பேராசிரியர் கா. சிவத்தம்பி ( 1932 - 2011 ) நினைவுகள்! மே 10 அன்னாரின் 90 ஆவது பிறந்த தினம் ! - முருகபூபதி -
"நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் ” எனச் சொல்லி வந்தவர்தான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவர் தமது இறுதிக்காலத்திலும், உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் அயராமல் இயங்கிய ஆளுமை.
பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்தநிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் உருவானதும் அதற்குத்தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி 1976 இல் தமிழ்நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். அச்சமயம் அங்கு விரிவுரையாளராக விருந்த எனது இனிய நண்பர் நுஃமான் அவர்களின் அறையில் தங்கியிருந்து ஆய்வரங்கு நிகழ்ச்சிகளுக்குச்சென்றேன். சிவத்தம்பியுடன் கலந்துரையாடுவதற்கு அந்த சந்தர்ப்பம் உதவியாகவிருந்தது. ஆய்வரங்குகள் முடிந்த பின்னரும் நான் யாழ்ப்பாணத்தில் நிற்கநேர்ந்தது. ஒருநாள் மாலை யாழ். பஸ்நிலையத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்பாக நின்றபொழுது - சிவத்தம்பி வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸில் வந்திறங்கினார். அவர் அன்று வேட்டி அணிந்து மெதுவாக நடந்து புத்தகக்கடைப்பக்கம் வந்தவர், அங்கு நின்ற என்னைக்கண்டுவிட்டு, “ என்னடாப்பா இன்னும் ஊருக்குத்திரும்பவில்லையா?" எனக்கேட்டார். அவரது அந்த என்னடாப்பா என்ற உரிமையும் உறவும் கலந்த குரலை 2011 இல் அவர் மறையும் வரையில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கேட்கமுடிந்தது. யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரைப்பணி மற்றும் இலக்கிய விமர்சனத்துறை சார்ந்த அயராத எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு மற்றும் வடபிரதேச பிரஜைகள் குழு, யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு முதலானவற்றில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கியதை 1983 - 1987 களில் அவதானித்திருக்கின்றேன்.