நிகழ்காலத்தை கடந்த காலத்துடனும் , தாயக வாழ்வினை புலம்பெயர் வாழ்வுடனும் ஒரே புள்ளியில் இணைப்பதில் அதீத திறமையைக் கொண்டிருக்கும் ஈழத்துப் படைப்பாளிகளில் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் முக்கியமானவர். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் நீட்சி எனக் கூறக் கூடிய புலம்பெயர் இலக்கியங்களில் இவரது பங்கும் காத்திரமானது. தனது தாயக வேர்களை மறவாமலும் அதே சமயம் புலம்பெயர்ந்த சமூகத்தின் கலாசார பண்பாட்டு மாற்றங்களை உள்வாங்கி ஒப்பிட்டும் இவர் படைக்கும் கதைகளின் இணைவுப் புள்ளி , சில சமயங்களில் பிரமிக்க வைக்கிறது. சில சமயங்களில் சிந்திக்க வைக்கிறது. பல சமயங்களில் மனதை வலிக்கச் செய்கிறது. இதனால் இக்கதைகள் எப்போதும் வாசக ஈர்ப்புக் கொண்ட படைப்புகளாக விளங்குகின்றன. டென்மார்க் நாட்டில் வாழும் இவரது கதைகளில் பெரும்பாலானவை அந்நாட்டின் கலாசாரக் கூறுகளை இனம் காட்டுபவையாகவும் அமைந்துள்ளன.
இருபது சிறுகதைகள் மற்றும் கதைகள் பற்றிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறு விமர்சனங்களுடன் கூடிய 'கடைக்குட்டியன்' எனும் இத்தொகுப்பு , ஜீவநதி பதிப்பகத்தின் 200 வது வெளியீடாகும். சாம்பல் நிற அட்டைப்படத்தில் கூழாங்கற்களிடையே செல்லும் வெற்றுக் காலடித் தடங்கள், ஒருவிதத்தில் ஈழத் தமிழினம் கடந்து வந்த அவல வாழ்வைக் குறியீட்டு ரீதியாகக் காட்டுகின்றதோ என்ற எண்ணமும் பொருத்தமானது தான்.
இத்தொகுப்பின் ஓரிடத்தில் தமிழினத்தின் புலம்பெயர் வாழ்வு பற்றி இவ்வாறு கூறுகிறார் ஆசிரியர்: "மாற்றங்கள் இப்படித்தான் சின்னச் சின்னதாகத் தொடங்கும். கடைசியில் எல்லாவற்றிலும் நாங்கள் மூழ்கிப் போய் விடுவோம் "
நிதர்சனமான வசனம். புலம்பெயர் வாழ்வும் அதன் எதிர்வினையால் தாயக வாழ்வும் , தமிழினத்திற்கு நன்மை தருகின்றதா அல்லது இழப்பினைத் தருகின்றதா என்ற கேள்விக்கு , தமிழரின் இனவிகிதாசாரமும் பாரம்பரியப் பண்பாடும் குறைந்து செல்லும் இலங்கையின் எதிர்காலம் பதிலைக் கூறும். அந்த விதத்திலும் 'கடைக்குட்டியன்' ஆகும் சந்தர்ப்பங்களும் நேரலாம். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மாற்றங்களை விட தாயகத்தின் மாற்றங்கள் மிகமிகச் சிக்கலானவையாக அமையும் எனத் தோன்றுகிறது .
காலத்துக்குக் காலம் வேறுபடும் தாயக வாழ்வின் பல படிகளையும் இவரது கதைகள் எமக்கு தீர்க்கமான கண்களுடன் காட்டுகின்றன . தாய்நில உறவுகளின் ஒவ்வொரு அசைவும், புலம்பெயர்ந்த தேசத்தின் தனித்துவமான தாக்கங்களுடன் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது என்பது கண்காணும் உண்மை .
