கனடாத் தமிழ் இலக்கியமும் , ஆரம்ப காலத் தமிழ்ச் சஞ்சிகைகளும், 'நிழல்' சஞ்சிகையின் முக்கியத்துவமும் ... - வ.ந.கிரிதரன் -
கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
நானறிந்தவரை கனடாவில் வெளியான சஞ்சிகைகளைக் கையெழுத்துச் சஞ்சிகைகள், அச்சு வடிவில் வெளியான சஞ்சிகைகள், இரண்டையும் உள்ளடக்கி, வெட்டி ஒட்டல்களுடன் வெளியான சஞ்சிகைகள் எனப் பிரிக்கலாமென்று கருதுகின்றேன்.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கனடாக் கிளை மொன்ரியாலிலிருந்து வெளியிட்ட 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகை 15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. ஓரிரு இதழ்களில் பத்திரிகைச் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தாலும், சஞ்சிகை பெரும்பாலும் கையெழுத்துச் சஞ்சிகையாகவே வெளிவந்தது. எனது மண்ணின் குரல் நாவல், கவிதைகள் சில, கட்டுரைகள் சிலவும் இச்சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. ரவி அமிர்தன், கோமகன், செங்கோடன் எனப் பலரின் படைப்புகளும் இச்சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. அடிப்படையில் இது ஒரு போராட்ட அமைப்பின் சஞ்சிகை என்றாலும் தமிழ் இலக்கியத்துக்கும் நாவல், கவிதை, கட்டுரை & கேலிச்சித்திரமெனப் பங்களிப்பு செய்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.
வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு வெளியான கையெழுத்துச் சஞ்சிகை 'குரல்' . செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம் ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான சஞ்சிகை 'குரல்'.