முன்னுரைதிருமாலுக்கு ஆட்பட நினைத்தமையாலும், திருமாலால் ஆட்கொள்ளப்- பட்டமையாலும் ஆண்டாள் என்பர். ஆடித் திங்கள் பூர நட்சத்திரத்தில் தோன்றிய இவர் பூமகள் அம்சம். பின்னர் கோதை நாச்சியார் எனவும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனவும், பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி எனவும் போற்றப்படுபவர். மார்கழி மாதத்தில் திருமாலை அடையும் வகையில் ஆண்டாளின் வழிபாடும் அமைகின்றது. இவ்வகையில் பாவை நோன்பு
பாவைக்குச் செய்யும் கிரிசைகள் (நாச்.திரு.2)
பாவைக்குச் சாற்றி நீராடினால் (திரு.பா.3)
பிள்ளைகளெல்லோரும் பாவைக் களம்புக்கார் (திரு.பா.13)
பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழங்காலத் தமிழகத்தில் நடைபெற்ற நோன்புகளில் 'மார்கழி நோன்பும்' ஒன்று. திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் பொய்கைக் கரைக்குச் சென்று நீராடி மண்ணால் செய்த பாவையை வைத்து வழிபாடு நடத்திப்பாடுவது ‘பாவைப் பாட்டாகும்.' திருப்பாவையில் மூன்று இடங்களில் மட்டுமே "பாவை நோன்பு" நோற்றதற்கான குறிப்பு காணப்படுகிறது.
திருவாதிரையும், மார்கழி நோன்பும்
திருவாதிரைத் திருநாளின் போது, தற்போது நடைபெறும் வழக்கங்கள் 'திருப்பாவை' காலத்திலேயே ஆண்டாளால் பின்பற்றப்பட்ட டது. மார்கழி மாதத்தில் நீராடல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
”நீராடப் போது வீர்” (திரு.பா.1)
”நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்" (திரு.பா.3)
"நீராடுவான், மேலையார் செய்வனகள்” (திரு.பா.26)
"குள்ளக் குளிர குளிர்ந்து நீராடாதே” (திரு.பா.13)
என்ற பாடல் வாயிலாக அறியமுடிகிறது.
மார்கழி நீராடும் போது, தண்ணீரில் பெருஞ்சபதம் செய்து கொண்டு மூழ்குவதை,
”மெய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி” (திருவெம்.பா.11)
என்ற பாடல் வாயிலாகச் சுட்டப்படுகிறது.
திருப்பாவையின் மேன்மை
ஸ்ரீவேதாந்த தேசிகர் திருப்பாவையை "உபநிடதம்" என்று கூறுவார். திருமாலே முழுமுதற் பொருள், மற்ற பொருட்களெல்லாம் அவனுடைய தனி உடம்பு, அந்தக் கார்மேனிச் செங்கண்ணே தீயோர்களுக்குக் கதிரவனைப் போலவும், நல்லோர்களுக்கு மதியைப் போன்றும் இருக்கும். எல்லா இன்பங்களையும் தருபவன் அவனே அவனுக்குப் படிவதே நமக்குப் புகழ். அவனைப் பணிவது தான் 'சரணாகதித் தத்துவத்தின் அடிப்படையாகும்.
ஆண்டாள் அருளிய செயல்கள்
ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பிரபந்தங்களைப் பாடியுள்ளார். திருப்பாவை முப்பது பாசுரங்களும், நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களும் கொண்டது. இவை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இசைப்பாத் தொகுதிகளாக முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆண்டாளின் இறைபக்தி
பார்க்கும் காயும், கனியும் திருமாலாகவே ஆண்டாளுக்குக் காட்சி தருகின்றன. கண்ணன் ஊதும் சங்கைப் பார்த்து ஆண்டாள் காதலால் புலம்பும் பாடல் சங்க இலக்கிய அகப்பாடல்களை விஞ்சி நிற்கிறது.