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் குறியீடாக தன்னைக் கருதியவாறு படைப்பாளரின் சொந்தப் பெயரில் எழுதப்பட்ட ஒரு கதை 'வி.ஜீவகுமாரனாகிய நான்..' . சமூக பண்பாட்டியல் ரீதியில் தமிழராக நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பதில் சொல்ல வேண்டிய, சில சமயங்களில் வெட்கித் தலைகுனிய வேண்டிய பல நிதர்சனங்களை இக்கதை முகத்தில் அறைந்து சொல்கிறது. அதேசமயம், இதே கதையில் இந்து மத சம்பிரதாயங்களைக் கேள்விக்குட்படுத்தும் டெனிஸ் பெண்ணிடம் கதைசொல்லி கேட்கும் காத்திரமான கேள்வியும் பாராட்டுக்கு உரியது.
வானுயர்ந்த கோயில்கள் அதையும் மறைக்கும் கட்டடங்கள் என செயற்கைத் தன்மை மிகுந்து நவீனமாகும் தாயக வாழ்வில் , கிணற்றடிகள் கிடுகு வேலிகள் பங்குக் கிணறுகளுடன் கூடவே , மனிதர்களும் மனிதமும் சகவாழ்வுடன் ஒற்றுமையும் காணாமல் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தாயகத்தை முன்னிலைப்படுத்திய அன்னதானம், கிணற்றடி ஆகிய சிறுகதைகள் இந்நிலையை விசனத்துடன் கூறுகின்றன.
ஜீவகுமாரனின் கதைகள் எப்படிப்பட்டவை? அதற்கும் பின் அட்டைக் குறிப்பில் அவரே விடை தந்திருக்கிறார்: "பன்னீர்குடம் உடைதலில் தொடங்கும் இந்த நினைவுகளும் கனவுகளும் கொள்ளிக் குடம் உடைக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்..... பல சந்தர்ப்பங்களில் என் கனவுகளும் நினைவுகளும் உங்கள் கனவுகளுடனும் நினைவுகளுடனும் ஒரே திசையில் பயணிக்கும் போது நீங்கள் பரவசப் படுகிறீர்கள். அவ்வாறில்லாத ஒரு உலகத்தை உங்கள் முன் வைக்கும் போது நீங்கள் வியந்து போகிறீர்கள்....."
வாசகராக நானும் பரவசம் அடைந்தேன். வியந்தேன். மனம் நொந்தேன். ரசனைக்குரிய அந்த அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
'சிறுகதை – ஓர் அறிமுகம்' எனும் ஆய்வுக் கட்டுரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர்.இரா. பிரேமா இவ்வாறு கூறுகிறார்;
"ஒன்றிரண்டு வண்ணங்களால் வரைந்த ஓவியம் போன்றது சிறுகதை....... எந்த உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ, அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும்..."
இந்த மின்னலின் ஒளிர்வு ஜீவகுமாரனின் கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். தான் கூறவந்த உணர்வினை வாசகனின் அகத்தில் ஊடுருவச் செய்வதற்கு, தொன்மங்கள், வரலாறுகள், அண்மைய வாழ்வியல் என்பவற்றிலிருந்து பல பக்கப் பாதைகளை உருவாக்கி கருப்பொருள் என்னும் பிரதான இராஜபாட்டையில் இணைப்பது அவரது பாணி . ஒரு சாளரத்தினூடாக மட்டும் வாசகனைப் பார்க்க வைக்காமல் பல சாளரங்களினூடாக ஒரே விடயத்தில் கவனத்தைக் குவிக்கும் வழிமுறையினையும் கையாள்கிறார் . இதனால் பரந்ததும் உறுதியானதுமோர் நோக்கு உருவாகிறது.
கதைகளை வாசிக்கும் போது 'பல பக்கப்பாதைகள் பல சாளரங்கள்' வியப்பைத் தந்தாலும் இந்த ரசனைக் குறிப்பினை எழுத நினைத்த கணத்தில் அதுவே பெருஞ் சுமையாகிப் போனது. எல்லாமே சிறப்பாக இருக்கும் போது எதை எழுதுவது எதை விடுவது என்ற பிரச்சனை . இத்தொகுப்பின் சிறுகதைகள் , கருப்பொருள் அடிப்படையில் சில பொதுப் பண்புகளைக் கொண்டவை.
