எழுத்தாளர் குகன் சங்கரப்பிள்ளை 'தாய்வீடு' பத்திரிகை - சஞ்சிகையில் அறிவியற் கட்டுரைகள் எழுதி வருபவர். மார்ச் மாதத் தாய்வீடு இதழில் இவரது 'ஜாதி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனும் தனது முகநூற் பக்கத்தில் குறிப்பிட்டுக் கருத்துகள் கூறியிருந்தார். குகன் சங்கரப்பிள்ளையின் 'ஜாதி' என்னும் இக்கட்டுரை முக்கியமான கட்டுரை. தலைப்பு சிறிது ஒட்டாமலிருக்கின்றது. நாம் நடைமுறையில் , பேச்சு வழக்கில் சாதி என்றுதான் குறிப்பிடுவது வழக்கம். சாதி என்றே கட்டுரையின் தலைப்பினை வைத்திருக்கலாம்.
- குகன் சங்கரப்பிள்ளை -
நண்பர் குகன் சங்கரப்பிள்ளையினை எண்பதுகளிலிருந்து நானறிவேன். எண்பதுகளின் ஆரம்பத்தில் மொன்ரியாலில் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்த இளைஞர்களில் ஒருவராக, சமூக அரசியற் செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவரிருந்தார். அப்போதிருந்து அறிவேன். அக்கையெழுத்துச் சஞ்சிகையில்தான் எனது 'மண்ணின் குரல்' நாவல் தொடராக முதலில் வெளியானது. அதில் வந்த மண்ணின் குரல் நாவல், கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு பின்னர் நூலுருப்பெற்றது.
எப்பொழுது மெல்லிய புன்முறுவல் பூக்கும் முகத்துக்குச் சொந்தக்காரர். ஒருபோதும் அவர் முகத்தில் கடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாவங்களை நான் கண்டதேயில்லை. இலத்திரனியற்துரையில் கல்வித்தகமை பெற்றவர். அத்துறையில் பணியாற்றி வருபவர்.
'ஜாதி' என்னும் தலைப்பிலான இக்கட்டுரை ஆய்வுக்கட்டுரை போன்றில்லாமல், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விபரிப்புகளை உள்ளடக்கிய கட்டுரையாக அமைந்திருப்பதால் , வாசிப்பவர்களை ஒரு கணம் அதிர வைக்கின்றது. சிந்திக்கவும் வைக்கின்றது. இவர் குறிப்பிட்டிருக்கும் Caste: The Origins of Our Discontents என்னு நூலை எழுதிய Isabel Wilkerson முக்கியமான அமெரிக்க ஆபிரிக்க இனத்து ஊடகவியலாளர் , எழுத்தாளர் இவர். முதன் முதலில் புலியட்சர் பரிசினைப்பெற்ற அமெரிக்க - ஆபிரிக்கர் இவர். உலகத்து மானுடர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், கடவுளை நோக்கி வினவுதல் ஆகியவை இக்கட்டுரையின் ஏனைய சிறப்பம்சங்கள். கட்டுரையைக் கேட்பவர்களுக்குக் கொண்டு செல்வதில் ஆனந்தராணி பாலேந்திராவின் குரலும் சிறப்பாக உதவுகின்றது.