சிறுகதையொன்றின் கருவும் களமும் காலமும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளரின் மனம் செல்லும் வழியும் மொழியும் , அவரது எழுத்தின் ஊடாக வெளிப்படுகின்ற விதமே அப்படைப்பின் மேலான வாசகரது ஈடுபாட்டை உறுதி செய்கிறது. இலக்கியத்தின் எந்த ரூபத்திலும் எழுத்தாளரின் வெளிப்பாட்டு மொழிதான் வெற்றியைப் பெருமளவில் தீர்மானிக்கிறது.
படைப்பாளரது மொழியாடலானது, பெருங்காற்றில் அள்ளுண்டு போவது போலவும் நீர்ச்ச்சுழலொன்றில் சிக்கியது போலவும் சுனாமியின் பேரலையில் ஆழ்ந்து போவது போலவும் பாத்திரப் படைப்பினுள்ளும் சம்பவக் கோர்வைகளுக்கு உள்ளும் வாசகரை ஈர்த்து மூழ்கடிக்கும் வல்லமை கொண்டதென நினைக்கும் கணங்களில் , முன்வந்து நிற்கும் பெயர்களில் ஒன்று இலங்கையைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான பிரமிளா பிரதீபன் அவர்களுடையது.
அவரது இலக்கியவெற்றி எழுத்துநடையால் அதிக பிரபலம் பெற்றது. தனித்துவமான மொழிப்பிரயோகம் சாதாரண கதைமாந்தரையும் வியந்து நோக்க வைக்கும் திறன் கொண்டது .மற்றுமோர் சிறப்பு அகவுணர்வுகளை மிகநுட்பமாகவும் ரம்மியமாகவும் மனோலயத்துடனும் வெளிக்காட்டும் , கதை மாந்தரினூடாகத் தன்னை வெளிப்படுத்துவது. பிரதியை வாசிக்கும் போதே ' அடடா , இது எனது உணர்வு ஆயிற்றே ' என வாசகரை நினைக்க வைப்பது அவரது எழுத்தின் வல்லமை.
தனது படைப்புலகம் எவ்வாறானது என்பதை எழுத்தாளர் பிரமிளா தனது நூலின் 'என்னுரையில்' இவ்வாறு அறியத்தருகிறார்.
"எனக்கென ஒரு விசித்திர உலகைக் கற்பனையின் வழியே சிருஷ்டித்துக் கொண்டு அதற்குள்ளாகவே அவ்வப்போது சஞ்சரிக்கும் பழக்கத்தை எப்போதிலிருந்து ஆரம்பித்தேன் என சரியாக சொல்லத் தெரியவில்லை. அம்மாய உலகு தன் வெளிகள் தோறும் எனக்குப் பிடித்ததான பல நூறு உணர்வுகளையும் காட்சிகளையும் உருவமற்ற அந்தர நிலையில் அசைய விட்டிருந்தது . மேலும் வாய்க்கும் போதெல்லாம் அது என்னை உள்ளீர்த்துக் கொள்ளவும் விரும்பியது ..... அந்த மாய வெளிகளினூடே நான் மீட்டெடுத்ததும் என்னை நெருடிக் கொண்டிருப்பதுமான ஒரு சில காட்சிகளையே நான் சிறுகதையாக்க முயற்சித்து இருப்பதாய் பின்னாளில் என்னால் உணர முடிந்தது."
'என்னுரையின் ' அழகியலை அவரது எழுத்தும் பிரதிபலிக்கும்.
தமிழறிவும் ஆங்கில இலக்கிய அறிவும் ஒருங்கே அமைந்த இவரது கதாபாத்திரங்களில் சிலர் அன்றாட வாழ்வில் நாம் கவனிக்காது கடந்து செல்லக்கூடிய அளவில் மிகமிக எளிமையானவர்கள். எனினும் சிலர் அறிவுஜீவிகளாகவும் உயர்ரசனைக்கு உரியவர்களாகவும் உள்ளனர். இவர்களில் அநேகர் திண்மை நிறைந்த பெண்கள். ஆனால் பலவீனமாகித் தாக்குதலை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் தமது தந்திரத்தையோ சாகசத்தையோ அன்றி மனச்சிதறலையோ வெளிக்காட்டவும் தயங்காதவர்கள்.