மரபு வழி தொடரும் தாயகப் பண்பாட்டியலின் இன்றைய இருப்பாளர்களின் வாழ்வியலும் மாற்றங்களும்.
பிறிதோர் தேசத்தில் வேரூன்றி கிளைபரப்பிய பின் விலக முடியாத கடப்பாடுகளைக் கொண்டிருக்கும், புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினரின் தாயகம் மீதான ஏக்கங்கள் .
புதிய தேசத்தின் கலாசார விழுமியங்களை ஏற்றும் ஏற்காமலும் இடர்படும் இரட்டை மனநிலை..
தாயகத்தில் அன்று ஏற்றுக் கொள்ள மறுத்த சில சாதி மத சமய கலாசார கட்டுப்பாடுகளை, புதிய தேசத்தில் சரியென ஏற்றுக் கொள்ளும் இன்றைய மனமாற்றம்
பிறிதோர் தேசத்தின் பிரஜைகளாக பிறந்து வளர்ந்து வரும் அவர்களது அடுத்த சந்ததியின் வாழ்க்கை நடைமுறைகளில் , பெற்றோராக இவர்கள் செலுத்தும் தாக்கம் , முரண் மனநிலைகள்.
இதனால் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் சங்கடங்கள் புரிந்துணர்வு மோதல்கள் என்பன.
சிறுகதைத் தொகுப்பின் முதலாவது கதை 'மாதுளம் மொட்டுக்கள்'. இக்கதை, முகலாய சக்கரவர்த்தி அக்பரினதும் அவரது வழித்தோன்றல்களான சலீம் சாஜகான் ஆகியோரினதும் காதல்களில் ஆரம்பித்து, அவர்களின் வெற்றி தோல்விகள் வாழ்க்கைச் சரிதத்தின் முரண்நிலை அரசியல் வஞ்சகங்களின் ஊடாக, இன்றைய தமிழர் பிரச்சனைகளின் அரசியல் வரலாறு மற்றும் இறுதிப்போர் வரையிலான கட்டங்களை, பண்பியல் ஒப்பீட்டு ரீதியில் ஆராய்கிறது. வரலாற்றில் அன்றும் இன்றும் அரசியல் வஞ்சனைகளும் சதிகளும் மிகப் பெரும் துயரத்தையே தந்தன என்ற நினைவே இறுதியில் மனதில் காயமாகவும் தழும்பாகவும் நிலைக்கின்றது .
இதே ரீதியிலான கொடூர சம்பவங்களை 'எங்கெங்கு காணினும்' என்ற கதையிலும் கொண்டு வருகிறார். இன்றைய வடக்கின் திகில் மிகுந்த சில நிலைமைகளைக் கதை படம் பிடிக்கிறது. ' அதர்மத்தைத் தோற்கடிக்க இன்னோர் அதர்மத்தைக் கையில் எடுப்பதும் தர்மம் தான் என்று கிருஸ்ணன் சொன்னதை அவனவன் எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு விட்டானா என மனம் என்னையே கேட்டுக் கொண்டது' என்ற வசனம் கதாபாத்திரத்தின் வடிவிலிருந்து எம்மையே நாம் கேட்க வேண்டிய கேள்வியாகிறது.
நகரம், முன்னை இட்ட தீ ஆகிய கதைகள் அரசியல் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்னும் உணர்வு நிலைகளில், மாறுபட்ட கோணங்களையும் தர்க்கங்களையும் தரக்கூடியவை. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தனிமனிதக் கொலையும், இலங்கையில் பொதுமக்களை இலக்கு வைத்த குழு மனிதக் கொலைகளுக்குமான காரணங்கள் எவையாயினும், எப்பேர்ப்பட்ட இரு பக்க நியாய அநியாயங்களைக் கொண்டிருப்பினும்...., இவை தசாப்தங்கள் பல கடந்தும் அரசியல் வரலாறாகவும் துரோகத்தின் வடுவாகவும் தமக்குரிய பாதக விளைவுகளைக் தந்து கொண்டே நிலைக்கக் கூடியன. வரலாற்று சம்பவக் கோர்ப்புகளுடன் கூடிய மிக ஆழமான புனைவு.
