னும் உத்தமகுணம் கொண்ட வைத்தியருக்கும் பெற்றோர் உண்டு. அவர்களுக்கான கடமைகளும் உண்டு. இனிய இல்லறமும் அமைந்தது. வேலைப்பளுவிற்கு மத்தியிலும் அழகான புரிதலும் இனிமையான காதலும் தாம்பத்தியமும் இருந்தன. ஒரு ஆண்மகவும் பிறந்தது. அவன் பெயர் கரிகாலன்.
இலட்சியங்களை நோக்காகக் கொண்ட படைப்பாளர் சிவ ஆருரன் வாழ்வில் சகல நிறைவுகளும் நலமும் பெற்று இலக்கியத்தில் இன்னும் பல உச்சங்களைத் தொடவேண்டும். நல்வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.