இந்நூலுக்கு முன்னுரையாக வாசிப்புக் குறிப்பினை வழங்கிய பேரா.அ. ராமசாமி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்.
"வடிவச் செழுமையும் மொழிப்பயன்பாடும் கைபிடித்துக் காட்டும் காட்சிச் சித்திரங்களும் கொண்ட பிரமிளாவின் கதைகள் வாசிப்புத் திளைப்பைத் தரும் உறுதியான கதைகள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.... உடல்வலிமையை விடவும் புத்திக் கூர்மையைப் பயன்படுத்தும் பெண்களை கதைக்குள் உயிர்ப்பித்துக் காட்டியுள்ளார்."
பல பெண் எழுத்தாளர்கள் வெளிப்படுத்தத் தயங்கும் பெண்உள்ளம் சார்ந்த பாலியல் உணர்வுகளை இவர் தற்துணிவுடன் வெளிப்படுத்தி உள்ளார். ஒரு ஆண் எழுத்தாளர் , பெண்ணின் உணர்வுகளைப் பற்றி எதனை எழுதினாலும், அதனை எழுத்தாள மேதமையின் கீழ் வகைப்படுத்தி சர்வசாதாரணமாகக் கடந்து செல்லும் இலக்கிய உலகம், ஒரு பெண் எழுதும் போது வித்தியாசமான அசூயை மிகுந்த பார்வையைக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் சில சந்தர்ப்பங்களை முன்னிட்டு ஒரு வாசகராகவும் பெண்ணாகவும் எனக்குள்ளும் உண்டு. அதனால் பெண்ணுள்ளமும் உடல்சார்ந்த வலிகளும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் ஒரு பெண் எழுத்தாளரினால் வெளிப்படுத்தப் படாமலே போகின்றன. முக்கியமாக காதல் காமம் பற்றிய அக உணர்வுகள் மற்றும் பாலியல் ரீதியான சீண்டல்களை ஒரு பெண்ணிணால் துணிவுடனும் அப்பட்டமாகவும் எழுத்துரீதியாக வெளிப்படுத்த முடிவதில்லை என்பது வருந்தத் தக்கது.
'விரும்பித் தொலையும் ஒரு காடு' , பிரமிளாவின் அண்மைய சிறுகதைத் தொகுதி. தமது ஆளுமையை, மனத்திண்மையை வெளிப்படுத்தும் பெண்கள் பலர் இதில் பாத்திர வார்ப்புகளாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளார்கள். இங்கு தலைப்புக்குரிய கதையான 'விரும்பித் தொலையும் ஒரு காடு' என்ற என்ற கதை குறியீட்டு ரீதியாக இல்லறத்தைக் குறிப்பது . இத் தலைப்பின் தன்மையை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் சிக்கலான கதாபாத்திரத்தினைக் கொண்ட 'ஜில் பிராட்லி' தொகுப்பின் முதலாவது கதை. இந்தக் கதையினூடாகப் பிரமிளா எடுத்தாண்ட சம்பவங்கள் பரந்த வியாபகத்தையும் தகவல்சார் அறிதலையும் தருபவை.
- எழுத்தாளர் பிரமிளா பிரதீபன் -
சிவனேசன் என்னும் முகப்புத்தக நண்பனுடன் வீடியோ இணைப்பிலான , ஆங்கில உரையாடலுடன் கதை ஆரம்பமாகிறது. சர்ரியலிஸ ஓவியங்களில் ஆழ்ந்த ஈர்ப்பினைக் கொண்டவளும் ஸ்பெயினைச் நாட்டைச் சேர்ந்த ஓவியர் சல்வடோர் டாலி (Salvador Dali) யின் அடிமன வெளிப்பாட்டியல் ஓவியங்களின் பெருங்காதலியும், தானே புகழ்மிக்க ஓவியரும் ஆன அனோமா முணவீர என்ற சிங்களப் பெண் , தன் பெயரை 'ஜில் பிராட்லி' எனப் பாவனையில் கொள்கிறாள். தமிழர்களை உள்ளூர விரும்புகின்ற புரிந்துணர்வு கொண்ட பெரும்பான்மை இனப் பெண் அவள். கொஞ்சும் தமிழும் , கொஞ்சம் கதைப்பாள்.
