பதிவுகளில் அன்று: ஓவியர் ஜீவன் (நந்தா கந்தசாமி) பற்றிய அறிமுகமும், அவரது சுயதரிசனமும்!
- பதிவுகள் இணைய இதழில் வெளியான ஓவியர் ஜீவன் (நந்தா கந்தசாமி) பற்றிய அறிமுகமும், அவரது சுயதரிசனமும் ஒருங்குறியில் 'பதிவுகளில் அன்று' க்காக ஆவணப்படுத்தப்படுகின்றன. -
பதிவுகள், செப்டம்பர் 2003 இதழ் 45
ஓவியர் ஜீவன் (நந்தா கந்தசாமி) ஓர் அறிமுகம்
கனடாவைப் பொறுத்த வரையில் ஓவியர் ஜீவனுக்கு அறிமுகம் தேவையில்லை. நன்கு அறிமுகமானவர். தற்போது கனேடிய நிறுவனமொன்றில் 'வரைகலை நிபுண'ராகப் பணிபுரிந்து வரும் ஜீவன் இலங்கையில் இருந்த காலத்தில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினைக் கற்றுக் கொண்டிருந்தவர். நாட்டு நிலைமைகள் காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் புலம்பெயர்ந்ததிலிருந்து இன்றுவரை ஓவியக் கண்காட்சிகள் பலவற்றை நம்மவர் மற்றும் கனேடிய பிரதான சமூகத்தினர் மத்தியில் அவ்வப்போது நடத்தி வருபவர். இலக்கியத்தின் கவிதை போன்ற ஏனைய துறைகளிலும் ஆர்வம் மிகுந்து ஈடுபட்டு வருபவர். இவரது ஓவியங்கள் நவீன பாணியிலமைந்தவை. ஓவியம் தவிர சிற்பத் துறையிலும் நாட்டம் மிக்க இவர் அத்துறையிலும் தன் முயற்சிகளைத் தொடர்பவர். இவரது ஓவியங்கள் மானுட துயரங்களைச் சித்திரிப்பவை.