”கற்பூரம் நாறுமோ ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண்சங்கே" (நாச்.திரு. 64)
என்ற பாடல் வாயிலாக விளக்கப்படுகிறது.
ஆண்டாள் கண்ணனிடம் கொண்ட காதல் உள்ளத்தை, கனவு உள்ளத்தை நாச்சியார் திருமொழி எடுத்துரைக்கும். திருமணத்தில் அம்மி மிதிக்கும் சடங்கை முதன்முதலில் கூறுபவர் ஆண்டாளே ஆவார். இறைவனின் அருள் வெள்ளத்தில் நீராடுவது எளிதன்று என்று கட்டுவதை அறியமுடிகிறது.
பெருமானைத் தொழுவதால் ஏற்படும் பயன்கள்
ஆண்டாள் கண்ணனை "மாயன், வடமதுரை மைந்தன், தூயப்பெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு, தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரன்" என்று பலவாறாக அழைக்கிறாள். திருமாலைத் துதிப்பதனால் வரும் பயன்கள் என ஆண்டாள் கூறுவது,
"தூயோமாய் வந்து நாம் தூமலர் துவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்” (திரு.பா.5)
என்ற பாடல் வாயிலாகக் கூறப்படுகிறது.
ஆண்டாள் - துயிலுணர்த்திய முறை
திருப்பாவையில் அம்பரமே தண்ணீரே எனத் தொடங்கும் 17-வது பாசுரத்தில், தனது தோழிமார்களுடன் நந்தகோபன் அரண்மனைக்கு வரும்ஆண்டாள் முதலில் நந்தகோபனையும் இரண்டாவது யசோதைப் பிராட்டியாரையும்,மூன்றாவது கண்ணபிரானையும், நான்காவது பலதேவரையும் துயிலெழுப்புகிறாள்.இதனை,
”சொம்பொற் கழலடிச் செல்வா பலதேவா,
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"(திரு.பா.17)
என்று குறிக்கின்றார். முதலில் நப்பின்னை பிராட்டியை எழுப்பிய பின்னர் தான் கண்ணனை எழுப்புவது முறை என்பதை உணர்ந்த பெண்கள் முதலில் நப்பின்னையைத் துயில் எழுப்புகிறார்கள்.
ஆண்டாளின் திருப்பள்ளியெழுச்சி
ஆழ்வார் பன்னிருவரில் தொண்ரடிப்பொடியாழ்வார் மட்டுமே திருப்பள்ளியெழுச்சிப் பாடியுள்ளார். பின்னர் ஆண்டாள் திருப்பாவையிலும், கண்ணனைத் துயிலுணர்த்தும் பாடல்களும் திருப்பள்ளியெழுச்சி பாடலைப் போலவே பாடியுள்ளார்.
"முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய், செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்' ”அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய்” என்று குறிப்பிடுகிறார்.
முடிவுரை
வைணவ இலக்கியங்கள் இன்று பெருகிக் கொண்டே வருகிறது. ஆண்டாள் திருமால் மீது கொண்ட பற்றினால் இறைவனைத் தன் காதலனாக நினைத்துக் கொண்டே நாச்சியார் திருமொழி, திருப்பாவைப் போன்ற நூல்களைப் பாடினார். வைணவ சித்தாந்தங்கள் முழுவதும் உள்ளடக்கிய இப்பாசுரத்தினை நாமும் தினந்தோறும் பாடி மகிழ்ந்து நல்வழி பெறவேண்டும்.
துணை நின்ற நூல்கள்
அன்பரசு, திருப்பாவை,நர்மதா பதிப்பகம், சென்னை.
கதிர் முருகு, நாச்சியார் திருமொழி,கௌரா பதிப்பகம், சென்னை.
ஸ்ரீ ராம், திருவெம்பாவை,அருணா பதிப்பகம் சென்னை.
அருணாசலம், வைணவ சமயம்,பாரி புத்தக நிலையம், சென்னை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.