மனிதனின் இறுதிக் கணங்களில், மனச்சாட்சியுடனான அவனது போராட்டத்தின் குரலாக 'மரணப்படுக்கை' என்னும் இறுதிச் சிறுகதை. சேடம் இழுக்கும் முன்னாள் பிரமுகர் செல்லமுத்து சேர்மனின் கலங்கிய நினைவுகள் ஊடாக, அவர் இரகசியமாகச் செய்த துரோகங்களால் இறுதிநாளில் உருவாகும் மனச்சஞ்சலங்களைக் கூறுகிறது. இங்கு இதிகாச பாத்திரங்களின் மனச்சாட்சியும் மரணத்தை எதிர்நோக்கும் கணங்களில் பேசுகின்றமை புதிய ஒப்பீட்டு யுக்தி.
சூழ்நிலைக் கைதிகளாகவும் செஞ்சோற்றுக் கடனுக்காகவும் துரோகத்திற்கு உடனிருந்தவர்கள் இதிகாச கதாபாத்திரங்களான பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலான பாரதத்தின் பெருந்தலைகள். துரோகத்திற்கு உட்பட்டவர்கள் அம்பை ஏகலைவன் அபிமன்யு திரெளபதி. 'எனது மரணம் எனக்கு என்ன சொல்லிப் பயமுறுத்தப் போகிறது' என்ற கேள்வியுடன் முடிவுறும் இக்கதை, நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவபுண்ணியங்கள் பற்றிய மனவிசாரங்களைத் தந்து செல்கிறது.
'தெத்தேரி' சிறுகதை அப்பாவியான ஒரு தனிமனிதன் மேலான நம்பிக்கைத் துரோகத்தினைக் குறித்து நிற்கிறது. கண்தெரியாதவனும் உறவுகள் இல்லாதவனுமான 'தெத்தேரி' இரந்து உண்பவன். பிச்சையில் எஞ்சும் பணத்தை ஒரு குடும்பத்தினரிடம் தனது இறுதிச் சடங்கிற்காகக் கொடுத்து வைக்கிறான். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாது புலம் பெயர்கிறார்கள். தெத்தேரி ஒருநாள் யாருமற்று இறந்து விடுகிறான் . அனாதைப்பிணமாக அவனைக் கிடக்க விட்ட துரோகத்துக்கான தண்டனையைப் புலம்பெயர்ந்த குடும்பத்தினர் பெற்றார்களா என்பது கதை. மனதில் நின்ற உருக்கமான படைப்பு.
காதலும் காமமும் இல்லறமும் மேலைத்தேய கீழைத்தேய வாழ்வியலில் செலுத்தும் வேறுபாடுகளை 'இலைமறைதாய்' கூறுகிறது. எந்த வயதிலும் தமது உணர்வுகளை ஆசைகளை பிள்ளைகளுக்காக பலி கொடுக்கத் தேவையில்லை என்ற மேலைநாட்டவர் உணர்வும், பிள்ளைகள் வாழ்விழந்து நிற்கையில் தாமும் ஆசை துறந்து வாழும் கீழைத்தேய வாழ்வியல் அறமும் சரிபிழை கூறமுடியாத தளம்பலைத் தோற்றுவிக்கின்றன.
- எழுத்தாளர் ஜீவகுமாரன் -
இதே சமயம் புலம்பெயர்ந்து மேலைநாட்டில் வாழும் ஒருவராக 'அம்மா' கதையின் நாயகி தெளிவான முடிவினைத் துணிவுடன் எடுக்கின்றார். அவர் வளர்ந்த பிள்ளைகளை உடைய தாய். புரிந்துணர்வு இல்லாத சுயநலம் மிகுந்த கணவருடன் இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்தவர். கணவர் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தபின் தனக்கேற்ற வேறு துணை தேடுகிறார்.