பெயர் மாற்றத்தின் காரணம் என்ன என அவளது மன ஈர்ப்புக்குரிய தற்போதைய நண்பனும் கவிஞனுமான சிவனேசன் கேட்கிறான். அவளின் மேல் காதல் உணர்வுகளையும் ஓவியத் திறமையில் அதீத மதிப்பும் வியப்பும் கொண்டவன்.
'ஜில்' என்று அழைத்தது, அவளது முன்னைய வடபுலத்து தமிழ்க் காதலனான விபாகரன் . பிராட்லி என்பது , தான் மிக விரும்பும் ஓவியர் சல்வடோர் டாலியினை நினைவுறுத்தும் முகமான பெயரின் ஒரு பகுதி. விபாகரன் தமிழன் என்பதால் இனத்துவேசம் கொண்ட தந்தை மூர்க்கமாக மறுத்து தன்னைப் போலவே தமிழர்களை வெறுக்கும் ஒரு சிங்களவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அதனைத் தெரிந்தபின் விபாகரன் இயக்கத்தில் இணைந்து இறுதி யுத்தத்தில் இறந்தான். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக நான் அவனுடன் தான்மானசீகமாக வாழ்கிறேன் எனக் கூறுகிறாள்.
தனது மானசீக காதல் வாழ்வைக் கூறும்போது , இறுதியுத்த வெற்றியின் பின் பெரும்பான்மை இன மக்கள் அதனை 'வீதியெங்கும் வெடிகொளுத்தி பாற்சோறுண்டு 'தெமலு பராதய்...தெமலு பராதய்' ' எனக் கோஷமிட்டுத் தலைவரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அந்த யுத்தத்தில் விபாகரன் இறந்திருப்பான் என்ற தனது உயிர் ஊசலாட்டத்தை இவள் மறைத்து நின்றது இனத்துவேசம் கொண்ட அவளது கணவனுக்குத் தெரியவர , அவன் மிருகமாகித் துன்புறுத்துகிறான். அதனால் கணவனைப் பிரிகிறாள்.
போராட்டங்கள் நிறைந்த தன் வாழ்வையும் மன உணர்வுகளையும் மற்றுமோர் பிரபல பெண் ஓவியரான மெக்சிகோவைச் சேர்ந்த பிரைடா காலோ ( Frida Kahlo ) வின் நிலைக்கு ஒப்பிடுகிறாள். ஒரு ஓவியராக உருமாறாமல் போயிருந்தால் மனநல விடுதியில் சேர்க்கப்பட்டிருப்பேன் என பிரைடா காலோ கூறியதையும் நினைவில் கொள்கிறாள்.
இடையில் திடீரென்று விபாகரன் நேற்று என்னுடன் நிஜமாகவே பேசினான் தெரியுமா....என்கிறாள்.
இனிவரும் பகுதி இப்படைப்பின் உச்சக்கட்ட உணர்வு.
விபாகரன் உயிருடன் அமெரிக்காவில் தான் இருக்கிறான் என்பதும் அவன் இன்னும் இருதினங்களில் இலங்கை வருகிறான் என்பதும் அவளுக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.
கற்பனையை எல்லாத் தடைகளில் இருந்தும் விடுவித்து , அவனுடன் புணர்தல் வரையான மாயவாழ்வினை வாழ்ந்ததால் அதிலிருந்து மீளுதல் சுலபமில்லை. நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறாள். இந்த நிலையில் விபாகரனது வருகையை எண்ணி மனக்குழப்பம் மிகுந்து , மது அருந்தி மயக்கநிலையில் இருக்கும் அவளைப்பற்றி சிவனேசன் பயம் கொள்கிறான்.