'ஒரு தடவை வாழ்கின்ற வாழ்வை எனக்குத் துரோகம் செய்யாமல் வாழ நான் ஆசைப்படுறன் ' என்கிற இவருடைய நினைவும் நியாயமானதுதான். அந்தத் தாயின் உணர்வுகளைப் பிள்ளைகள் புரிந்து கொள்கிறார்கள். வாசகரும் புரிந்து கொள்வர். ஆனால் வேறோர் கோணத்தில் புலம்பெயர் கலாசாரத்தில், வளர்ந்த பிள்ளைகள் தமக்கான காதல் திருமணம் என்பவை பற்றி எடுக்கும் நியாயமான முடிவுகளை, தமிழ்க் கலாசாரத்தின் கழுவேற்றமாக நினைத்து சில பெற்றோர் அனுமதிப்பதில்லை. அநாகரிகமான கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர். ஒழுக்கம் பற்றி சந்தேகம் கொள்கின்றனர். இதனால் இளையவர்கள் தமது முடிவில் முனைப்பு பெற்று பெற்றோரை மீறுகின்றனர். 'அலைகள்' சிறுகதை இவ்வாறான மனநிலையைக் கூறுகிறது.
அதே சமயம் பதின்மவயதின் ஈர்ப்பு என்பது, பின்னாளில் காதலாகலாம். அழகிய நினைவு மட்டுமே என்றாகலாம். புரிந்துணர்வுடன் விலகிச் செல்லலாம். சில வேளைகளில் நினைவில் இருந்து முற்றாக அழிந்தும் விடலாம் என்பதை அழகியல் உணர்வுடன் கூறும் கதைகள் 'அவளும் இவளும்' , 'நானும் என் சின்ன மச்சாளும்' , 'நோ மோர் ஃபீலிங்ஸ் கதைகள்'. மெல்லுணர்வு மிகும் படைப்புகள்.
கமலி அக்காவும் பாலனும் கதையில் கமலி என்ற கதாபாத்திரத்தின் இறுதித் தீர்மானத்திற்கான காரணம், இரண்டு நிலைகளில் இருந்து பார்க்கக் கூடியது. மலடி என விழிக்கப்படுவதும் அதுவே உண்மை என உணர்வதும் ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு வருத்தும் என்பதை உணர்த்தும் கதை இது. கமலியின் முடிவிற்கு, கணவன் ஆண்மையற்றவன் எனக் கருதி அவள் அறிந்தே செய்த செயல் காரணமா அல்லது கணவன் செய்த துரோகம் காரணமா என்பது வாசகருக்கான கேள்வி.
மனதில் ஆழமான வலிகளைத் தோற்றுவித்த கதைகளாக இரண்டைக் கூறலாம்.
கரும்புச்சாறும் வெள்ளிவிழாவும் சிறுகதையில் திருமணநாள் மற்றும் கடமைக்கால வெள்ளிவிழாக்களில் வழங்கப்படும் பரிசுகளின் முக்கியத்துவம் பற்றிய விலாவாரியாக விவரணத்திற்கும், கரும்புச்சாறு பிழியப்பட்ட பின் துளிகூட இனிப்பைக் கொண்டிராத சக்கைக்கும் உள்ள தொடர்புகளை ஊகிக்க முடியாதிருந்தது.
இக்கதையின் நாயகன் இறைச்சிக்காக கோழிகளை வெட்டும் தொழிற்சாலையில் இருபத்தைந்து வருடங்கள் ஓய்வின்றி கடமை உணர்வுடன் வேலை செய்தவன். இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவில் கிடைக்கும் வெள்ளிவிழா சன்மானத்தில் குடும்பத்துடன் விடுமுறையில் தாயகம் செல்வது அவன் கனவு. ஆனால் அதற்கு மூன்று மாதங்களே இருந்த நிலையில் கம்பனியின் நஷ்டத்தை முன்னிறுத்தி இவனைப் போன்ற இருபத்தைந்து பேர் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு தர வேண்டிய சன்மானம் கம்பனிக்கு லாபம் என்ற கணக்கு.
முட்டை போட்டு முடிந்த முதிர்ந்த கிழட்டுப் பேட்டுக் கோழியை மயக்கி இயந்திரத்தால் கழுத்தை வெட்டிக் கொல்வது போல, உணர்வுரீதியாக இதுவும் கொலைதான். புலம்பெயர் சமூகம் சந்திக்கும் அவலங்களில் ஒன்றெனக் கருதலாம்.
தாயக வாழ்வின் இறுக்கமான கலாசார பாரம்பரியப் கட்டுப்பாடுகள் , புலம் பெயர்ந்த ஈழத் தமிழரிடையே மாற்றமடைந்து எத்தகைய உச்சக்கட்டத்தை அடைந்தன என்பதை விளக்கும் படைப்பாக 'முற்பகல்' கதை . இங்கு தகர்க்கப்படும் சம்பிரதாயங்களாவன.... சாதியம் சமயம் இனம் சார்ந்த திருமணங்கள் , மண உறவுடன் கூடிய தாம்பத்தியம் மற்றும் கருத்தரித்தல் என்ற நிலைப்பாடுகள்.
கதைசொல்லியானவர் மூத்த மகள் வயிற்றுப் பேரனின் திருமணத்திற்கு செல்கிறார். சைவத் தமிழ் பண்பாடு தழுவி வளர்க்கப்பட்ட பேரனின் பெயர் சிவச்செல்வன். டென்மார்க் நாட்டில் புரட்டஸ்தாந்து தேவாலயத்தில் டெனிஸ் பெண்ணான மல்ரிட்டாவை திருமணம் செய்கிறான். அவளது தாய் கறுப்பினப் பெண்.
மனச் சஞ்சலத்துடன் தேவாலயம் செல்லும் பேரனார் வெள்ளை அங்கியில் தந்தையின் முழங்கை கோர்த்து வரும் மணப்பெண் மல்ரிட்டா கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்கிறார். தன்னையும் அறியாமல் 'சரசு' என்கிறார். சரசு யார் ? தாயகத்தில் அவரது வீட்டுக் 'குடி' களின் மகள் சரசு. இருவரும் அன்றைய பதின்மத்தின் கிளர்ச்சி மிகுந்த கூறுகள். கதை இவ்வாறு முடிகிறது.
....பின்பு என்ன நடந்தது என்பது ஊருக்கே தெரியும். எங்கள் வீட்டுப் பணமும் சமரசமும் மிரட்டல்களும்....
'எனக்கு ஒரு மகனோ ...மகளோ... என் மூத்தவளை விட 14 அல்லது 15 வயது வித்தியாசத்தில்...எப்படி இருக்கிறார்களோ? அங்கும் என் பேரன் பேர்த்திகள் இருக்கின்றார்களோ? '
கதைசொல்லியின் உணர்வுகள் எத்தனை வலி மிகுந்தவையாக இருந்திருக்கும். மனதை மிக நெகிழ வைத்த கதை. நம்மவர்கள் எதையெல்லாம் தாயகத்தில் செய்ய மறுத்தார்களோ , இழிவு எனக் கருதினார்களோ அதையெல்லாம் புலம்பெயர்வு அவர்களுக்கு கற்றுத் தந்தது. புலம்பெயர்வு என்னும் வரலாற்றின் பக்கங்கள் ஊடாக ஒரு வாழ்க்கைப் பாடம்.
பல்வகைமை கொண்ட சிறந்ததோர் வாசிப்பு அனுபவத்தைத் தந்தமைக்காக நன்றி ஜீவகுமாரன் அவர்களே. தொடருங்கள். நல்வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.