உரையாடலின் இடையில் ஓவியர் வான்கோ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா என்கிறாள். வான்கோ அற்புதமான இரசனையுடன் தற்கொலை செய்து கொண்டார். வான்கோ பேராசையுடன் ஓவியம் வரையத் தொடங்கிய போது தன்னை அறியாமலே சாவின் நிழல்கள் தன்மீது ஊர்ந்து செல்வதை உணர்ந்தாராம். பெருமூச்சிட்டபடி சில அடிகள் நடந்து சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டாராம். வடியும் இரத்தத்தோடு ஆசையுடன் ஓவியம் வரையும் இடத்திற்கே வந்து சேர்ந்தாராம். இப்படி வான்கோவைப் போல மரணத்தை இரசனையுடன் அனுபவித்துப் பெறுவது கடினமில்லையா என்கிறாள். 'துப்பாக்கியால் மட்டும்தான் மரணத்தைத் தர முடியுமா என்ன' எனச் சொல்லி சத்தமாய் சிரிக்கிறாள். தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
இந்தக் கதையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை அனுமானிப்பது சிரமமல்ல.
ஓவியர்கள் உட்பட கலாரசனையில் மூழ்கியவர்களில் அனேகர் தமக்குத்தாமே சிருஷ்டித்துக் கொண்ட மாய உலகொன்றில் வாழ்பவர்கள். பலர் ஓவியர் வான் கோ ( Vinsent Van Gogh) போல வறுமையைக் கூடவே கொண்டவர்கள். டச்சு ஓவியரான இவர் வறுமை மற்றும் மனநோயினால் பீடிக்கப்பட்டு 37 வயதில் தற்கொலை செய்து கொண்டவர்.
நுண்ணுணர்வுகள் கொண்ட கலைஞர்கள் பலரின் வாழ்க்கை துயரம் சூழ்ந்தது. ஜில் பிராட்லியும் அவ்வாறே. விபாகரன் உயிருடன் இருக்கிறான் என்பதே அந்த மாய உலகின் கற்பனையின் பாற்பட்டதா என்ற ஐயம் உண்டு.
இந்தக் கதையில் இருந்தும் இத்தொகுப்பின் வேறுசில கதைகளில் இருந்தும், வாசகராக நான் ரசித்ததும் உணர்ந்ததும் தேடலில் அறிந்து வியந்ததும் பலபல.
அண்மைக் காலத்தில் வெளிவந்த பிரமிளாவின் சிறுகதைகள் பலவற்றில் , வாசகர் அதிகம் அறிந்திராத நவீன களங்களும் புதிய தகவல்களும் சிக்கலான உணர்வுகளும் எடுத்தாளப் பட்டிருக்கின்றன.
இவரின் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க கதையான 'கமீலே டொன்சியுக்ஸின் ஜோடித் தோடுகள்', நிஜ வரலாற்றுடன் யதார்த்த வாழ்வின் கதாபாத்திரம் ஒன்றினை வறுமை நிலை எனும் பொதுத் தன்மையால் இணைப்பது .
புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியரான க்ளாட் மோனேயின் ( Claude Monet)முதல் மனைவியும் பெரும்பாலான அவரது ஓவியங்களின் மாடலும் ஆன கமீலே டொன்சியுக்ஸ் (Camille Doncieux ) வறுமையில் வாழ்ந்து மடிந்தவர். இவர் மாடலாகத் தோற்றம் தந்த 'பச்சை ஆடை உடுத்திய பெண்' மிகப் பிரபலமான ஓவியம்.
கமிலே டொன்சியுக்ஸ்ஸின் வறுமைநிலையை , சிறுமி மயிலாவினதும் தாயினதும் வறுமையின் இயலாமை நிறைந்த பாத்திரப் படைப்பொன்றினுள் ஒரு ஜோடிப் 'பேசும் தோடுகள்' மூலமாக மிக விநோதமான முறையில் இணைத்து இருக்கிறார்.
உண்மையில் ஓவியர்களின் வரலாறு அறியாத முதல் வாசிப்பில் லயிக்காத மனம் வரலாறு அறிந்தபின் , வேறோர் பரிமாணம் கொண்டதாயிற்று.
நான்கு பிரபல ஓவியர்களின் வரலாற்றைத் தேடி அறிந்தது இத்தொகுப்பின் இரு கதைகளில் இருந்து நான் பெற்ற அனுபவங்களில் மிக முக்கியமானது .
அடுத்து இறுதிப் போரின் இறுதிநாளில் பெரும்பான்மை இனத்தவரின் கொண்டாட்ட உணர்வு பற்றிய ஜில் பிராட்லியின் விபரிப்புகள்.
அந்த இறுதிநாளில் அவசர காரியமாகப் புத்தளம் நகரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நான் இந்தக் கொண்டாட்டத்தின் தீவிரத்தை நேரடியாகக் காண நேர்ந்த போது மனது வலித்தது. அந்த உணர்வினை மிகச் சரியாக ஜில்பிராட்லியின் உணர்வாக பிரமிளா எழுத்தில் கொண்டு வந்துள்ளார்.
இறுதிப் போரின் பின் பெரும்பான்மை இனமக்களின் மேலாதிக்க உணர்வும் வன்மமும் அதிகரித்திருப்பது பற்றிக் கதையின் உரையாடல் மூலம் சொல்லப்படும் உணர்வு மிக யதார்த்தமானது. யுத்தத்தின் பின்விளைவான இந்த மனநிலை அவலமானதும் கூட.
அதேசமயம் தமிழர்களை மிக நெருங்கிய நண்பர்களாகக் கொண்டு இனவன்முறை காலங்களில் உயிர்காத்த தோழமைகள் பல இதே சமூகத்தில் உண்டென்பது மிக ஆறுதலானது. அவ்வாறு, நான் 1977 இலும் எனது சகோதரர் 1983 இலும் காக்கப்பட்டோம் என்பதை நன்றியுடன் நினைவு கூர்தல் இங்கு அவசியமாகிறது. தமிழர்களை விரும்பும் குணாதிசயம் கொண்ட ஒரு பெண்ணாக சிங்கள மக்களின் சார்பில் ஜில் பிராட்லியின் பரந்த மனம் பாராட்டத் தக்கது. சமூக ஒற்றுமைக்கு அவசியமானது. தனிப்பட்ட ரீதியில் , இன்றும் எமக்கு மிக நெருங்கிய வட்டத்தில் சிங்கள இஸ்லாமிய நட்புகள் முதற்சிலருள் உண்டு.
'அது புத்தனின் சிசுவல்ல' கதையில் யோகதீட்சை தியானம் குருபக்தி பற்றிய அறிதல்களுடன் கெளதம புத்தரின் மனைவி யசோதாவின் பக்கமான மனநிலை , நீலியில் ஒரு புராணக்கதை, ஒரு அரசமரமும் சில வெளவால்களும் கதையில் வெளிப்படும் குறியீடுகள் படிமங்கள் குறிக்கும் உண்மைகள் என பிரமிப்புகள் தொடர்கதையாகின்றன.
இதுபோன்ற நிஜவரலாறுகளைக் கதைக்குள்ளும் கதைமாந்தரின் குணாதிசயங்களுடனும் படைப்பாசிரியர் பொருத்தும் இடங்களில் அவரது கற்பனையின் வியாபகம் பெருவியப்பைத் தருகிறது .
சாதாரண மனிதர்களைக் கதைமாந்தராகக் கொண்ட படைப்புகளிலும் பெண்ணின் பார்வையில் அகஉணர்வுகள் அற்புதமாக வெளிப்படுத்தப் படுகின்றன.
பகற்கனவு , ஓரிரவு , அல்லிராணி கதைகள் , அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கக் கூடிய சாதாரண மனிதர்கள். பெண்மனங்களின் மென்கோணங்களையும் , எளிமையான எதிர்பார்ப்புகளையும் உணராத ஆண்மனது பற்றி இக்கதைகள் விரிவாகப் பேசுகின்றன. உரப்புழுக்கள் விளிம்புநிலைப் பெண்களின் அன்றாட வாழ்வியல் மற்றும் வேலைத்தலத்தில் பெண்ணின் உடலை வேதனத்துக்காகப் பேரம் பேசும் ஆண்களின் மனநிலை பற்றியது.
ஆண்கள் ஒரு பாத்திரமாக பல கதைகளில் வெளிப்பட்டாலும், இச் சிறுகதைத் தொகுதியில் 'மாட்டியா' என்னும் ஒருகதை மட்டுமே ஆணை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு வித்தியாசமான சர்ச்சைக்குரிய கோணத்தில் ஆண்மனதின் விகார உணர்வு பற்றிப் பேசுகிறது. ஆனால் அதுவும் 'மாட்டியா' எனும் ஆணின் கைகூடாத திருமண ஏக்கம் பற்றியது .
வியர்வையின் விட்டகலாத மணம் கொண்ட அருவருப்பானவன். அவலட்சண உருவம், . இவன்தான் மாட்டியா. ஐந்து பெண்களால் மறுக்கப்படுகிறான். விரும்புவதாகச் சொன்ன குருட்டுப் பெண்ணும் இவன் பலவந்தமாக அவளை நெருங்கிய போது ''நாத்தம் புடிச்ச மூதேசி என்னய விடுடா'' என வெறுத்தோடுகிறாள். ஒரு தெரு நாய்க்குக் கூட பெண்நாயுடன் சேரும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, தனக்குப் பெண்ணொருத்தி கிடைக்காத ஏக்கம் மாட்டியாவை வருத்துகிறது.அந்த நாயாகத் தன்னை உருவகித்து திருப்தி கொள்ளும் மன அவலத்துக்கு ஆளாகிறான்.
இலக்கியப் படைப்பொன்றின் கரு உணர்வு சார்ந்தோ வரலாறு சார்ந்தோ அறிவுநிலை சார்ந்தோ படைப்பாளரினால் வெளிப்படுத்தப்படும் போது அது இலக்கிய உலகில் சரியான புரிதலுடன் நியாயப் படுத்தப்பட வேண்டும். முக்கியமாக ஆசிரியர்களாக வைத்தியர்களாகப் பணிபுரியும் எழுத்தாளர்கள் தமது சேவைக்காலத்தில் , ஏனையோரின் அனுபவங்களை உணரும் , உள்வாங்கும் சந்தர்ப்பங்களை மிக அதிகம் கொண்டவர்கள். எண்ணற்ற இரகசியங்களை மனக்கிடங்கினுள் சேமித்து வைப்பவர்கள். மிகக் குறுகிய கால ஆசிரியப்பணியும் , நீண்டகால மருத்துவ சேவையும் எனக்குள்ளும் பல உண்மைகளை விதைத்திருக்கிறது. அல்லிராணிகளின் அவலங்களையும் மாட்டியாக்களின் ஏக்கங்களையும் வைத்திய சேவையில் சந்திக்க நேர்வது வியப்பானதல்ல. யுத்தம் இடம்பெயர்வு புலம்பெயர்வு எனும் அவலங்களிலும், போலிச்சாமியார்களின் பிடியிலும் சிக்குண்ட நமது வாழ்வியலிலும் 'அது புத்தனின் சிசுவல்ல' என்பதாக நிஜத்தில் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் பல உள்ளன.
'மாட்டியா'வைத் தவிர ஏனைய கதைகள் பல , பொதுவாக இல்லறவாழ்வெனும் 'விரும்பித் தொலையும் ஒரு காட்டில்' , பெண்களின் மெல்லுணர்வுகளை புரிந்துணர்வுடன் அணுகாத ஆண்மனது பற்றியே பேசுகின்றன. தலைப்புக்குரிய கதையான 'விரும்பித் தொலையும் ஒரு காடு' ஆழமான அர்த்தம் கொண்டது. ஏனெனில் இல்லறத்தை பொதுவாக அனைவரும் விரும்பித்தான் ஏற்கிறார்கள்.
ஆனால் பெண்ணின் விருப்புவெறுப்புகள் வெளிக்காட்ட முடியாத மௌனமாகவே பெரும்பாலும் கழிகின்றன என்ற ஆழமான அகக்கூவலை இச்சிறுகதையில் தன்னுடைய புத்தம்புது மொழிநடையில் கூறுகிறார். குறியீட்டுப் பாணியில் அமைந்த படைப்பு. அதில் திருமணத்திற்குத் தயாராக நிற்கும் ஒரு பெண்ணின் கூற்றாக ....
"வாழ்க்கைக்கு ஆயிரமாயிரம் கால்கள் இருக்கும். நாம தான் திச மாறாம நடக்க பழகிக்கணும்மா’' என்றபடி வழமைக்கு மாறாக அம்மா கண் கலங்கிய போது, சொல்லிவிட நினைக்கும் எதையோ ஒன்றை அவள் சொல்லாமல் விட்டிருக்கிறாள் என்றே தோன்றியது... காடு என்னைப் பத்திரமாய் அழைத்துச்சென்றது. வழிகாட்டியது. சமயங்களில் ஆச்சரியப்படுத்தியது. நான் தொலைய வேண்டிய இடத்தையும், திசையினையும் கச்சிதமாய் திட்டமிட்டு காட்டித்தந்தது... எல்லாமே என் விருப்பதின் பேரில் நடப்பது போன்றதான பிரமையினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது... காடெங்குமான வாசனையையும் அதிகாரத் தொனிகளையும் சில காலங்களின் பிறகே உள்வாங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தேன்... பெண்களின் இந்த பயணம் மிக பாதுகாப்பானதாய் தென்பட்டாலும் உள்ளுக்குள்ளேயான தழும்புகளையும் சீழ்வடியும் புண்களையும் பற்றி யாருமே பேசத் துணியவில்லை. அவர்களின் இலக்கு நோக்கிய நடை பற்றியதான புகழ்தலை காற்றினூடு பரப்பி பெண்களுக்கு மரியாதை செய்யவே எல்லோரும் விரும்பினார்கள்... அவை பல நூற்றாண்டுகால உடைத்தெறிய முடியா தடைசுவர்கள் என இனங்கண்டு ஸ்தம்பித்து போகிறேன். மறுநொடி, நான் மிக ஆபத்தான காடொன்றினுள்ளேயே மாட்டிக் கொண்டிருப்பதாகவும் விரும்பினாலும் என்னால் வெளியே வர முடியாதெனவும் தவிர இது நிச்சயமாய் கனவு அல்ல. என்னால் செய்யத்தக்கதான ஆகக்கூடிய செயல் மௌனமாயிருப்பது மாத்திரம் தானே!..."
எப்பேர்ப்பட்ட வலிமிகுந்த வரிகள். இந்தக் காட்டுக்குள் சென்று மீளமுடியாமலும், வாழமுடியாமலும் தமது மனதை அல்லது உயிரை விலையாகக் கொடுத்த பெண்கள்தான் எத்தனை பேர். ஆனால் புரிந்துணர்வும் சமத்துவ நோக்கும் கொண்ட ஒரு கணவன் அமைந்து விட்டால் இல்லறத்தை விட பேரின்பம் தருவது வேறொன்றும் இருக்க முடியாதென்பதும் அதே அளவு உண்மையே.
அண்மையில் வெளியாகிய 'அன்றலர்ந்த மலர்கள்' என்னும் திறனாய்வு நூலில் பிரமிளா பற்றிய புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் அவர்களின் கூற்றினை இவ்விடத்தில் மிகப் பொருத்தமானதாகக் கொள்ளலாம்.
'தனித்துவம் மிக்க தன் மொழியாடலாலும் காட்சிப்படுத்தலாலும் அழகியல் உச்சங்களாலும் , தனக்கான அந்தக் கற்பனை வெளிக்குள் விசித்திர உலகினுள் வாசகரையும் உடனழைத்துச் சென்று அவர்களுக்கும் அந்த அற்புதமான உணர்வினைத் தொற்ற வைப்பதில் பிரமிளா பெற்றுள்ள வெற்றியே, தமிழ்ப் புனைகதை வெளியில் அடுத்தகட்ட நகர்விற்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது. பெண்ணின் குரலாகவே இவரின் பெரும்பாலான கதைகள் வெளிப்பட்டிருப்பினும் அவை எழுப்பும் ஒலியானது முன்னைய எழுத்தாளர்களை விட முற்றிலும் வேறுபட்டது' என்கிறார். அவரது கூற்று காத்திரமானது.
புதிய வானம் புதிய பூமி புதிய எழுத்து நடை என சிறப்பாகத் தொடருங்கள் பிரமிளா. உங்கள் படைப்புகள் இலக்கிய உலகில் உச்சங்களைத் தொடட்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.